Published:Updated:

`ரூ.14 லட்சம் ஏலம்; நிராகரித்த மக்கள்!' -எம்.எல்.ஏ கணவரை வீழ்த்தியவரை சேர்மனாக்கும் கே.என்.நேரு

மண்ணச்சநல்லூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகனை உள்ளாட்சித் தேர்தலில் தோற்கடித்த தி.மு.க வேட்பாளர் ஸ்ரீதர், மண்ணச்சநல்லூர் ஒன்றிய சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

ஶ்ரீதர்
ஶ்ரீதர்

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும் மண்ணச்சநல்லூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன், சேர்மன் பதவி மீதான ஆசையில் ஒன்றிய கவுன்சிலர் ஆக முடிவுசெய்தார். அ.தி.மு.க தலைமையும் அவருக்குச் சாதகமாக இருக்க, வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரின் சொந்த ஊரான தத்தமங்கலத்தில் ஏற்கெனவே மக்கள் அதிருப்தியில் இருந்ததால், வலையூர்-கரியமாணிக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளை உள்ளடக்கிய ஒன்றிய கவுன்சிலர் வார்டைத் தேர்ந்தெடுத்தார்.

பரமேஸ்வரி முருகன் எம்.எல்.ஏ
பரமேஸ்வரி முருகன் எம்.எல்.ஏ

இந்நிலையில், முருகன் போட்டியிட்ட வலையூர் ஊராட்சியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பதவிகள் ஏலம் விடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அந்தக் கிராம முக்கியஸ்தர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட மொத்தப் பதவிகளும் ஏலம் விடப்பட்டதாகப் புகார் எழுந்தது.

அதில் முருகன், தனது ஆதரவாளர் கருப்பன் என்பவர் மூலம், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, அந்தப் பகுதி மக்கள் தனக்கே வாக்களிக்க 14 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அ.தி.மு.க-வின் உள்ளாட்சி வியூகம் உடைந்ததன் 'உள்ளரசியல்'!

ஊர் முக்கியஸ்தர்களின் முடிவுக்கு எதிராக, அப்பகுதி பொதுமக்கள் கட்- அவுட் வைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து எதிர்ப்புகள் வலுக்கவே, மண்ணச்சநல்லூர் ஒன்றியத் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரன், சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்தப் புகாரின்மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், முருகனை எதிர்த்து ஸ்ரீதர் என்பவரைக் களமிறக்கினார் கே.என்.நேரு. தேர்தல் பிரசாரத்திலும் வலையூர் பகுதிக்கே நேரடியாக வந்து பிரசாரம் செய்தார் நேரு.

முருகன்
முருகன்

அதனைத் தொடர்ந்து, கடந்த 2-ம் தேதி வெளியிடப்பட்ட தேர்தல் முடிவில், தி.மு.க வேட்பாளர் ஸ்ரீதர், அ.தி.மு.க வேட்பாளரான மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகனை 1,307 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அதிலும், உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் விடப்பட்டு, ஏலம் எடுத்த நபருக்கே வாக்களிக்க வேண்டும் என்கிற ஊர்க் கட்டுப்பாட்டையும் மீறி, ஶ்ரீதருக்கு அப்பகுதி மக்கள் வாக்களித்ததால் அவர் வெற்றிபெற்றார். கணவரை சேர்மன் ஆக்க நினைத்த எம்.எல்.ஏ-வின் கனவும் நொறுங்கிப் போனது.

நிலைமை இப்படியிருக்க, மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ள 23 ஒன்றிய கவுன்சிலர்களில், 15 வார்டில் தி.மு.க வெற்றிபெற்றது. இதனால் ஒன்றிய சேர்மன் பதவி தி.மு.க வசம் வந்துள்ளது. நேற்று, வெற்றிபெற்ற கவுன்சிலர்கள், பிரதிநிதிகள் பதவி ஏற்பு விழா மண்ணச்சநல்லூர் யூனியனில் நடைபெற்றது. பிறகு அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில் தி.மு.க கவுன்சிலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தி.மு.க., கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம்
தி.மு.க., கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம்

அந்தக் கூட்டத்தில், பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-வின் கணவரைத் தேர்தலில் தோற்கடித்த தி.மு.க வேட்பாளர் ஸ்ரீதரை சேர்மன் ஆக்குவது என தி.மு.க கவுன்சிலர்கள் ஒருமனதாக முடிவுசெய்தனர். அதனையடுத்து, வரும் 11-ம் தேதி மண்ணச்சநல்லூர் ஒன்றிய சேர்மனாக ஸ்ரீதர் பதவியேற்க உள்ளதாக தி.மு.க வட்டாரங்கள் கூறுகின்றன.

அ.தி.மு.க எம்.எல்.ஏ-வின் கணவரைத் தோற்கடித்த தி.மு.க வேட்பாளர் ஒன்றிய சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்படுவது, திருச்சி அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.