Published:Updated:

தலைவர் பதவி ரேஸில் சகோதரிகள்! - `யாருக்கு ஆதரவு' குழப்பத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

முன்னாள் அமைச்சரும் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மணிகண்டனின் சகோதரிகள், முதலூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

மணிகண்டன்
மணிகண்டன்

ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் சகோதரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு சகோதரிகளில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற நிலையை எடுக்க முடியாமல், மணிகண்டனும் அவரது தந்தை முருகேசனும் குழப்பத்தில் உள்ளனர்.

மணிகண்டன் சகோதரி தமிழ்செல்வி
மணிகண்டன் சகோதரி தமிழ்செல்வி

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் மற்றும் திருவாடானை சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கான முதல்கட்ட தேர்தல், நேற்று நடந்து முடிந்தது. இந்நிலையில், எஞ்சியுள்ள பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 9 மாவட்ட கவுன்சில், 89 ஒன்றிய கவுன்சில், 261 கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் 1785 கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள், வரும் 30-ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், போகலூர் ஒன்றியத்தில் உள்ள முதலூர் ஊராட்சித் தலைவர் பகுதிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கை என இருவரும் போட்டியிடுகின்றனர். முன்னாள் அமைச்சரும் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மணிகண்டனின் மூத்த சகோதரி, தமிழ்ச்செல்வி. இவர், முதலூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு பூட்டு-சாவி சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், தமிழ்செல்வியை எதிர்த்து அவரது தங்கையான மஞ்சுளாவும் போட்டியிடுகிறார். இவருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மணிகண்டனின் இளைய சகோதரி மஞ்சுளா.
மணிகண்டனின் இளைய சகோதரி மஞ்சுளா.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்க மறுத்த நிலையில், இருவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் அவரது தந்தையும் ராம்கோ சேர்மனுமான முருகேசன், இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஏற்படவில்லை. இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மணிகண்டனின் மைத்துனர் ராமசாமி
மணிகண்டனின் மைத்துனர் ராமசாமி
உ.பாண்டி

சகோதரிகள் இருவருக்கும் இடையே போட்டி நிலவும் நிலையில், யாருக்கு ஆதரவாகத் தங்கள் உறவினர்களை வாக்களிக்கச் சொல்வது என்ற குழப்பத்தினால், முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் அவரது தந்தை முருகேசனும் தேர்தல் நடைபெறும் முதலூர் கிராமத்திற்குச் செல்வதைத் தவிர்த்து விட்டனர். இந்நிலையில், இதே பகுதியில் ஒன்றிய கவுன்சில் வேட்பாளராகப் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளருக்கு எதிராக தமிழ்ச்செல்வியின் கணவர் ராமசாமியும் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.