Published:Updated:

`ஓட்டுக்கு ஒரு மூட்டை அரிசி + ரூ.700..!’ -ஆரணியை அதிரவைத்த அ.தி.மு.க வேட்பாளர்கள்

2 நாள்களாக வீடுவீடாக அரிசி மூட்டை விநியோகமும் நடந்து வந்துள்ளது. கடைசி நேரத்தில் அரசி மூட்டையைக் கொடுக்க முடியாத வாக்காளர்களுக்கு டோக்கனையும் அ.தி.மு.க-வினர் வழங்கியுள்ளனர்.

அ.தி.மு.க
அ.தி.மு.க

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேவூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப்  போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் மற்றும் அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர், மாவட்ட கவுன்சில் வேட்பாளர் ஆகியோர் வாக்காளர்களுக்கு மூட்டை மூட்டையாக அரிசி விநியோகம் செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

அரிசி மூட்டை
அரிசி மூட்டை

ஆரணி ஊராட்சி ஒன்றியம், சேவூர் ஊராட்சி மன்றத் தலைவருக்குப் போட்டியிடும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த தீபா சம்பத் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் கௌரி ராதாகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் தர்மன் ஆகியோர் தங்களது பகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு, 1 ஓட்டுக்கு 1 மூட்டை அரிசி விநியோகம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமன்றி, 1 ஓட்டுக்கு 200 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை பணமும் கொடுத்துள்ளனர். 2 நாள்களாகப் பணம் விநியோகமும் வீடுவீடாக அரிசி மூட்டை விநியோகமும் நடந்து வந்துள்ளது. கடைசி நேரத்தில் அரசி மூட்டையைக் கொடுக்க முடியாத வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இன்று விடியற்காலை 5 மணி முதல் டோக்கன் வழங்கப்பட்ட வாக்காளர்களுக்கு அரிசி விநியோகம் செய்துள்ளனர்.

இலவச டீ ... டூ விலர்களுக்கு இலவச சர்வீஸ்... உள்ளாட்சி வேட்பாளர்களின் தேர்தல் டெக்னிக்குகள்!

சேவூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தீபா சம்பத் என்பவர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் சொந்த மைத்துனரின் மனைவி என்பதால், தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. அதேபோன்று, மாவட்ட கவுன்சிலருக்குப் போட்டியிடும் கௌரி ராதாகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் தர்மன் ஆகியோர் அமைச்சரின் தீவிர விசுவாசிகள் என்பதாலும் அவர்களைத் தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை எனவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்படுகிறது.

அரிசி மூட்டைகளை வாங்கிச் செல்லும் மக்கள்
அரிசி மூட்டைகளை வாங்கிச் செல்லும் மக்கள்

தேர்தல் நடைபெறும்போதே மூட்டை மூட்டையாக அரிசி விநியோகம் செய்துவரும் நிலையில், அந்தப் பகுதியின் தேர்தல் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யாமல் உள்ளனர். அதேபோன்று, தேர்தலை நிறுத்தாமலும் உள்ளனர் என்று தி.மு.க-வினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அரிசி விநியோகத்தைத் தடுத்து நிறுத்தினர். மேலும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்குக்குப் பணம், அரிசி என அள்ளிக் கொடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க வேட்பாளர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் விளக்கம் கேட்டோம். ``எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரிசி விநியோகம் செய்தது யார் என்றே எங்களுக்குத் தெரியாது. எதிர்க் கட்சியினர் எங்கள் மீது அபாண்டமாகப் பழிபோடுகிறனர். அ.தி.மு.க வேட்பாளர்கள் மீது பழிசுமத்தி அதிக ஓட்டு வாங்கிவிடலாம் என எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு அவதூறு கிளப்பி விடுகின்றனர்" என்றார் கொதிப்புடன்.