Published:Updated:

`சறுக்கிய ஆல் இன் ஆல்; வருத்தத்தில் வைத்திலிங்கம்!' - புலம்பும் தஞ்சை அ.தி.மு.கவினர்

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

`வைத்திலிங்கத்தைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட நபர்கள் மட்டும் எப்போதும் இருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளே அ.தி.மு.க இங்கு தோல்வியடைந்ததற்குக் காரணம். அதை எப்போது அவர் உணரப் போகிறார் எனத் தெரியவில்லை.'

ஒரத்தநாட்டில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கத்தின் சொந்த ஊரிலேயே ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் தோல்வியடைந்திருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 276 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தல் முடிவில் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் சொந்த ஊரிலேயே அ.தி.மு.க வேட்பாளர் தோல்வியடைந்து விட்டார். இது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். ``அ.தி.மு.கவின் துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட தெலுங்கன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். ஒரத்தநாடு சட்டமன்றத் தேர்தலில் வைத்திலிங்கம் தோல்வியடைந்துவிட்டார். அதன்பிறகு நடந்த தஞ்சாவூர் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் தோல்வியடைந்ததால், அவரின் செல்வாக்கு சரிந்து வருவதாகக் கட்சியினர் மத்தியில் பேச்சு கிளம்பியது.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

இந்தநிலையில், `ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதற்காக நிர்வாகிகள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. நாம் இதில் வெற்றி பெற்றே தீர வேண்டும்' எனப் பிரசாரத்தின்போது நிர்வாகிகளிடம் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

அதன்படி போட்டியிட்ட அதி.மு.க வேட்பாளர்கள் அனைவரும் பணத்தைக் கூடுதலாகவே செலவு செய்தனர். ஆனாலும், தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க வேட்பாளர்களுக்குப் பெரும்பான்மையான இடங்களில் சாதகமாக இல்லை. வைத்திலிங்கத்தின் சொந்த ஊரான தெலுங்கன்குடிகாடு ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட 23வது வார்டில் வருகிறது. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அங்கு தனக்கு ஆல் இன் ஆலாக இருக்கும் பழனிவேலின் மனைவியான ராஜம் என்பவருக்கு சீட் கொடுத்தார் வைத்திலிங்கம். அத்துடன் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு அ.தி.மு.கவைச் சேர்ந்த தன் நெருங்கிய ஆதரவாளரையும் நிற்க வைத்தார்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

ஆனால், அவர்கள் இருவருமே தோற்றுவிட்டனர். குறிப்பாக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டவர் தோல்வியடைந்து தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பது அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `அண்ணனுக்கு ஆல் இன் ஆலாக இருந்தவரே தோல்விடைந்து விட்டதை வைத்திலிங்கமே தோற்ற'தாகத் தொண்டர்கள் பேசி வருகின்றனர்.

இந்தநிலையில் தஞ்சாவூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்திலிங்கம் தங்கியுள்ளார். அவரைப் பார்ப்பதற்கு அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் படையெடுத்து வருகின்றனர். எப்போதும் எல்லோரையும் சந்திக்கும் வைத்திலிங்கம் தற்போது யாரையும் சந்திக்கவில்லை.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

தனக்கு நெருக்கமான ஒரு சிலரை மட்டுமே அவர் சந்தித்துள்ளார். வைத்திலிங்கத்தைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட நபர்கள் மட்டும் எப்போதும் இருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளே அ.தி.மு.க, இங்கு தோல்வியடைந்ததற்குக் காரணம். அதை எப்போது அவர் உணரப்போகிறார் எனத் தெரியவில்லை'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு