Published:Updated:

`உங்க ஓட்டை வேறொருவர் போட்டுட்டா நீங்க செய்ய வேண்டியது இதுதான்!' - முருகதாஸின் `சர்கார்' ரகசியம்

நாளை (06.04.2021) காலையில் தமிழக சட்டமன்றத் தேர்தல். வாக்குச்சாவடிக்குச் செல்கிறீர்கள். பூத்துக்குள் நுழைந்து உங்கள் பெயரைச் சொன்னதும்... `அடடே... உங்க ஓட்டு ஏற்கெனவே பதிவாகியிருக்குதே' இப்படிச் சொன்னால் என்ன செய்வீர்கள்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாளை (06.04.2021) காலையில் தமிழக சட்டமன்றத் தேர்தல். வாக்குச்சாவடிக்குச் செல்கிறீர்கள். பூத்துக்குள் நுழைந்து உங்கள் பெயரைச் சொன்னதும்...
`அடடே... உங்க ஓட்டு ஏற்கெனவே பதிவாகியிருக்குதே'
இப்படிச் சொன்னால் என்ன செய்வீர்கள்?
`தலையெழுத்தே' என்று திரும்பிவிடுவீர்களா... அல்லது
`ஒரு விரல்... புரட்சியே... இருக்குதா உணர்ச்சியே!' - இப்படி `சர்க்கார்' விஜய் போல பாடிக்கொண்டே எதிர்ப்புக் காட்டுவீர்களா? எதிர்ப்புக் காட்டுவதுதான் சாத்தியமா? நிச்சயமாகச் சாத்தியமே! ஆனால், அதற்குத் தேவை கொஞ்சம் துணிச்சல் மட்டுமே.

வாக்குச்சாவடியில் இருக்கும் அதிகாரிகள் ஆரம்பித்து, தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் வரைகூட பேச வேண்டியிருக்கலாம். நீங்கள் என்ன பேசியும் அவர்கள் கொஞ்சம்கூட மசியாமல், `அதெல்லாம் போட்டாச்சு போட்டாச்சு போ' என்று உங்களை விரட்டுவதிலேயே குறியாகவும் இருக்கலாம். ஆனால், துணிச்சலோடு தொடர்ந்து எதிர்கொண்டால்... உங்களுடைய வாக்கை நிச்சயமாகப் பதிவு செய்யலாம். இதைப் பற்றிக் கடைசியாகப் பார்ப்போம்.

ஆனந்த விகடனில் வரையப்பட்ட கார்ட்டூன்
ஆனந்த விகடனில் வரையப்பட்ட கார்ட்டூன்

அதற்கு முன்பாக, கள்ள ஓட்டு போடப்படுவது குறித்தும், அதைச் சட்டரீதியாக எப்படி அணுகுவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2018-ம் ஆண்டு `சர்கார்' திரைப்படத்தை இயக்கி வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸிடம் கொஞ்சம் பேசுவோம்.

`கள்ள ஓட்டு' என்கிற ஒரு விஷயத்துக்காக ஒரு திரைப்படத்தையே இயக்குவதற்கு அவருக்கு தூண்டுகோலாக இருந்தது எது? என்பது பற்றி பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், ``ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்கு என்பது அடிப்படை உரிமை. மக்களின், தங்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்து எடுக்கும் உரிமையைத் தட்டிப்பறிப்பது சட்டவிரோதத்தின் உச்சம். அதை அடிப்படையாக வைத்து, அவ்வாறு கள்ளவோட்டு போடப்பட்டால், இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள 49-பி (Section-49P) என்கிற சட்டப்பிரிவைப் பயன்படுத்தி எவ்வாறு வாக்கை செலுத்தலாம் என்று விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

ஒரு தனி மனிதன், தன்னுடைய ஓட்டு கள்ளத்தனமாக போடப்பட்டுவிட்டால், சட்டபூர்வமாகத் தன்னுடைய வாக்கை மீண்டும் பெற்றுவிட முடியும். அதாவது, தன்னுடைய வாக்கை அவன் செலுத்திவிட முடியும். ஆனால், `இப்படி தனி ஒருவன் வாக்கைச் செலுத்துவதால் நாட்டில் என்ன பெரிய தாக்கம் ஏற்பட்டுவிடப் போகிறது' என்றுதான் பலருக்கும் தோன்றும். இந்தக் கதையை உருவாக்கியபோது எனக்குள்ளும் இதேகேள்வி இருந்தது. ஆனால், ஒரு காலத்தில் ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன், தனிமனிதராக மேற்கொண்ட ஒரு சட்டப்போராட்டம்தான் அந்தக் கேள்விக்கான பதிலை எனக்குத் தந்தது. படத்திலும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இதே கேள்வியை ஒரு பத்திரிகை நிருபர் விஜய்யிடம் எழுப்புவது போலவும், விஜய் பதில் அளிப்பதுபோலவும் காட்சியை ஆரம்பத்தில் வைத்திருந்தோம்.

ஃபோட்டோ பிரேம் போடப்பட்ட அபராதத் தொகை
ஃபோட்டோ பிரேம் போடப்பட்ட அபராதத் தொகை

`என்னோட ஒரு ஓட்டுனால என்ன மாறப்போகுதுனு கேக்குறீங்க. இதுக்கு உங்களுக்கு நான் ஒரு நல்ல உதாரணம் சொல்லுறேன். கொஞ்ச வருஷங்களுக்கு முன்ன சட்டமன்ற உறுப்பினர்களை விமர்சனம் செய்து ஆனந்த விகடன் பத்திரிகையில அட்டைப்பட கார்ட்டூன் வந்துது. அதுக்காக, விகடன் ஆசிரியரை அன்றைய ஆட்சியாளர்கள் சிறையிலடைச்சாங்க. இதுக்கு எதிரா சட்டப்போராட்டத்தை நடத்தினார் விகடன் ஆசிரியர். அரசாங்கம் செய்தது தவறுனு கண்டிச்ச நீதிமன்றம், அதுக்காக அபராதமும் விதிச்சாங்க. ஆயிரம் ரூபாய்தான் அபராதம். ஆனாலும், ஒரு அரசாங்கமே தலைகுனிஞ்சி நின்ன தருணம் அது. அபராதம் வாங்குறது விகடன் ஆசிரியரோட நோக்கம் இல்ல. கருத்து கூறுவது அடிப்படை உரிமை. சட்டத்துக்குப் புறம்பா எதையும் செய்யல அப்படிங்கறத நிலைநாட்டுறதுதான் அவரோட நோக்காமா இருந்துச்சு.

இதில் கிடைச்ச வெற்றியை விகடன் நிறுவனத்தோட வெற்றியா மட்டும் கருதாம, ஜனநாயகத்தின் வெற்றியா, கருத்துச் சுதந்திரத்துக்குக் கிடைச்ச வெற்றியா பிரகடனப்படுத்தின விகடன் ஆசிரியர், அந்த அபராதத் தொகையை அப்படியே ஃபோட்டோ பிரேம் போட்டு தன்னோட ஆபீஸ் ரூம்ல மாட்டி வெச்சார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு பத்திரிகை நிறுவனம், அரசு என்கிற மிகப்பெரிய இயந்திரத்தை எதிர்த்து நேர்மையாக வெற்றிபெற்ற விஷயம் ஒரு வரலாறு. இந்த விஷயத்தை சில வருஷங்களுக்குப் பிறகுதான் நான் கேள்விப்பட்டேன். இது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தினதோட நம்பிக்கையையும் கொடுத்துச்சு. இதே விஷயத்தைதான் `சர்கார்' விஜய் கையில எடுப்பார். அதை சட்டரீதியாக கையாள்வார். `ஒருத்தரோட ஓட்டு, கள்ள ஓட்டா போடப்பட்டதற்கு காரணமான அரசாங்க எந்திரத்தை எதிர்த்து, எந்த ஒரு தனி மனிதனும் போராடி மாற்றத்தைக் கொண்டு வரமுடியும்கிற நம்பிக்கையை விதைச்சு ஜெயிச்சுக் காட்டுவேன்'னு அந்த சீனில் விஜய் பேசியிருப்பார்.
ஆனா, அந்த சீன் படத்துல வரல. நான் மிகவும் விரும்பி இயக்கின சீன். படத்தோட நீளம் காரணமா கடைசியில எடிட்டிங்ல நீக்கியாச்சு. ஆனாலும், ஒட்டுமொத்த படமும் பேசினது அந்த விஷயத்தைதான்" என்று சொன்னார் முருகதாஸ்.

இங்கே ஒரு ஒற்றுமை. இந்தப் பிரச்னைக்காக ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன் கைது செய்யப்பட்டது ஏப்ரல் 4, 1987. ஆம், நேற்றுடன் 34 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

 அப்போது வெளியான ஜுனியர் விகடன் அட்டைப்படம்
அப்போது வெளியான ஜுனியர் விகடன் அட்டைப்படம்
Arivazhagan S

சரி, நம் ஓட்டு கள்ளத்தனமாகப் போடப்பட்டுவிட்டால் என்ன செய்வது?
வாக்குச்சாவடி அதிகாரியிடம் நாம் பேச வேண்டும். அவர், கள்ள ஓட்டு போடப்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு, படிவம்- 17பி (Form- 17B) என்பதைக் கொடுப்பார். அதன் மூலமாக நாம் விரும்பிய வேட்பாளருக்கு ஓட்டுப் போட முடியும். இதை டெண்டர் ஓட்டு முறை என்பார்கள். இந்த ஓட்டு சீலிடப்பட்ட கவரில் வைத்து, பத்திரப்படுத்தப்படும். ஒருவேளை வாக்கு எண்ணிக்கை முடிவில் இழுபறி நிலை நீடித்தால் மட்டுமே இந்த டெண்டர் ஓட்டு கணக்கில் எடுக்கப்படும். அதுவும்கூட நீதிமன்ற வரம்புக்குட்பட்டது. அதாவது, நாம் வாக்களித்த வேட்பாளரும் எதிர்த்தரப்பு வேட்பாளரும் சமநிலையில் இருக்கும்பட்சத்தில் நம்முடைய ஓட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதனடிப்படையிலேயே இறுதி முடிவெடுக்கப்படும்.
ஆக, செய்வோம்... ஒரு விரல் புரட்சி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு