Published:Updated:

`செல்ஃபி எடுத்து உற்சாகம்; பாட்டியம்மா நான் யாருனு தெரியுதா?’ - வேலூரைக் கலக்கிய ஸ்டாலின்

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

வேலூரில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் இன்று காலை முதலே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு வேலூர் வந்தார். இன்று காலை டீ-சர்ட், பேன்ட், ஷூ அணிந்துகொண்டு வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு சென்றார். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி வியாபாரிகளிடம் கைகுலுக்கி உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.

துரைமுருகன், கதிர் ஆனந்துடன் ஸ்டாலின்
துரைமுருகன், கதிர் ஆனந்துடன் ஸ்டாலின்

அப்போது, இளைஞர்கள் சிலர் ஆர்வமுடன் ஃசெல்பி எடுத்துக்கொள்ள ஸ்டாலினை நெருங்கினர். எனினும், அவர்களுக்குள் சிறிய தயக்கம் இருந்தது. இதனையறிந்த ஸ்டாலின், அந்த இளைஞர்களை அருகில் அழைத்து ஃசெல்பி-க்கு போஸ் கொடுத்தார்.

பின்னர், கொணவட்டம் பகுதி சாலையில் நடந்துசென்று ஓட்டு கேட்டார். பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஸ்டாலினை அணுகிக் கைகுலுக்கி புகைப்படம் எடுத்தனர். அரசு பேருந்தில் ஏறி பயணிகளிடமும் தி.மு.க-வின் சாதனைகளை எடுத்துக்கூறினார்.

ஃசெல்பி எடுத்துக்கொண்ட மக்கள்.
ஃசெல்பி எடுத்துக்கொண்ட மக்கள்.

அங்கிருந்த டீ கடையில் துரைமுருகன் மற்றும் வேட்பாளரான அவரின் மகன் கதிர் ஆனந்தும் டீ குடித்தனர்.

அதன்பிறகு, விரிஞ்சிபுரம் பகுதிக்குச் சென்ற ஸ்டாலின், அங்கு மரத்தடியில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, ஒரு வயதான பாட்டியை பார்த்து `என்ன தெரியுதாம்மா...’ என்று கேட்டார்.

வாக்கு சேகரித்த ஸ்டாலின்.
வாக்கு சேகரித்த ஸ்டாலின்.

ஸ்டாலினைப் பார்த்து வெட்கப்பட்டுச் சிரித்த அந்தப் பாட்டி, `உங்களத் தெரியாதாய்யா’ என்றார். உடனே, ஸ்டாலினும் சிரித்தார். இன்று மாலை, கே.வி.குப்பம் சட்டமன்ற பகுதியில் திறந்த வேனில் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.