மகாராஷ்டிராவில் ஐந்து சட்டமேலவைத் தொகுதிகளுக்கு கடந்த 30-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. நாசிக், அமராவதி தொகுதியிலும், கொங்கன், நாக்பூர், ஒளரங்காபாத் தொகுதியிலும் தேர்தல் நடந்தது. இதில் நாசிக் தொகுதிதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய சத்யஜித் தாம்பே சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். அவரின் தந்தையை காங்கிரஸ் கட்சி போட்டியிடச் சொன்னது.

ஆனால் அவர் போட்டியிடாமல் தன்னுடைய மகனை சுயேச்சையாகப் போட்டியிட வைத்திருக்கிறார். அவருக்கு பா.ஜ.க வெளிப்படையாக ஆதரவு கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் ராதாகிருஷ்ண விகே பாட்டீலுக்கும், பாலா சாஹேப் தோரட் குடும்பத்துக்குமிடையே ஏற்பட்ட குடும்பப் பகையால் சத்யஜித் தாம்பே தனித்துப் போட்டியிட்டார்.
வாக்குகள் எண்ணப்பட்டதில் கொங்கன் தொகுதியில் பா.ஜ.க-வின் ஞானேஷ்வர் மாத்ரே வெற்றிபெற்றிருக்கிறார். துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் சொந்த ஊரான நாக்பூரில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட சுதாகர் வெற்றிபெற்றிருக்கிறார். இது பா.ஜ.க-வுக்கு, குறிப்பாக தேவேந்திர பட்னாவிஸுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும், நாக்பூர் சொந்த ஊராகும். அதேபோல் ஒளரங்காபாத் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட விக்ரம் காலே வெற்றிபெற்றிருக்கிறார்.
அமராவதி தொகுதியில் மகாவிகாஷ் அகாடி சார்பாகப் போட்டியிட்ட தீரஜ் லிங்காடே தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். அப்போது அங்கு பா.ஜ.க-வினர் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தினர். அதோடு தேர்தல் கமிஷனை அணுகப்போவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

நாசிக் தொகுதியில் கடும் போட்டி நிலவியது. முதல் சுற்று எண்ணி முடித்தபோது சில வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று சத்யஜித் தாம்பே முன்னிலை பெற்றார். அதற்குள் அவரின் ஆதரவாளர்கள் புனேயில் வெற்றி பேனர்களை வைத்தனர். அதோடு வாக்குகள் எண்ணியபோது இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் கூடியதால் சிக்கல் ஏற்பட்டது. இறுதியில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டபோது சத்யஜித் தாம்பே 20 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். ஐந்து தொகுதியில் பா.ஜ.க ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. பா.ஜ.க சார்பாக சுயேச்சையாக போட்டியிட்ட சத்யஜித் தாம்பேயும் வெற்றிபெற்றிருக்கிறார்.