Published:Updated:

டெல்லியில் மூன்றாவது முறையாக அரியணையில் கெஜ்ரிவால்... ஆம் ஆத்மி மகுடம் சூடியது எப்படி?

கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சி அமோகமாக வென்று ஆட்சி அமைக்கவிருக்கிறது.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று, கடந்த முறை போலவே அருதிப் பெரும்பான்மையோடு ஆட்சிக் கட்டிலில் அமரவிருக்கிறது ஆம் ஆத்மி.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற இமாலய வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களில், பா.ஜ.க தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்துவருகிறது. தேசியக் கட்சியாக வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டு, டெல்லிக்குள்ளே சுருங்கிப்போனது ஆம் ஆத்மி. 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த டெல்லியில், கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியாமல்போனது.

டெல்லி தேர்தல்
டெல்லி தேர்தல்

எனவே, டெல்லி தேர்தல் மூன்று கட்சிகளுக்கும் முக்கியமானதாகவே பார்க்கப்பட்டது. ஆட்சியைத் தக்கவைத்துவிட வேண்டும் என ஆம் ஆத்மியும், ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என பா.ஜ.க-வும், இழந்த செல்வாக்கை மீட்டுவிட வேண்டும் என காங்கிரஸும் போட்டியிட்டன. கருத்துக் கணிப்புகளுமே ஆம் ஆத்மி அருதிப் பெரும்பான்மையோடு வெற்றிபெறும் என்றும், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ், முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் என்றும் தெரிவித்தன.

கருத்துக் கணிப்புகளின்படியே ஆம் ஆத்மி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது. பா.ஜ.க-வின் வாக்கு வங்கி, கடந்த தேர்தலைவிடவும் அதிகரித்திருந்தாலும் அதிக இடங்களில் வெற்றிபெற முடியவில்லை. காங்கிரஸின் வாக்கு வங்கி ஐந்து சதவிகிதத்துக்கும் கீழ் சென்றுள்ளது.

பா.ஜ.க வலையில் சிக்காத கெஜ்ரிவால்?

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடங்கி சி.ஏ.ஏ வரை தேசிய விவகாரங்களையே பா.ஜ.க டெல்லி தேர்தல் பிரசாரத்தில் முன்னிறுத்தியது. சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களை காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தான் தூண்டிவிடுவதாக பா.ஜ.க குற்றம் சாட்டியிருந்தது. பா,ஜ.க-வின் எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆம் ஆத்மி கட்சி முக்கியத்துவம் தரவே இல்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில், டெல்லியில் மேம்படுத்தப்பட்ட அரசுப் பள்ளிகள், புதிதாகத் தொடங்கப்பட்ட மொஹல்லா சுகாதார நிலையங்கள் போன்ற வளர்ச்சித் திட்டங்களையே தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி விவாதப் பொருளாக முன்னிறுத்தியது. கடந்த தேர்தல்களில் காங்கிரஸை வாட்டிவதைத்த காமன்வெல்த், 2ஜி போன்ற எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டுகளும் ஆம் ஆத்மி மீது எழுப்பப்படவில்லை என்பதும் அதற்கு ஒரு சாதகமான அம்சமாகப் பார்க்கப்பட்டது.

மோடி - கெஜ்ரிவால்
மோடி - கெஜ்ரிவால்

சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்கள், உத்தரப் பிரதேசத்தை அடுத்து டெல்லியில்தான் அடக்குமுறை கொண்டு கையாளப்பட்டது. ஜாமியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை நடந்துகொண்ட விதமும், ஜே.என்.யூ-வில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலும் அனைத்து எதிர்க்கட்சிகளாலும் கண்டிக்கப்பட்டன. ஆனால், டெல்லியை ஆளுகின்ற ஆம் ஆத்மி, இந்த விவகாரங்களிலிருந்து விலகியே நின்றது. ஜாமியா, ஜே.என்.யூ-வுக்கு பல எதிர்க்கட்சித் தலைவர்கள் வந்தபோதிலும் கெஜ்ரிவாலோ அல்லது ஆம் ஆத்மியைச் சேர்ந்த மற்ற தலைவர்களோ அங்கு செல்வதைத் தவிர்த்தனர்.

சி.ஏ.ஏ-வுக்கு எதிராக 50 நாட்களாக ஷாகின் பாக் பகுதியில் நடைபெற்றுவரும் போராட்டத்துக்கு, காங்கிரஸும் ஆம் ஆத்மியும் நிதியுதவியளிப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டியது. ஷாகின் பா போராட்டத்துக்கு பாகிஸ்தான் ஆதரவோடு ஆம் ஆத்மி பிரியாணி வழங்குவதாக, யோகி ஆதித்யநாத் டெல்லி தேர்தல் பிரசாரத்தின்போது பேசியிருந்தார்.

`பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' - எடப்பாடியின் அதிரடிக்குப் பின்னால் அக்கறையா... அரசியலா?

ஆனால், இதற்குப் பதிலடிகொடுத்த அரவிந்த் கெஜ்ரிவால், ''போராட்டம் தொடர்ந்து நீடித்திருக்க பா.ஜ.க தான் காரணம். காவல்துறை டெல்லி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்திருந்தால், இரண்டு மணி நேரத்தில் ஷாகின் பாக் போராட்டத்தை அப்புறப்படுத்தியிருப்போம்” என்றார்.

டெல்லியில் மொஹல்லா சுகாதார நிலையங்கள் அமையப்பெற்ற கிட்டத்தட்ட 40 தொகுதிகளில், 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வளர்ச்சித் திட்டங்களை மையப்படுத்திய ஆம் ஆத்மியின் பிரசாரம் வெற்றி பெற்றிருப்பதற்கு இதுவும் ஒரு சான்று.

மொஹல்லா சுகாதார நிலையம்
மொஹல்லா சுகாதார நிலையம்

தேசிய அளவில் காங்கிரஸ் சி.ஏ.ஏ-வை மூர்க்கமாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க வீசிய இந்துத்துவ வலையில் சிக்காமல் உள்ளூர் விவகாரங்களிலே ஆம் ஆத்மி கவனம் செலுத்தியதும் அதன் வெற்றிக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

பா.ஜ.க - காங்கிரஸில் பல மூத்த தலைவர்கள் இருந்தபோதிலும் டெல்லி தேர்தலில் அந்தக் கட்சிகளின் சார்பில் முதல்வர் வேட்பாளர் முன்னிறுத்தப்படவில்லை. இதைக் குறிவைத்தே டெல்லிக்கு முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு விவாதிக்கத் தயாரா என்று கெஜ்ரிவால் பா.ஜ.க-வுக்கு சவால் விட்டிருந்தார். இதுவும் ஆம் ஆத்மிக்கு சாதகமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது.

பா.ஜ.க-வுக்கு தொடரும் வனவாசம்?

1998-க்குப் பிறகு, டெல்லியில் ஆட்சி அமைக்க முடியாமல் பா.ஜ.க தவித்துவருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும் அதன் வாக்கு சதவிகிதம் கிட்டத்தட்ட 10% வரை உயர்ந்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும், மக்கள் ஒரே மாதிரி வாக்களிப்பதில்லை என்பது சமீபத்திய தேர்தல் முடிவுகளில் தெளிவாகியிருந்தது. நாட்டின் அனைத்து எல்லைகளிலும் தடம்பதித்துவிட்ட பா.ஜ.க-வுக்கு தென்னிந்தியாவும் தலைநகர் டெல்லியுமே தலைவலியாக இருந்துவருகின்றன.

பா.ஜ.க - காங்கிரஸ்
பா.ஜ.க - காங்கிரஸ்

வரலாறு காணாத பின்னடைவில் காங்கிரஸ்:

காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி ஐந்து சதவிகிதத்துக்கும் குறைந்துள்ளது. ஷீலா தீக்‌ஷித்துக்குப் பிறகு, டெல்லியில் காங்கிரஸுக்கு பிரபலமான முகமே இல்லை என்கிற கருத்தைப் பல காங்கிரஸ் தலைவர்களும் தெரிவித்துவருகின்றனர். வலுவாக இருக்கின்ற மாநிலங்களில் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி இழந்துவருகிறது. அனைத்து நிலைகளிலும் வலுவிழந்துவிட்ட கட்சியை, அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்த வேண்டும் என்கிற கருத்தும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு