Published:Updated:

அஸ்ஸாமில் அசத்தும் ‘அடடே’ காங்கிரஸ்!

அஸ்ஸாம்
பிரீமியம் ஸ்டோரி
அஸ்ஸாம்

தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் இங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ், கடந்த 2016-ம் ஆண்டு பா.ஜ.க-விடம் ஆட்சியை இழந்திருந்தது

அஸ்ஸாமில் அசத்தும் ‘அடடே’ காங்கிரஸ்!

தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் இங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ், கடந்த 2016-ம் ஆண்டு பா.ஜ.க-விடம் ஆட்சியை இழந்திருந்தது

Published:Updated:
அஸ்ஸாம்
பிரீமியம் ஸ்டோரி
அஸ்ஸாம்

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு ஆளுங்கட்சி பலத்துடன் இருக்க வேண்டும். தாங்கள் செய்ய நினைக்கும் நல்ல விஷயங்களை அப்போதுதான் ஓர் அரசு செய்ய முடியும். அதேபோலவே மக்கள் விரோத நடவடிக்கைகளில் அரசு இறங்கினால், அதைத் தடுக்கிற அளவுக்கு வலுவான எதிர்க்கட்சியும் வேண்டும். ஆளுங்கட்சி பலமில்லாமல் இருந்தால், குழப்பமே மிஞ்சும். எதிர்க்கட்சி பலவீனமாக இருந்தால், சர்வாதிகாரத்தை நோக்கி தேசம் செல்லும்.

காங்கிரஸ் கட்சியின் கடந்த காலத் தவறுகளுக்காக அதைக் கடுமையாக விமர்சனம் செய்பவர்கள்கூட, அந்தக்கட்சி கொஞ்சமாவது மீட்சி அடையாதா என ஏங்குகிறார்கள். அது, அந்தக் கட்சியின்மீதான கரிசனம் அல்ல! தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு எதிர்க்குரல் கொடுக்கக்கூடிய வலிமை அந்தக் கட்சிக்கு மட்டுமே இருக்கிறது என்பதால்தான்.

அஸ்ஸாமில் அசத்தும் ‘அடடே’ காங்கிரஸ்!

தமிழகத்துடன் சேர்த்து ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன; மேற்கு வங்காளத்தில் இன்னமும் நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்காளம் மற்றும் தமிழகத்தில் காங்கிரஸுக்குப் பெரிய செல்வாக்கு இல்லை. புதுச்சேரியில் ஆட்சியை இழக்க அது ஆயத்தமாகிவிட்டது. கேரளாவில் நியாயமாக ஆட்சியைப் பிடிக்கும் வேகத்துடன் அது பிரசாரம் செய்திருக்க வேண்டும். ஆனால், அந்த வேகம் காங்கிரஸிடம் இல்லை.

தேர்தல் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யம், அஸ்ஸாம். தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் இங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ், கடந்த 2016-ம் ஆண்டு பா.ஜ.க-விடம் ஆட்சியை இழந்திருந்தது. சர்பானந்த சோனேவால் தலைமையிலான பா.ஜ.க அரசு மீது மக்களுக்குப் பெரிதாக அதிருப்தி இல்லை. இம்முறை மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் முதல்வராகும் வாய்ப்பு உள்ளவராகக் கருதப்படுபவர், பா.ஜ.க-வின் வடகிழக்குப் பிரதேசப் பொறுப்பாளரான ஹிமந்த பிஸ்வா சர்மா. தேர்தல் திட்டங்களிலும், எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதிலும் இந்தியாவிலேயே சிறந்த கில்லாடிகளில் ஒருவர். மற்றவர்களுக்காக இதையெல்லாம் செய்பவர், தனக்காகச் செய்துகொள்ள மாட்டாரா? அதனால் இம்முறை புது வேகத்துடன் அஸ்ஸாமில் களமாடியது பா.ஜ.க. போதாக்குறைக்கு அஸ்ஸாம் காங்கிரஸின் அசைக்கமுடியாத தலைவராக விளங்கிய முன்னாள் முதல்வர் தருண் கோகோய், கடந்த நவம்பரில் மறைந்துவிட்டார். இத்தனை பலவீனங்களுடன் தேர்தல் களத்தில் இறங்கிய காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க-வை மிரள வைத்தது நிஜம்.

 தேர்தலில் தோற்றாலும் ஆட்சியைப் பிடிப்பது எப்படி என்பது பா.ஜ.க-வுக்குத் தெரியும். கோவா, மணிப்பூர், மத்தியப்பிரதேசம், கர்நாடகா எனப் பல மாநிலங்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களைக் கட்சி தாவ வைத்தே ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ‘அஸ்ஸாமில் தொங்கு சட்டமன்றம் அமையக்கூடும்’ என்றே சொல்கின்றன. அப்படி ஒரு சூழல் வந்தால், குதிரை பேரம் நிச்சயம் நிகழும். தமிழகத்துடன் சேர்ந்து மே 2-ம் தேதியே அஸ்ஸாம் தேர்தல் முடிவுகளும் வெளியாகின்றன. அந்த முடிவுகள் வரை காத்திருக்காமல், குதிரை பேரத்துக்கும் வாய்ப்பு தராமல், இப்போதே வேட்பாளர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அள்ளிச் சென்றுவிட்டது காங்கிரஸ். அந்தக் கட்சியின் வேட்பாளர்கள், கூட்டணியில் இருக்கும் ஏ.ஐ.யு.டி.எஃப் கட்சி வேட்பாளர்கள் பலரும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்னொரு கூட்டணிக் கட்சியான போடோலேண்ட் மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் பூட்டான் நாட்டுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். யாரிடமும் அவர்களின் வழக்கமான செல்போன் கிடையாது. காங்கிரஸ் இவ்வளவு சுதாரிப்பாக இருக்கும் என்பதை பா.ஜ.க எதிர்பார்க்கவில்லை.

 உண்மையில் தேர்தல் ஆயத்தங்கள் ஆரம்பித்த நாளிலிருந்தே காங்கிரஸ் ரொம்பவே கவனத்துடன் முடிவுகளை எடுத்தது. 126 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட அஸ்ஸாம் மாநிலத்துக்கான தேர்தலில் 10 கட்சிகளை இணைத்து மெகா கூட்டணி அமைத்தது. கடந்த தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இருந்து, அமைச்சரவையிலும் இடம்பிடித்திருந்த போடோலேண்ட் மக்கள் முன்னணியைத் தங்கள் பக்கம் இழுத்தது, காங்கிரஸின் முக்கியமான மூவ். அஸ்ஸாம் முஸ்லிம் மக்களிடம் கணிசமான செல்வாக்கு பெற்றிருக்கும் ஏ.ஐ.யு.டி.எஃப் கட்சியை இதுவரை காங்கிரஸ் சீண்டியது கிடையாது. கடந்த முறை காங்கிரஸ் ஆட்சியை இழப்பதற்கு ஏ.ஐ.யு.டி.எஃப் கட்சி பிரித்த ஓட்டுகளே முக்கிய காரணம். அந்தக் கட்சியையும் இம்முறை கூட்டணியில் இழுத்துப்போட்டது.

 வழக்கமாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்களாகத் தேர்தல் பணிக்கு வருபவர்கள், நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவார்கள். ஏ.சி அரங்குகளில் கூட்டங்களை நடத்திவிட்டு ஓய்வெடுக்கப் போய்விடுவார்கள். ஆனால், அஸ்ஸாம் மாநிலத் தேர்தல் பொறுப்பாளராக வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கௌகாத்தியில் ஒரு அப்பார்ட்மென்டில் வீடு எடுத்து மூன்று மாதங்கள் அங்கேயே தங்கினார். உள்ளூர்க் கட்சிக்காரர்களுடன் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்வதற்காக பா.ஜ.க பொறுப்பாளர்கள் எப்போதும் இப்படித்தான் செய்வார்கள். அதை அப்படியே பின்பற்றியது காங்கிரஸ்.

 ‘டிசைன் பாக்ஸ்டு’ என்ற சண்டிகர் நிறுவனம்தான் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்குத் திட்டங்கள் வகுத்துக் கொடுத்தது. சமீபத்தில் காங்கிரஸ் சொல்லக்கூடிய வெற்றிகளைப் பெற்றது இந்த இரண்டு மாநிலங்களில்தான். அந்த நிறுவனத்தின் நரேஷ் அரோராவைக் கையோடு கூட்டிவந்தார் ஜிதேந்திர சிங். அவர் சொன்னதையெல்லாம் அப்படியே காங்கிரஸ் பின்பற்றியது.

 அஸ்ஸாம் காங்கிரஸுக்குக் கிடைத்த இன்னொரு பலம், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல். தன்னுடன் 250 பேர் கொண்ட படையை அழைத்து வந்த அவர், மாநிலம் முழுக்கச் சுற்றுப்பயணம் செய்தார். ஒவ்வொரு வாக்குச்சாவடி அளவிலும் இருக்கும் நிர்வாகிகளை ஒருங்கிணைத்துக் கூட்டம் நடத்தினார். வளமான மாநிலத்தின் முதல்வராக இருப்பதால், அஸ்ஸாம் காங்கிரஸில் நிதிப் பற்றாக்குறை ஏற்படாமலும் பார்த்துக்கொண்டார்.

 எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸின் சாபக்கேடு, கோஷ்டி மோதல். அஸ்ஸாமிலும் அதற்குப் பஞ்சம் இல்லை. முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகன் கௌரவ் கோகோய், சுஷ்மிதா தேவ், பிரத்யுத் போர்டோலாய், தேவப்ரதா சைக்கியா என நான்கு பேர் அங்கு முதல்வர் கனவில் இருக்கிறார்கள். நான்கு பேரையும் சண்டை போட விடாமல், மாநிலத்தின் நான்கு மூலைகளிலிருந்து தனித்தனியாக யாத்திரை செல்ல வைத்தார் பூபேஷ் பாகல். நால்வருக்கும் சம அளவு முக்கியத்துவம் தரப்பட்டது. இதனால் அவர்களுக்கு சண்டை போடவே நேரம் இல்லாமல்போய்விட்டது.

அஸ்ஸாமில் அசத்தும் ‘அடடே’ காங்கிரஸ்!

 காங்கிரஸின் பிரதான கூட்டணியான ஏ.ஐ.யு.டி.எஃப் கட்சியின் இஸ்லாமிய அடையாளத்தை வைத்தே காங்கிரஸைக் குறிவைத்தது பா.ஜ.க. இதற்கு நேரடியாக காங்கிரஸ் எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர்கள் மறக்காமல் கோயிலுக்குச் சென்று வழிபட்டு தங்களை ‘பக்தி மிகுந்த இந்துக்களாக’ அடையாளம் காட்டிக்கொண்டனர்.

 ராகுல் காந்தியின் பிரசாரம் எப்போதும் மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்வதாகவே இருக்கும். ஆனால், மோடியின் பாப்புலாரிட்டியை உணர்ந்திருந்தார் பூபேஷ் பாகல். மாநில அரசு மீதும் பெரிய அதிருப்தி இல்லை. எனவே, ‘பா.ஜ.க இதையெல்லாம் செய்தது. நாங்கள் அதற்கும் மேலே உங்களுக்கு நிறைய செய்வோம்’ என்பதாகவே காங்கிரஸின் பிரசாரம் அமைந்தது. ‘குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000’ உள்ளிட்ட ஐந்து வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்தது. வீடுவீடாகச் சென்று செய்யும் பிரசாரத்தில், வாக்குறுதிகள் பற்றியே பேசினர். ஒவ்வொரு வாக்குறுதி பற்றியும் பிரசாரம் செய்ய தனித்தனி டெக்னிக்குகளைக் கண்டுபிடித்தார்கள். உதாரணமாக, ‘ஐந்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு’ என்று ஒரு வாக்குறுதி. இதற்காக இளைஞர்கள் பதிவு செய்துகொள்ள ஓர் இணையதளத்தையே ஆரம்பித்தது காங்கிரஸ். பிரியங்கா காந்தி தன் பிரசாரத்தில் ‘குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000’ என்பது பற்றியே பேசினார்.

அஸ்ஸாம் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், காங்கிரஸ்காரர்களுக்கு அந்த மாநிலம் புது நம்பிக்கையைக் கொடுத்திருப்பது நிஜம். அதனால்தான் அதே சத்தீஸ்கர் மாநிலக் குழுவை இப்போதே உத்தரப்பிரதேசப் பொறுப்பாளர்களாக மேலிடம் நியமித்துள்ளது. திசை தெரியாமல் தடுமாறும் தளபதி ராகுலுக்கு வழிகாட்டும் சிப்பாய்களாக அவர்கள் இருக்கட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism