Published:Updated:

காலை 9 முதல் இரவு 8 மணி வரை... அமித் ஷாவின் தேர்தல் ஆபரேஷன்!

Amit Shah
Amit Shah

ஒரு மாதத்துக்கு முன்பாகவே இரண்டு மாநிலங்களுக்கான தேர்தல் பணிகளை பி.ஜே.பி துவக்கிவிட்டது. அதன் ஒரு பகுதிதான் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சில காங்கிரஸ் தலைவர்களை பி.ஜே.பி முகாமுக்கு தூக்கி வந்தது.

அக்டோபர் 21-ம் தேதி ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்குச் சட்டமன்றப் பொதுத்தேர்தலை அறிவித்துவிட்டது இந்தியத் தேர்தல் ஆணையம். இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்தேற ஆரம்பித்துள்ளது.

Election Commission
Election Commission

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தற்போது அந்த மாநிலத்தில் பி.ஜே.பி-யைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக உள்ளார். ஹரியானா மாநிலத்தில் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. பி.ஜே.பி-யைச் சேர்ந்த மனோகர் லால் கட்கார் முதல்வராக இருக்கிறார். இரண்டு மாநிலங்களுமே பி.ஜே.பி கைவசம் உள்ளது. நடைபெற உள்ள இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் பி.ஜே.பியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வேகத்தில் உள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் டெல்லியில் உள்ள பி.ஜே.பி தலைமை அலுவலகம் பரபரப்பாகிவிட்டது. உள்துறை அமைச்சரும் பி.ஜே.பி தேசியத் தலைவருமான அமித் ஷா நீண்ட நாள்களுக்குப் பிறகு பி.ஜே.பி தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து முகாமிட்டு வருகிறார். காலை ஒன்பது மணிக்கெல்லாம் பி.ஜே.பி அலுவலகத்துக்கு வந்துவிடுகிறார். ஐந்தாவது தளத்தில் உள்ள அவருடைய அறைக்குச் சென்று முக்கிய பி.ஜே.பி நிர்வாகிகளுடன் தினமும் ஆலோசனை நடத்துகிறார். நாள் முழுவதும் ஆலோசனைகளும் திட்டவடிவங்களும் தயார் செய்வதும் அவற்றைச் சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்துச் செயல்படுத்துவதுமாக இருக்கிறார். இரவு எட்டு மணிவரை இருந்து பணிகளைக் கையாளும் அமித் ஷா, அடுத்த நாள், முந்தைய நாளின் சாதக பாதகங்களை அலசி, திட்டத்தை மாற்றி வியூகம் அமைக்கவும் செய்கிறார்.

Modi, Amit Shah
Modi, Amit Shah

அதேபோல் மகாராஷ்டிராவில் பி.ஜே.பி-யுடன் சிவசேனா கட்சி கூட்டணி வைக்க உள்ளது. இந்தக் கூட்டணி குறித்தும் கடந்த சில நாள்களாக அந்த மாநில பி.ஜே.பி தலைவர்கள் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்திவந்தார்கள். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாகவே இரண்டு மாநிலங்களுக்கான தேர்தல் பணிகளை பி.ஜே.பி துவக்கிவிட்டது. அதன் ஒரு பகுதிதான் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சில காங்கிரஸ் தலைவர்களை பி.ஜே.பி முகாமுக்கு துாக்கிவந்தது. அதேபோல் ஹரியானா ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த மாநிலம். ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது காங்கிரஸ் கட்சி.

நாடாளுமன்றத் தேர்தலில் அமித் ஷா-மோடியின் வியூகமே வரலாறு காணாத வெற்றியை பி.ஜே.பிக்குப் பெற்றுத்தந்தது. அந்த உற்சாகத்தோடு இந்தத் தேர்தலை பி.ஜே.பி எதிர்கொள்கிறது. அதேநேரம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டிய காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சறுக்கலைச் சந்தித்து வருகிறது. மகாராஷ்டிரத்தில் அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறார்கள். குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியினர் மனரீதியாகவே சோர்வடைந்திருக்கிறார்கள். எதிரியை மனரீதியாகப் பலவீனப்படுத்தும் யுக்தியை அமித் ஷா ஏற்கெனவே பல தேர்தல்களில் செய்துள்ளார். அதே பாணியை இரண்டு மாநில தேர்தல்களிலும் அவர் கையாள இருக்கிறார். அதற்கான ஆபரேஷனில்தான் இப்போது அவர் இறங்கியுள்ளார்.

BJP Office
BJP Office

இன்றைய தேதியில் இரண்டு மாநிலங்களிலும் பி.ஜே.பி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்கிற நிலையே உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. எனவே, இந்தக் கூட்டணி ஒருவேளை தங்களுக்குச் சிக்கலாகிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் அமித் ஷா. இதற்காகவே நாள்தோறும் ஒவ்வொரு தொகுதியாகத் தனது லேப்டாப் மூலம் அலசிவருகிறார். அதோடு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மூலமும் ஒவ்வொரு தொகுதியிலும் ப்ளஸ், மைனஸ் போன்றவற்றை விசாரித்துவருகிறார். இந்தப் பணிகளால்தான் இதுவரை சிவசேனா, பி.ஜே.பி கூட்டணிக்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது. அந்த மாநிலத்தில் பி.ஜே.பி குறைந்த பட்சம் 150-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்று திட்டமிடுகிறார் அமித் ஷா. அதற்கான வியூகத்தை டெல்லியிலிருந்து நடத்த ஆரம்பித்துவிட்டார்.

தொகுதிகள் முடிவான பிறகு இரண்டு மாநிலத்திலும் தொடர் சுற்றுப்பயணத்தையும் மேற்கொள்ள உள்ளார். இதனால் உள்துறை அமைச்சக அலுவலகத்துக்குத் தேர்தல் முடிந்த பிறகே தலைகாட்ட இருக்கிறார்.

அமித் ஷா இந்தியைத் தூக்கிப் பிடிப்பது ஏன்? - அரசியல் பின்புலக் கணக்குகள்!
அடுத்த கட்டுரைக்கு