Published:Updated:

வேலை, கூலி, விரக்தி! - மகாராஷ்ட்ரா தேர்தல் அனுபவத்தை வேதனையுடன் பகிரும் ஆராய்ச்சியாளர் #MyVikatan

Representational Image
Representational Image

எங்களுக்குத் தேர்தல் நடத்த ஆளில்லை என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தனர். சரி என்று தேர்தல் பயிற்சிக்குச் சென்றோம்.

தேர்தல் ஒரு ஜனநாயகக் கொண்டாட்டம் என்று சொல்பவர்கள் உண்டு. கொண்டாட்டத்தில் வெடி வெடிப்பவர்களிடம் இருக்கும் மகிழ்ச்சி வெடியைத் தயாரித்தவர்களிடம் இருக்காது. தேர்தல் பணி செய்பவர்கள் வெடி தயாரித்தவர்கள் போன்றவர்கள். "An election is a moral horror, as bad as a battle except for the blood; a mud bath for every soul concerned in it" என்று ஜார்ஜ் பெர்னாட்ஷா சொன்னார். இது இந்திய தேர்தலுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

தேர்தலில் நமக்கு வெளிப்படையாகத் தெரிவது அரசியல் கட்சிகளின் வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பிரசாரம், மக்கள் வாக்களிப்பது மற்றும் தேர்தல் முடிவுகள். தேர்தல் நடைமுறைகள் நமக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. சி.எஸ்.ஐ.ஆரில் ஆராய்ச்சியாளராக இருக்கும் நான், புனேவில் வசித்து வருகிறேன். மகாராஷ்டிராவில் நடைபெற்ற கடந்த இரண்டு தேர்தல்களில், வாக்குச்சாவடியில் அதிகாரபூர்வமாகப் பணியமர்த்தப்பட்டதால் எனக்குக் கிடைத்த அனுபவத்தை வைத்து இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

Representational Image
Representational Image

தேர்தல் அறிவித்தவுடன், வருவாய்த்துறை மிக சக்தி வாய்ந்த துறையாக மாறிவிடுகிறது. மாவட்டக் கலெக்டர் ஏறக்குறைய மன்னராக மாறிவிடுகிறார். அவர் வைத்ததுதான் சட்டம். நாம் கேட்கிற எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில்தான், "பணியிடை நீக்கம்." இருந்தாலும், மாவட்டக் கலெக்டரிடம் பேசினோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் ஆய்வகத்தின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டது. இந்த முடிவு பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும் என்று கணித்ததால், இதை நாங்கள் எதிர்த்தோம். ஏனென்றால், எங்கள் ஆய்வகத்தில் ஒரு விபத்து என்றால், தீயணைப்புத் துறையால் மட்டும் அந்த விபத்தால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்தவோ சரி செய்யவோ முடியாது. அது என்ன மாதிரியான விபத்து என்று சொல்ல அந்த ஆய்வகத்தில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளால் மட்டுமே முடியும். எங்கள் ஆய்வகத்தில் மட்டுமல்ல, நாட்டின் வேறு பகுதிகளில் ஆய்வகங்களில் விபத்து நடந்தாலும் எங்கள் விஞ்ஞானிகளைத்தான் அதைக் கட்டுப்படுத்த பயன்படுத்துவார்கள். உதாரணமாக, போபால் விஷ வாயு கசிவு நடந்தபோது எங்கள் ஆய்வக விஞ்ஞானிகளைத்தான் அழைத்துச் சென்றார்கள். அன்றைக்கு எங்கள் விஞ்ஞானிகள் துரிதமாகச் செயல்படவில்லை என்றால், போபாலில் மரணம் இரண்டு மடங்காகி இருக்கும். இந்தக் காரணங்களை எடுத்துச் சொல்லி, எங்களைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று விளக்கினோம். அதை ஏற்றுக்கொள்ள மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது.

24 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே, எங்களுக்கு தேர்தல் நடத்த ஆளில்லை என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தனர். சரி என்று தேர்தல் பயிற்சிக்கு சென்றோம். வகுப்புகளை மராத்தியில் நடத்தினர். ஆங்கிலத்தில் பேச வேண்டுகோள் விடுத்தோம். இது மகாராஷ்டிரா, இங்கே மராத்தியில்தான் பேசுவோம். நீங்கள் மராத்தி கற்றுக் கொள்ளுங்கள் என்று கோபமாகப் பதில் வந்தது. அதற்கு பல பேர் ஆரவாரமாகக் கை தட்டினர். ஒருவரை அவமானம் செய்வது போல பேசுவதை வரவேற்று ஆரவாரம் செய்வது மக்களிடம் அதிகரித்து வருகிறது. இது ஆபத்தான போக்கு.

Representational Image
Representational Image

அப்போது தமிழகத்தில் நடப்பது நினைவுக்கு வந்தது. வட மாநிலத்தவர்கள் தமிழகத்துக்கு வேலைக்கு வருகிறார்கள். அவர்களிடம் பேச நீங்கள் இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்று பேசுபவர்களின் அறியாமையை நினைத்து நொந்துகொண்டேன். மற்ற மாநிலங்களில் நாம் வேலைக்குப் போனால், நாம் அவர்கள் மொழியை கற்றுக்கொள்ள அறிவுருத்தப்படுகிறோம். ஆனால், மற்றவர்கள் நம் மாநிலத்திற்கு வந்தால், நாம் அவர்கள் மொழியை கற்றுக்கொள்ள வேண்டுமாம். என்ன நியாயம் இது?

தேர்தல் பணியாளராகத் தேர்தல் விதிமுறைகளைக் கற்க வேண்டியது எனது கடமை. மராத்தி புரியவில்லை என்று சாக்கு சொல்ல முடியாது. நல்ல வேலையாக Youtube-ல் காணொலிகள் இருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு, தேர்தல் கமிஷனில் உள்ள ஆங்கில விளக்கவுரைகளை தரவிறக்கி படித்துவிட்டு தேர்தல் பணி செய்ய கிளம்பினோம். தேர்தலுக்கு முதல் நாள் காலை 8 மணிக்கு ஒரு பெரிய அரங்கில் எங்கள் எல்லோரையும் அடைத்தார்கள். அதன் பிறகு, எங்கள் மொபைலில் BoothApp என்ற அப்ளிகேஷனை தரவிறக்கி அதையும் தேர்தலில் பயன்படுத்தச் சொன்னார்கள். ஒரு விஞ்ஞானியாகத் தொழில்நுட்பம் கொண்டுவரும் மாற்றங்களை விரும்பி வரவேற்பவன். ஆனால், எனக்கு மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தின் மீது பெரிய நம்பிக்கையில்லை. அதே போலத்தான் இந்த BoothApp. இது பல பிரச்னைகளை உண்டு பண்ண காத்திருக்கிறது என்றே நான் கணிக்கிறேன்.

காலையில் 9 மணி தொடங்கி மராத்தியில் மூன்று மணி நேரம் பேசிவிட்டு, வாக்குபதிவு எந்திரம் மற்றும் தேர்தல் நடத்த தேவையான பொருள்களை கையில் கொடுத்தார்கள். அந்நேரம் என் அணியை சேர்ந்தவர்கள், தேர்தல் அதிகாரிகளிடம் என்னைப் பற்றி ஒரு குற்றச்சாட்டைச் சொன்னார்கள். இவருக்கு ஆங்கிலம் மட்டும்தான் தெரிகிறது. எங்களுக்கு மராத்தி மட்டும்தான் தெரிகிறது. எனவே, இவருடன் வேலை செய்ய முடியாது. இவரை மாற்றுங்கள் என்று சொன்னார்கள். அந்த அதிகாரி, மராத்தி ஆங்கிலம் இரண்டும் தெரிந்த ஒரு மொழி பெயர்ப்பாளரை எங்கள் அணியில் சேர்த்துவிட்டார். பின்னர், பஸ்ஸில் ஏறினோம். தென் மாநிலங்களில்தான் தரமான பஸ்களைப் பார்க்க முடியும். வட மாநில பஸ்கள் "நஞ்சு போன பென்சில் டப்பா" போல இருக்கும். அதேதான் அன்றைக்கும் கிடைத்தது. அதில் ஏறி தேர்தல் நடக்கும் பள்ளிக்கூடத்துக்குப் போய் தெரு நாய்களின் பலமான வரவேற்பை ஏற்றுக்கொண்டு உள்ளே போனோம். வாட்ஸ் அப்பில் என் நண்பர்களை வரவேற்ற பன்றிகளின் படத்தை அனுப்பியிருந்தனர். நம் நிலைமை பரவாயில்லை என்று தேர்தல் பணிகளை ஆரம்பித்தோம்.

Representational Image
Representational Image

ஒரு துணிப்பையில் நிறைய பொருள்கள் இருந்தன. அதில் ஒன்று Magnifying Glass. தேர்தலில் இதன் பயன்பாடு என்ன என்று தெரியவில்லை! அப்போது அந்த அறைக்குள் ஒரு எலி ஓடுவதை கவனித்தேன். அதை வேடிக்கையாக, A rat visited my booth to vote without EPIC (Voter ID) என்று மற்ற பூத்களில் இருந்த என் நண்பர்களுக்கு வாட்ஸ் அப் செய்தி அனுப்பினேன்.

பல விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஏறக்குறைய 40 கவர்கள் "மூடி முத்திரையிடப்பட" வேண்டும். அவற்றையெல்லாம் தயார் செய்துவிட்டு படுக்க ஆயத்தமான பொழுது மணி 9. அப்பொழுது தேர்தல் அதிகாரி வந்து புதிய விதிமுறைகள் மற்றும் விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று சொல்லி அதை இரண்டு மணி நேரம் விளக்கினார். அதன் பிறகு தூங்கப்போனேன்.

ஒரு மணி நேரத்தில் காவல்துறை அதிகாரி என்னை எழுப்பி, போலீஸ் எங்கே என்று கேட்டார். உங்கள் பணியாட்களை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். என்னை முறைத்து பார்த்துவிட்டுப் போய்விட்டார். போலீஸை கண்டுபிடித்தாரா தெரியவில்லை! தூக்கமேயில்லாமல் புரண்டு படுத்துவிட்டு, நான்கு மணிக்கு எழுந்து முகத்தில் உள்ள அனைத்து துவாரங்களையும் மூடிக்கொண்டு சிறுநீர் கழித்து முடித்தேன்! தண்ணியில்லாமல் குளிக்கும் ஷ்ப்ரேயை உடம்பில் அடித்து துடைத்துவிட்டு தேர்தல் பணிக்கு ஆயத்தமானேன். கழிப்பறைகள் மிக மோசமாக இருந்ததால் தண்ணீர் குடிப்பதைக் குறைத்துக் கொண்டேன். என் நண்பருடைய பூத்தே நான் பயன்படுத்திய கழிப்பறை போன்று இருந்தது பின்னர் தெரிய வந்தது.

Representational Image
Representational Image

பசியைப் போக்க சில உலர் பழங்களை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். காலை 5.30 மணிக்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஏஜென்டுகள் வந்துவிட்டனர். 7 மணிக்கு சரியாகத் தேர்தலை ஆரம்பித்தோம். முதல் ஒரு மணிநேரத்தில் சில வாக்குகளே பதிவாகின. காலை வாக்கிங் போன சிலர் அப்படியே பூத்துக்குள் வந்து வாக்குகளைச் செலுத்தினர். ஒருவர் கையில் வைத்த மை அதிகமாக இருக்கிறது என்று என்னிடம் புகார் செய்தார். அது என்ன நெற்றிப் பொட்டா, நீங்கள் விரும்புகிற சைசில் வைத்துக்கொள்ள என்று கேட்டேன்.

நான் ஆங்கிலத்தில் சொன்னது புரிந்ததா என்று தெரியவில்லை. மண்டையை ஆட்டிவிட்டுப் போய்விட்டார். கொஞ்ச நேரம் கழித்து ஒரு வயதான தம்பதியர் வந்தனர். அவர் முதலில் ஓட்டு போட்டுவிட்டு, அங்கேயே நின்றார். என் மனைவியுடன் நானும் நிற்பேன் என்று அடம் பிடித்தார். அது ஒன்றும் மண மேடையல்ல, கணவன் மனைவி சேர்ந்திருப்பதற்கு என்று சொல்லி அவரை வெளியே வரவைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இன்னும் பல பேர், ஏதோ பேய் வீட்டுக்குள் போனதுபோல பட்டனை அமுக்கியவுடன் வெளியே கிளம்பி ஓடினார்கள். அவர்களை நிற்க சொல்லி பீப் சத்தம் வந்த பிறகு அனுப்பிக்கொண்டிருந்தேன்.

இந்தச் செல்போன் இம்சை தாங்க முடியவில்லை. ஒருவர் வாக்கு பதிவு எந்திரத்தைப் போட்டோ எடுத்ததைப் பார்த்துவிட்டேன். போட்டோ எடுக்க அனுமதியில்லை, எதற்காக போட்டோ எடுத்தீர்கள் என்று கேட்டேன். போட்டோ எடுத்தால்தானே, எந்தக் கட்சிக்கு வாக்களித்தேன் என்று வெளியே சொல்ல முடியும் என்பது அவர் வாதம். அவரை போலீஸில் ஒப்படைத்தேன். அவர்கள், போனில் உள்ள போட்டோக்களை தேடி அழித்தனர். அடுத்த தொந்தரவு செல்ஃபி. விரலை முகத்தின் அருகே வைத்து செலஃபி எடுப்பவர்களை விரட்டிவிட வேண்டியிருந்தது. இன்னொருவர், எனக்கு விவிபேட் (VVPAT) தாள் வேண்டுமென்றார். நல்ல வேலையாக VVPAT மெஷினை கேட்கவில்லை! இன்னொருவர், கையெழுத்து போடும் பதிவேட்டை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த டேபிளுக்குப் போனார். ஏனென்று கேட்டால், இப்போது தான் ஒரு போஷ்ட் மார்ட்டத்துக்கு (Post-Mortem) உதவினேன். உங்கள் அருகில் வர விருப்பமில்லை, அதனால் அடுத்த டேபிளில் வைத்து கையெழுத்துப் போட்டுவிட்டு தருகிறேன் என்பது அவர் விளக்கம். அவர் கையில் மை வைக்க அருகில்தான் போக வேண்டும். இதைத் தவிர்க்க முடியாதே!

Representational Image
Representational Image

பா.ஜ.க தேர்தல் ஏஜென்டுக்கு, அவர் கட்சியினர் சிறிது நேரத்துக்கு ஒரு முறை திண்பண்டங்கள், காலை மதிய உணவு மற்றும் தண்ணீர் எல்லாம் தந்தனர். காங்கிரஸ் ஏஜெடை காலையில் கொண்டு வந்து இறக்கிவிட்டவர்கள், மீண்டும் அந்தப் பக்கம் வரவேயில்லை. திண்பண்டங்களை பா.ஜ.க ஏஜென்டு சாப்பிடவில்லை என்றால், நான் எடுத்து சாப்பிட்டுவிடலாம் என நினைத்தேன். ஆனால், அவரே எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டார்! காங்கிரஸ் ஏஜென்டைப் பார்த்து பாவமாகப் போய்விட்டது என நினைக்கிறேன். அவருக்கும் திண்பண்டங்கள் கொடுத்தார். தேர்தல் பணி செய்பவர்களுக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லியிருந்தார்கள். அதனால், என்னுடன் பணி செய்தவர்கள் உணவுக்காக 4 மணி வரை காத்திருந்தனர். இப்படி உணவுக்காகக் காத்திருந்த காளமேகப் புலவர் பாடிய இரட்டுற மொழிதல் பாடல் என் நினைவுக்கு வந்து சிரிப்பை வரவழைத்தது.

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்றன் சத்திரத்தில் அத்தமிக்கும் போதி லரிசிவரும் – குத்தி உலையிலிட வூரடங்கு மோரகப்பை யன்னம் இலையிலிட வெள்ளி யெழும்.
காளமேக புலவர் பாடிய இரட்டுற மொழிதல் பாடல்

அந்தப் பாடலின் பொருள், நாகையில் உள்ள காத்தான் சத்திரத்தில் சூரியன் அஸ்தமிக்கும்போதுதான் அரிசி வரும். அதை சமைக்க ஆரம்பிக்கும்போது ஊரே தூங்கப் போய்விடும், சமைத்த சாப்பாட்டை இலையில் போடும்போது காலை வந்துவிடும்.

அதுபோல்தான் தேர்தல் பணியாளர்களுக்கு உணவு வழங்குவதும் இருந்தது. ஒரு வழியாக 6 மணிக்கு தேர்தலை முடித்துவிட்டு அறையைப் பூட்டி தேர்தல் பணிகளை முடிக்கும்போது மணி 9 ஆகிவிட்டது. பின்னர், நஞ்சுபோன பென்சில் டப்பாவில் ஏறி தேர்தல் பொருள்களை ஒப்படைத்து முடிக்கும்போது மணி நள்ளிரவு 12. இன்னொரு அதிர்ச்சி அங்கே காத்திருந்தது. என்னுடன் பணி செய்த மொழிபெயர்ப்பாளருக்கு பணம் தர மறுத்துவிட்டார்கள். இரண்டு நாள் கடுமையாக வேலை செய்த ஒரு பெண்ணுக்கு கூலி தரமாட்டேன் என்று சொல்வது என்ன நியாயம் என்று ஆங்கிலத்தில் கேட்க, அவர்கள் மராத்தியில் பேச, வழக்கம்போல அவர்களே வென்றார்கள். என்னுடைய கூலியை அவருக்குக் கொடுத்தேன். அதை வாங்க அந்தப் பெண் மறுத்து விட்டார். தேர்தல் கமிஷன்தானே எனக்கு பணம் தர வேண்டும், நீங்கள் ஏன் தருகிறீர்கள் என்பது அவர் கேள்வி. நியாயமான கேள்வி, என்னிடம் பதிலில்லை. ஆர்வத்தோடு வேலை செய்பவர்களையும் விரக்தியுற செய்து விடுவதில் நமக்கு இணை நாம்தான். மற்றவர்களுக்கு பணத்தை பிரித்துக் கொடுக்கும்போதுதான் நாம் எவ்வளவு மோசமாக இருக்கிறோம் என்று தெரிந்தது.

Representational Image
Representational Image

பயிற்சி உட்பட நான்கு நாள்கள் வேலை செய்ததற்கு கூலி 1,700 ரூபாய். இதில் ஏறக்குறைய 40 மணி நேர தொடர் வேலையும் அடங்கும். இதுதான் ஒரு பூத்தின் தலைமை அதிகாரிக்கான கூலி. தொழிலாளர் சட்டங்கள் வருவதற்கு முன், அடிமைகளைத்தான் இப்படி வேலை வாங்கியிருப்பார்கள் என நினைக்கிறேன். போலீஸுக்கும் பியூனுக்கும் கூலி 600 ரூபாய். ஒருவர் குறைந்தது ஆறு வேலை உணவு உண்ண வேண்டும். ஒரு வேலை உணவு 75 ரூபாய் என்று வைத்துக்கொண்டால்கூட, 450 ரூபாய் உணவுக்கே போய்விடும். மிச்சம் 150 ரூபாய். இந்த நாட்டில் மனித உழைப்புக்கு கிடைக்கும் மரியாதை இதுதான். வீட்டுக்குத் திரும்பியபோது வேப்பிலையை அரைத்துக் குடித்த உணர்வு. பெர்னாட்ஷா தேர்தல் தொடர்பாக சொன்னதை மீண்டும் படியுங்கள்.

- முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

My Vikatan
My Vikatan
அடுத்த கட்டுரைக்கு