Published:Updated:

`வேட்புமனு வாபஸ் பஞ்சாயத்து!' - மணல்மேல்குடியில் மோதிக்கொண்ட தி.மு.க - அ.தி.மு.க தொண்டர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வேட்புமனு திரும்பப்பெறுவதில் தி.மு.க-அ.தி.மு.க-வினரிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர்.

தி.மு.க-அ.தி.மு.க-விடையே நடந்த மோதல்
தி.மு.க-அ.தி.மு.க-விடையே நடந்த மோதல்

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு வாபஸ் மற்றும் சின்னம் ஒதுக்குதல் நிகழ்வுகள் நேற்று நடந்தன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடி ஒன்றிய அலுவலகத்தில் இந்தப் பணிகள் நடந்தன. இதில், மஞ்சக்குடி கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க சார்பில் சமீபத்தில் அ.ம.மு.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் சேர்ந்த பரணி கார்த்திகேயன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் நாராயணன் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். பரணி கார்த்திகேயனும், நாராயணனும் ஒருகாலத்தில் நண்பர்களாக இருந்துள்ளனர்.

தி.மு.க-அ.தி.மு.க-விடையே நடந்த கோஷ்டி மோதல்
தி.மு.க-அ.தி.மு.க-விடையே நடந்த கோஷ்டி மோதல்

இந்த நிலையில், நாராயணன் தனது வேட்புமனுவைத் திரும்பப்பெற முடிவு செய்து, மணமேல்குடி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தார். அங்கு தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் இருந்தனர். நாராயணன் வாபஸ் பெறும் மனுவை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுக்க விடாமல் அ.தி.மு.க-வினர் தடுத்தனர். இதில், அந்த வேட்புமனுவை கிழித்துப் போட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு கூடியிருந்த அ.தி.மு.க-தி.மு.க இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அருகிலிருந்த நாற்காலிகளைத் தூக்கி வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இருதரப்பிலும் சேர்த்து 10 பேர் வரையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அலுவலகத்திலிருந்த அலுவலர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களை போலீஸார், மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, தேர்தல் சின்னம் ஒதுக்குதல், வாபஸ் பெறும் நிகழ்வுகள் 3 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு ஆரம்பித்து நள்ளிரவு வரையிலும் போலீஸ் பாதுகாப்போடு பணிகள் நடைபெற்றன. கடைசியில் நாராயணன் உட்பட போட்டியிட வேட்புமனு செய்திருந்த அனைவருக்கும் சின்னம் ஒதுக்கப்பட்டது.

திமுக-அதிமுகவிடையே நடந்த கோஷ்டி மோதல்
திமுக-அதிமுகவிடையே நடந்த கோஷ்டி மோதல்

இருதரப்பிலும் போலீஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீஸார் வழக்கு பதிவுசெய்ய உள்ளனர். தி.மு.க-வினர் கூறும்போது, ``வாபஸுக்காக கொடுத்தவர்களை வழிமறித்து, அவர்களின் மனுக்களை அ.தி.மு.க-வினர் கிழித்து வீசி உள்ளனர். தொடர்ந்து, அ.தி.மு.க ஆட்சி அதிகாரத்தில், போலீஸாரைக் கொண்டு எங்களைத் துரத்தி அனுப்பியுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு செய்யும் வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கோடு இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை, அதிகாரிகளைக் கையில் வைத்துக்கொண்டு, தாம் நினைத்ததைச் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும், உள்ளாட்சியில் திருட்டுத்தனமாக வெற்றிபெற வேண்டும் எனச் செயல்பட்டு வருகின்றனர். வாபஸ் மனு கொடுப்பவர்களைக் கொடுக்க விடவில்லை. அ.தி.மு.க-வினர் இதுபோன்ற கலவரத்தை நடத்தித் தடுத்துவிட்டனர். முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தி.மு.க சார்பில் மணமேல்குடியில் மிகப்பெரிய போராட்டம் நடக்கும்" என்றனர்.

திமுக-அதிமுகவிடையே நடந்த மோதல்
திமுக-அதிமுகவிடையே நடந்த மோதல்

இதுபற்றி அ.தி.மு.க-வினர் கூறும்போது, ``20 வருடங்கள் வரையிலும் கட்சிக்கு விசுவாசமாக இருந்த நாராயணன், கடைசி நாளில் மாறிவிட்டார். அவர், வாபஸ் பெறும் வேட்புமனுவை கடைசி நேரத்தில் கொடுக்கவிடக் கூடாது என்றுதான் நாங்கள் நினைத்தோம். ஆனால், தேர்தல் நடத்தும் அலுவலர் ஒத்துழைப்போடு, வாபஸ் பெறும் வேட்புமனுவை எப்படியாவது கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தனர். இதுபற்றி பேசிக் கொண்டிருந்தபோதுதான் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் எங்களைக் கடுமையாகத் தாக்கினார்கள். வேறுவழியின்றி நாங்களும் அவர்களைத் தாக்கினோம். எங்கள் தரப்பினர் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது" என்றனர்.