Published:Updated:

`தி.மு.க மாவட்டச் செயலாளர் அவமானப்படுத்தினார்!' - தஞ்சையில் தனித்துப் போட்டியிடும் சி.பி.எம்

துரை.சந்திரசேகர்
துரை.சந்திரசேகர் ( Twitter )

``முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, பழனிமாணிக்கம் மாதிரியான சீனியர்கள், கூட்டணிக் கட்சிக்காரங்களை மதிக்கக்கூடியவங்களா இருந்தாங்க''.

`தஞ்சை தி.மு.க மாவட்டச் செயலாளரும், திருவையாறு தொகுதி எம்.எல்.ஏவுமான துரை.சந்திரசேகர் கூட்டணி தர்மத்தை கொஞ்சம் கூட மதிக்கவில்லை. இவரது பக்குவமற்ற அணுகுமுறையினால் உள்ளாட்சித் தேர்தலில் எங்களது கட்சி தஞ்சையில் தனித்துப் போட்டியிடுகிறோம்'' என்று சி.பி.எம் தோழர்கள் கொந்தளிக்கிறார்கள்.

தஞ்சை
தஞ்சை

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி,மு,க-வும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் ஒன்றாகக் கைகோத்தது. இடைத்தேர்தலிலும் தொடர்ந்த இக்கூட்டணி, தற்போது நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது. இந்நிலையில்தான் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது, தஞ்சை தி.மு.க மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகர் தங்களை அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொண்டதால், இங்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் நிர்வாகிகள் கொந்தளிப்புடன் பேசுகிறார்கள்.

இதுதொடர்பாக சி.பி.எம் தரப்பில் பேசினோம்.``கருணாநிதியும், ஸ்டாலினும் கூட்டணிக் கட்சிகளை மதிச்சு நடக்கக்கூடியவங்க. உள்ளூர் அளவுல பார்த்தாலும் கூட, முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, பழனிமாணிக்கம் மாதிரியான சீனியர்கள், கூட்டணிக் கட்சிக்காரங்களை மதிக்கக்கூடியவங்களா இருந்தாங்க. ஆனால் இப்ப தி,மு,க., மாவட்டச் செயலாளராக இருக்கக்கூடிய துரை.சந்திரசேகர், எங்ககிட்ட ரொம்பவே ஆணவமா நடந்துகிட்டார்.

தி.மு.க
தி.மு.க

கூட்டணி தர்மம்னாலே அவருக்கு என்னனு தெரியலை. இது விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைஞ்ச பகுதியா இருக்குறதுனால. எங்க கட்சிக்கு கிராமப்புறங்கள்ல கணிசமான வாக்குகள் இருக்கு. இதனாலதான், `தஞ்சை தெற்கு மாவட்டத்துல, ஒன்றிய கவுன்சிலுக்கு ஒரு உறுப்பினர் வீதம், எங்களுக்கு ஒதுக்கணும்'னு கேட்டோம். அப்படி ஒதுக்கியிருந்தா, இந்தக் கூட்டணியில எங்க கட்சி, 20-க்கும் மேற்பட்ட ஒன்றிய கவுன்சில் இடங்களுக்குப் போட்டியிட்டு இருப்போம். அவ்வளவு கொடுக்க முடியாதுனு துரை.சந்திரசேகர் சொன்னார். பத்து கோட்டோம். அதுவும் முடியாதுனு சொல்லிட்டார். ஐந்து இடங்களாவது ஒதுக்குவாருனு எதிர்பார்த்தோம். ஆனால் எங்களை அவமானப்படுத்துற மாதிரி, இரண்டே இடங்கள், அதுவும், எங்களுக்குச் செல்வாக்கு இல்லாத ஊர்கள்ல கொடுத்தார்.

பூதலூர் ஒன்றியத்துல எங்க கட்சிக்குச் செல்வாக்கு அதிகம்னு எல்லாருக்குமே தெரியும். அங்க சி.பி.எம் கூட்டணியில இருந்தால்தான், தி.மு.க அதிக இடங்கள்ல ஜெயிச்சு, ஒன்றிய கவுன்சில் தலைவர் பதவியைக் கைப்பற்ற முடியும். அதுமாதிரி நடந்தா, தி.மு.க-வைச் சேர்ந்த செல்லக்கண்ணுதான் தலைவரா வருவார். அவரை துரை.சந்திரசேகருக்குப் பிடிக்காது. அதனாலதான் எங்க கூட்டணியை முறிச்சு, அ.தி.மு.க-வுக்கு சாதகமான சூழலை உருவாக்கப் பார்க்குறார். மாவட்ட கவுன்சில்ல ஒரே ஒரு உறுப்பினர் இடம் கேட்டோம். அதையும் தர மறுத்துட்டார். `தஞ்சை வடக்கு மாவட்டம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கள்ல, சி.பி.எம்.-க்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுருக்கு. அதுமாதிரி நீங்களும் கூட்டணி தர்மத்தை மதிச்சு, எங்களுக்குக் கூடுதல் இடங்கள் கொடுக்கணும்'னு துரை.சந்திரசேகரிடம் சொன்னோம்.

உள்ளாட்சித் தேர்தல் குறித்த உங்கள் சந்தேகங்கள்.. வாசகர்களே ஒரு நிமிஷம் ப்ளீஸ்! #DoubtOfCommonMan

உடனே, அவர் டென்ஷனாகி, அந்தந்த மாவட்டங்கள்ல உள்ள தி.மு.க நிர்வாகிகள் கிட்ட பேசி, அங்கயும் சி.பி.எம்.-க்கான இடங்களைக் குறைக்க வெச்சிட்டார். இதுமாதிரியான ஒரு அவமானம், இதுக்கு முன்னாடி எங்களுக்கு நடந்தது இல்லை. இதனால்தான் தஞ்சையில நாங்க தனித்துப் போட்டியிட முடிவு செஞ்சிருக்கோம்'' என ஆதங்கப்பட்டார்கள்.

துரை.சந்திரசேகர் தரப்பிலோ, ``கூட்டணி தர்மத்தை மதிச்சி, அதுக்கேத்த மாதிரிதான் பேச்சுவார்த்தை நடத்தினோம். துரை.சந்திரசேகர், கூட்டணிக் கட்சிகளை மதிச்சி நடக்கக்கூடியவர். ஆனால், சி.பி.எம் அதிக இடங்கள்ல போட்டியிட்டு, அ.தி.மு.க-வை எதிர்த்து நின்னு ஜெயிக்குறது ரொம்பக் கஷ்டம். தி.மு.க-வாலதான் ஜெயிக்க முடியும். யதார்த்த நிலையை அவங்க புரிஞ்சிக்கணும்” என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு