Published:Updated:

``நாங்குநேரியில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்!'' - வசந்தகுமார் போடும் கணக்கு

"நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்" எனக் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

வசந்தகுமார் எம்.பி
வசந்தகுமார் எம்.பி

கன்னியாகுமரி மாவட்டம், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஹெச்.வசந்தகுமார். கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதனால், அந்தத் தொகுதி காலியானது. விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி இறந்ததையடுத்து, அந்தத் தொகுதியும் காலியாக உள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இதையடுத்து, விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம், அனல் பறக்கிறது. இரு தொகுதிகளிலும் வரும் 21-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் விக்கிரவாண்டியில் தி.மு.க-வும் வென்றிருந்தன. தற்போதும் அதேநிலை தொடரும் எனத் தி.மு.க கூட்டணிக்குள் பேசி முடிவுசெய்யப்பட்டது. அ.தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரையில், இரண்டு இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க மட்டுமே போட்டியிடுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் புகழேந்தியும், அ.தி.மு.க சார்பில் முத்தமிழ்ச்செல்வனும் களத்தில் உள்ளனர்.

ரூபி மனோகரன்
ரூபி மனோகரன்

முக்கியக் கட்சிகளோடு 12 சுயேச்சை வேட்பாளர்களும் விக்கிரவாண்டித் தொகுதியில் இதுவரை வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். நாங்குநேரியில் தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் நாராயணன் போட்டியிடுகிறார்.

நாங்குநேரியில் இதுவரை காங்கிரஸ் அதிகமுறை வென்றிருக்கிறது. இந்தமுறையும் நிச்சயம் வெற்றிபெறுவோம் என பிரசாரம் செய்து வருகிறார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலினும் நாங்குநேரி தொகுதியில் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி நாங்குநேரியில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமார், தேர்தல் பணிகள் குறித்துக் கூறுகையில், ''கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் 74,932 வாக்குகள் பெற்றது.

வசந்தகுமார்
வசந்தகுமார்

இரண்டாம் இடம்பெற்ற அ.தி.மு.க 57,617 வாக்குகள் பெற்றது. இந்த முறை காங்கிரஸ் 50,000 வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றிபெறும். காங்கிரஸ் வேட்பாளர் மக்களின் வேட்பாளர். தொகுதிக்காகத் தொடர்ந்து உழைக்கக்கூடியவர். நாங்குநேரிக்குப் பல திட்டங்களைக் காங்கிரஸ் கட்சி கொண்டுவந்து செயல்படுத்தியுள்ளது. அதேபோல், எங்கள் வேட்பாளர் வெற்றிபெற்றால், நாங்குநேரி தொகுதிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுத் தருவார்'' என்றார்.