Published:Updated:

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: நெல்லையில் 333 பதற்றமான வாக்குச்சாவடிகள்; கட்டுப்பாட்டு அறை திறப்பு!

உள்ளாட்சித் தேர்தல் கட்டுப்பாட்டு அறை
உள்ளாட்சித் தேர்தல் கட்டுப்பாட்டு அறை

ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையிலான தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் மாவட்டங்களில் அரசியல் கட்சியினர் தேர்தலுக்கான பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர்.

கட்டுப்பாட்டு அறை
கட்டுப்பாட்டு அறை

அரசின் சார்பாகத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாவட்டங்களில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி நெல்லை மாவட்டத்தில், ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் கட்டுப்பாட்டு அறையைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நெல்லை மாவட்டத்திலுள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் 2,069 பதவியிடங்களுக்கு நேரடியாகத் தேர்தல் நடக்கிறது.

பேட்டியளிக்கும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு
பேட்டியளிக்கும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 12 இடங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 122 இடங்களுக்கும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 204 இடங்களுக்கும் , கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,731 இடங்களுக்கும் தேர்தல் நடக்கவிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாவட்டத்திலுள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் 224 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 30 ஆண் வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடிகளும், 30 பெண் வாக்காளர்களுக்கான சாவடிகளும், 1,128 அனைத்து வாக்காளர்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,188 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவிருக்கின்றன.

நெல்லை மாவட்டத்தில் 333 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.
விஷ்ணு, நெல்லை மாவட்ட ஆட்சியர்

ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் 3,30,487 ஆண் வாக்காளர்களும், 3,43,325 பெண் வாக்காளர்களும், 56 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 6,73,868 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் 333 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் காவல்துறை பாதுகாப்புடன் வீடியோ பதிவுகள் நுண் தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் பணியில் 20 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 277 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் ஈடுபடவிருக்கிறார்கள்.

தேர்தல் கட்டுப்பாட்டு அறை
தேர்தல் கட்டுப்பாட்டு அறை

முதற்கட்ட தேர்தலுக்கு 5,002 வாக்குப்பதிவு அலுவலர்களும் இரண்டாம் கட்ட தேர்தலின்போது 4,511 வாக்குப்பதிவு அலுவலர்களும் பணியில் ஈடுபடுவார்கள். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க ஐந்து பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினரின் பாதுகாப்பும் போதுமான அளவுக்கு ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு