திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர்மன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மருமகள்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மன்னார்குடி நகர்மன்றத்தில் மொத்தம் 33 வார்டுகள். இதில் 26 வார்டுகளில் திமுக-வும், 4 வார்டுகளில் அதிமுக-வும், 2 வார்டுகளில் அ.ம.மு.கவும், ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளார்கள். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி ஆகிய நான்கு நகராட்சிகளுக்கும் வலங்கைமான், நீடாமங்கலம், பேரளம், நன்னிலம், குடவாசல், கொராடச்சேரி, முத்துப்பேட்டை ஆகிய 7 பேரூராட்சிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் பெரும்பாலான வார்டுகளில் தி.மு.க கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.
இதற்கிடையில் மன்னார்குடி நகர்மன்றத் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மருமகள்களான செந்தில்செல்வி ஆனந்தராஜூம், திருச்செல்வி அமிர்தராஜூம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றி பெற்றிருப்பது இப்பகுதி சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.
அ.ம.மு.க-வின் மன்னார்குடி நகரச் செயலாளராக இருப்பவர் ஆனந்தராஜ். இவர் மூன்று முறை நகர்மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரின் மனைவி செந்தில்செல்வி ஆனந்தாஜ், 23-வது வார்டில் அ.ம.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டார். இதே வார்டில் தி.மு.க சார்பில் மகேஷ்வரி என்பவரும், அ.தி.மு.க சார்பில் சூர்யா பாலாஜி என்பவரும் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட நிலையில், செந்தில்செல்வி ஆனந்தராஜ் 578 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஆனந்தராஜின் சகோதரர் அமிர்தாஜ், அ.ம.மு.கவின் அம்மா பேரவை மாவட்ட துணைச்செயலாளர். இவரின் மனைவி திருச்செல்வி அமிர்தராஜ் 33-வது வார்டில் போட்டியிட்டார். இதே வார்டில் அ.தி.மு.க சார்பில் விநாயகி முருகேசன் என்பவரும், தி.மு.க சார்பில் சுதா தட்சணாமூர்த்தி என்பவரும் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். இந்நிலையில் திருச்செல்வி அமிர்தராஜ் 1050 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.