Published:Updated:

`உதயசூரியனை எதிர்த்துக் களமிறங்கும் கை சின்னம்!' -உடன்பிறப்புகளைக் கலங்கவைத்த கன்னியாகுமரி

மாவட்டப் பஞ்சாயத்தின் 6 வார்டுகளில் 3 வார்டுகளில் காங்கிரஸ் சிட்டிங் கவுன்சிலர்கள் இருந்த பகுதி. அவற்றைக் கூட்டணிக் கட்சியினர் விட்டுத் தராததால் தனித்துப் போட்டியிடும் சூழல் ஏற்பட்டது.

கே.எஸ்.அழகிரியுடன் ஸ்டாலின்
கே.எஸ்.அழகிரியுடன் ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறும் முனைப்பில் தி.மு.க கூட்டணியும் அ.தி.மு.க கூட்டணியும் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன. ஊரக உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் ஒன்றிய கவுன்சிலர், மாவட்டப் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளில் கட்சி சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஒவ்வொரு மாவட்டங்களிலும் இடங்களைப் பங்கிட்டு தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல் குறித்த உங்கள் சந்தேகங்கள்.. வாசகர்களே ஒரு நிமிஷம் ப்ளீஸ்! #DoubtOfCommonMan

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் இடையே வார்டுகளைப் பிரிப்பதில் பிரச்னை ஏற்பட்டதால் அந்தக் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. இதனால் உதயசூரியன் சின்னமும் கை சின்னமும் எதிர்எதிராகப் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழக அளவில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி இடையே பிளவை ஏற்படுத்தலாம் எனத் தொண்டர்கள் அஞ்சுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 மாவட்டப் பஞ்சாயத்து வார்டுகள் உள்ளன. அதில், கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் ஆறு வார்டுகள் உள்ளன. ஆறு வார்டுகளைப் பங்குவைப்பதில் ஏற்பட்ட பஞ்சாயத்தில்தான் தி.மு.க-வும் காங்கிரஸும் தனித்துக் களம்காண்கின்றன. காங்கிரஸ் 6 மாவட்டப் பஞ்சாயத்து வார்டுகள் மற்றும் 68 ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கும் தனித்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

மேலும், ஊராட்சிகளிலும் தங்கள் வேட்பாளர்களைத் தனித்து களம் இறக்கியுள்ளது காங்கிரஸ். தி.மு.க.வும் கம்யூனிஸ்டு கட்சிகளும் இணைந்து அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ
ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ

இதுகுறித்து கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ-விடம் பேசினோம், ``மாவட்டப் பஞ்சாயத்தின் 6 வார்டுகளில் 3 வார்டுகளில் காங்கிரஸ் சிட்டிங் கவுன்சிலர்கள் இருந்த பகுதி. அவற்றை நாங்கள் வேண்டுமென்று கேட்டோம். அதற்குக் கூட்டணிக் கட்சியினர் சம்மதிக்காததால் தனித்துப் போட்டியிடும் சூழல் ஏற்பட்டது" என்றார்.

தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளர் மனோ தங்கராஜிடம் கேட்டபோது, ``மேல்புறம் வார்டில் இதற்கு முன்பு கம்யூனிஸ்ட் மற்றும் சுயேச்சைகள் வெற்றிபெற்றனர். கடைசியாக காங்கிரஸ்காரர் கவுன்சிலராக இருந்தார். அதுபோல கிள்ளியூர் வார்டு தி.மு.க வசம் இருந்தது.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

கடைசியாக காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் இருந்தார். அதனால் அது அவர்களின் வார்டு எனக் கூறுகிறார்கள். கூட்டணியாகப் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டதால், தி.மு.க நான்கு மாவட்டப் பஞ்சாயத்து வார்டுகளிலும், கம்யூனிஸ்ட் இரண்டு வார்டுகளிலும் போட்டியிடுகிறது" என்றார். `

`தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் மாநிலத் தலைமைக்குத் தெரிந்துதான் குமரி மேற்கு மாவட்டத்தில் தனித்தனியாகக் களம்காண்கிறார்கள் இரண்டு கட்சியினரும்'' என்கின்றனர் விவரம் தெரிந்த நிர்வாகிகள்.