Election bannerElection banner
Published:Updated:

கரூர்: `6 மாதங்களில் மோடியை அழைத்து வந்து திட்டங்களை நிறைவேற்றுவேன்’ - அண்ணாமலை அதிரடி

நிகழ்ச்சியில் பேசும் அண்ணாமலை
நிகழ்ச்சியில் பேசும் அண்ணாமலை ( நா.ராஜமுருகன் )

தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளில் வெற்றிபெறும். அ.தி.மு.க., பா.ஜ.க கட்சிகளைப் பொறுத்தவரை இரட்டை இன்ஜின் பொருத்திய ரயில்போல் செயல்படும். அந்த ரயிலின் முதல்வர் பழனிசாமி ஓர் இன்ஜினாகவும், பிரதமர் மோடி மற்றோர் இன்ஜினாகவும் இருந்து செயல்படுகிறார்கள்.

``என்னை அரவக்குறிச்சி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற வைத்தால், பிரதமர் மோடியை அரவக்குறிச்சிக்கு அழைத்துவந்து, ஆறு மாதங்களுக்குள் தொகுதியில் திட்டப்பணிகளை அறிவிக்கச் செய்வேன்" என்று வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், அரவக்குறிச்சி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை பேசியிருக்கிறார்.

நிகழ்ச்சியில் பேசும் அண்ணாமலை
நிகழ்ச்சியில் பேசும் அண்ணாமலை
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டத்தில், கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை மற்றும் அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில், கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அரவக்குறிச்சி தொகுதி, கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் பா.ஜ.க-வின் துணைத் தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தனது சொந்த கிராமமுள்ள தொகுதியில் களமிறங்குகிறார்.

`கரூரில் திமுக-வை செந்தில் பாலாஜி ஒழித்துக்கட்டிவிட்டார்!' - தம்பிதுரை

அரவக்குறிச்சியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், பா.ஜ.க வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பா.ஜ.க நிகழ்ச்சி
பா.ஜ.க நிகழ்ச்சி
நா.ராஜமுருகன்

இந்தக் கூட்டத்தில் பேசிய, அண்ணாமலை, ``அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றிபெற்று, ஆறு மாதங்களுக்குள் பிரதமர் மோடியை இதே இடத்துக்கு அழைத்து வந்து அவர் வாயால், அரவக்குறிச்சி தொகுதிக்குப் பல்வேறு திட்டங்களை அறிவிக்க வைப்பேன். தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி 3-ல் 2 பங்கு தொகுதிகளில் வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க., பா.ஜ.க கட்சிகளைப் பொறுத்தவரை இரட்டை இன்ஜின் பொருத்திய ரயில்போல் செயல்படும். அந்த ரயிலின் முதல்வர் பழனிசாமி ஓர் இன்ஜினாகவும், பிரதமர் மோடி மற்றோர் இன்ஜினாகவும் இருந்து செயல்படுகிறார்கள். நீங்கள் வேட்பாளரைப் பார்த்து, வெற்றிநடை போடும் தமிழகத்தைப் பார்த்து வாக்களியுங்கள்.

ஜெயலலிதா மறைந்தவுடன், அ.தி.மு.க-வுக்கு பக்கபலமாக இருந்தது பா.ஜ.க-தான். நான் சட்டமன்ற உறுப்பினரானதும், அரவக்குறிச்சி தொகுதியில் நீர் மேலாண்மை, வேலைவாய்ப்பு, அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவேன். அரவக்குறிச்சியில் பா.ஜ.க-வுக்கு விழக்கூடிய ஒவ்வொரு வாக்கும் அ.தி.மு.க-வை பலப்படுத்தும் வாக்காகவே அமையும்.

நிகழ்ச்சியில் பேசும் அண்ணாமலை
நிகழ்ச்சியில் பேசும் அண்ணாமலை
நா.ராஜமுருகன்

ஏதோ ஒருசில விஷயங்களுக்காக வாக்கை அடமானம் வைத்திட வேண்டாம். வரும் ஐந்து ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவும், எனக்கு சட்டசபையிலும் வாய்ப்பு தர வேண்டும். அப்போது, மத்திய அரசிடமிருந்து என்னென்ன திட்டங்கள், சலுகைகளைக் கொண்டு வர முடியுமோ, அதைப் பெற்றுத்தந்து, மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படும்" என்றார்.

அதைத் தொடர்ந்து, அரவக்குறிச்சியில் தேர்தல் பணிமனையை, பா.ஜ.க கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான ரவி திறந்துவைத்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு