Published:Updated:

தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடாதது வியூகமா... சறுக்கலா?

`முக்கிய நிர்வாகிகளிடம் கலந்து பேசிதான் இந்த முடிவை தினகரன் அறிவித்தார். சின்னம்மாவுக்கும் தினகரனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டதாக, பொய்யான கருத்தை விதைக்க சிலர் முயற்சிக்கிறார்கள்’

TTV Dinakaran
TTV Dinakaran

`நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை’ என அ.ம.மு.க அறிவித்துள்ளது. கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்காத நிலையில், போட்டியிட விரும்பவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இது ‘வியூகமா அல்லது சறுக்கலா’ என்பதுதான் இப்போது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

TTV Dinakaran
TTV Dinakaran
நாம் ஜெயித்தாலும்கூட, எம்.எல்.ஏ.க்களாக இருக்கப்போவது இன்னும் ஒன்றரை வருடங்கள்தான். அதற்குள்ளாக ஆட்சி கலைந்துவிட்டால், போட்ட பணம் எல்லாம் வீணாகிவிடும்.

கடந்த செப்டம்பர் 21-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்ற டி.டி.வி.தினகரன், சசிகலாவை சந்தித்துவிட்டு வந்து, இடைத்தேர்தலில் அ.ம.மு.க போட்டியிடாது எனத் அறிவித்தார். இச்சந்திப்பு குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க நிர்வாகிகள் சிலர், “கட்சியை இப்போதுதான் பதிவு செய்துள்ளோம். ஆட்சேபனை மனுக்கள் பெறுவதற்கான காலவரையறையும் இப்போதுதான் முடிந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குள் நிரந்தர சின்னம் கிடைத்துவிடும். அதன்பிறகு தேர்தலை எதிர்கொள்ளலாம் என டி.டி.வி எங்களிடம் தெரிவித்தார்.

சிறையில் சின்னம்மாவை சந்தித்தபோது, ‘இடைத்தேர்தலில் இரண்டு கட்சிகளும் கோடிக்கணக்கில் பணத்தை இறக்கப் போகின்றன. நம்மால் அவர்களுடன் போட்டிபோட முடியாது. நாம் ஜெயித்தாலும்கூட, எம்.எல்.ஏ-க்களாக இருக்கப்போவது இன்னும் ஒன்றரை வருடங்கள்தான். அதற்குள்ளாக ஆட்சி கலைந்துவிட்டால், போட்ட பணம் எல்லாம் வீணாகிவிடும். தவிர, இரண்டு தொகுதியிலும் வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட நான் விரும்பவில்லை. நிரந்தர சின்னம் வரும் வரையில் பொறுத்திருப்போம்’ என்று தன் தரப்பைச் சொன்னார் டிடிவி.

Sasikala
Sasikala

அதற்கு சின்னம்மா, ‘நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், நமக்கு அதிக வாக்குகள் கிடைத்த தொகுதிகளில் திருநெல்வேலியும் ஒன்று. சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன் 61,000 வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளார். நாங்குநேரியில் நமக்கென ஒருவாக்கு வங்கி இருக்கிறது. தேர்தலில் போட்டியிட்டால்தான் நமக்கான பலத்தைக் காட்ட முடியும். தவிர, இங்கேயிருந்து வேறு கட்சிக்குச் செல்பவர்களையும் தடுக்க முடியும்’ என்றுள்ளார். இதற்கு உடன்படாத டி.டி.வி, சின்னம்மாவை சமாதானப்படுத்தி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டார்” என்றனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், அ.ம.மு.க. 5.5 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்த வாக்கு வங்கியை மேலும் சரியவிடக் கூடாது என்பதுதான் டி.டி.வியின் கணக்கு.

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், “டி.டி.வி எடுத்துள்ள முடிவு அரசியல் ரீதியாகச் சரியானதுதான். இடைத்தேர்தலில் போட்டியிட்டு தன்னுடைய வாக்குவங்கியைக் குறைக்கவும் அவர் விரும்பவில்லை, இத்தேர்தல் அவருக்கான தேர்தலும் இல்லை.

கருத்தியல் ரீதியாக நாம் தமிழர் கட்சி தேர்தலை சந்திப்பது வேறு ரகம். இது ஜனரஞ்சகமான அ.ம.மு.க போன்ற கட்சிகளுக்கு ஒத்துவராது.
ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

ஆளுங்கட்சியை எதிர்த்து எதிர்க்கட்சியான தி.மு.க. 45 சதவிகித வாக்குகளோடு களத்தில் நிற்கும். இதில் 5.5 சதவிகித வாக்குகள் வைத்திருக்கும் அ.ம.மு.க-வால் தி.மு.க-வை எதிர்த்து களமாடுவது சுலபமல்ல. கருத்தியல் ரீதியாக நாம் தமிழர் கட்சி தேர்தலை சந்திப்பது வேறு ரகம். இது ஜனரஞ்சகமான அ.ம.மு.க போன்ற கட்சிகளுக்கு ஒத்துவராது. சில இடைத்தேர்தல்களை கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்களும் தவிர்த்துள்ளார்கள். ஆகவே, தினகரன் எடுத்துள்ள முடிவு அவர் கட்சிக்கு பாதிப்பல்ல” என்றார்.

அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் இளந்தமிழ் ஆர்வலன், “முக்கிய நிர்வாகிகளிடம் கலந்து பேசிதான் இம்முடிவை தினகரன் அறிவித்தார். சின்னம்மாவுக்கும் தினகரனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டதாக, பொய்யான கருத்தை விதைக்க சிலர் முயற்சிக்கிறார்கள். இப்படி ஒரு விஷமத்தனமான பிரசாரம் செல்லுபடியாகாது. கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளோம். அப்பணிகள் முடிவுற்றதும், நிரந்தரமான ஒரு சின்னத்தில் தேர்தலை எதிர்கொள்வோம். மற்றபடி, இதில் அரசியல் ஏதுமில்லை” என்றார்.

இளந்தமிழ் ஆர்வலன்
இளந்தமிழ் ஆர்வலன்

புலி பதுங்குவதுகூட பாய்வதற்குத்தான் என்பார்கள். தினகரன் பதுங்கியது பாய்வதற்கா, ஒதுங்குவதற்கா என்பது வரும் காலங்களில் தெரிந்துவிடும்.

` யார் இந்தப் புகழேந்தி?' - விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க வேட்பாளர் தேர்வான பின்னணி!