இன்று மாலையோடு உள்ளாட்சித் தேர்தல் பிரசார அலை ஓயப்போகிறது. இதனால் அனைத்துக் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் பரபரப்போடும் விறுவிறுப்போடும் தேர்தல் களமாடி வருகின்றனர்.
அந்த வகையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் கலந்துகொள்ள வெங்கடாபுரம், மீனாட்சிபுரம் போன்ற இடங்களிலிருந்து மக்களை பேருந்துகளில் 9 மணிக்கே அழைத்து வந்திருந்தனர் பா.ஜ.க-வினர்.
73-வது வார்டு வேட்பாளர் ராஜரத்தினத்தையும், 77-வது வார்டு வேட்பாளர் லட்சுமியையும் ஆதரித்து அண்ணாமலை தன் பிரசார உரையைத் தொடங்கினார்.

அப்போது பேசிய அவர், ``கோவைக்கு வரக்கூடிய 85% நிதி மத்திய அரசு உடையதுதான். பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் உங்கள் பிரதிநிதிகளாக இருந்தால்தான் மத்திய அரசு திட்டங்கள் மக்களை வந்தடையும். 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்புக்குப் பிறகு வேகமாக வளர்ந்து வந்த கோவை, தற்போது பின்னோக்கி சென்றுவிட்டது. அது முன்னோக்கி செல்ல பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பிரதமர் மோடி ஒரு குண்டூசியை திருடினார் என்று கூட யாராலும் குற்றம் சொல்லமுடியாது. அவர் தமிழகத்தில் மட்டும் 42,00,000 வீடுகளை கட்டித் தந்துள்ளர். ஆனால், திராவிடக் கட்சிகள் மக்கள் குடிசையில் இருந்தால்தான், தங்கள் பேச்சைக் கேட்பார்கள் என்று குடிசையிலேயே அவர்களை வைத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசி போட 1.72 கோடி டோஸ் தடுப்பூசி மோடி அரசு தந்தது. ஆனால், தி.மு.க-வால் பொங்கல் பரிசைக் கூட சரியாக தரமுடியலை" என்றார்.

அதைத் தொடர்ந்து கோவையில் தி.மு.க-வினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்தும், பொருள் வழங்குவது குறித்தும் அண்ணாமலை பேசினார்.
``தி.மு.க கொடுக்கும் கொலுசு 16 சதவிகிதம் மட்டுமே வெள்ளி. அதற்கான சான்றிதழ் இதோ..." என சான்றிதழைக் காட்டினார். தொடர்ந்து பேசியவர், ``இந்த கொலுசை எங்கள் கரூர்கார்கள் தான் தந்துகொண்டிருக்கிறார்கள். இது வெறும் 1,000 ரூபாய் தான். ஆனால், 3,000 ரூபாய் எனச் சொல்லிக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல, ஒரு ஹாட்பாக்ஸ் தருகிறார்கள். அது வெறும் 100 ரூபாய் தான். இதை எல்லாம் நம்பிவிடாதீர்கள். 517 வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு அதில் முழுமையாக 7 வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை" என்றார்.