மதுரை:``திமுக ஆட்சி செய்தால் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது” - எடப்பாடி பழனிசாமி

தி.மு.க ஆட்சி காலத்தில் அபகரிக்கப்பட்ட சுமார் 16,000 ஏக்கர் நிலங்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கிழக்கு தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரத்தில் பேசிய அவர், ``அ.தி.மு.க வெற்றி கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
தி.மு.க ஒரு அராஜகக் கட்சி. அதை தேர்வு செய்தால் நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. இந்தியாவிலேயே மிக மோசமான கட்சி தி.மு.க.

தி.மு.க ஆட்சி காலத்தில் அபகரிக்கப்பட்ட சுமார் 16,000 ஏக்கர் நிலங்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தோம்.
ஒரு தலைவர் தனது கட்சித் தொண்டர்கள் தவறு செய்யும்போது கண்டிக்க வேண்டுமே தவிர, கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது. இப்படி கட்டப்பஞ்சாயத்து செய்யும் கட்சி நாட்டிற்கு தேவையா?
அ.தி.மு.க அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாகவே தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பிக் காணப்படுகிறது.

தமிழ்நாட்டின் மின்வெட்டுப் பிரச்னையைப் போக்க அ.தி.மு.க அரசு தனிக்கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட்டது. அதன் காரணமாகவே தமிழகம் முழுவதும் மின்தடை முழுமையாக தடுக்கபட்டுள்ளது.
தொழில் முனைவோர் மாநாடு நடத்தப்பட்டு 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டப்பட்டு சுமார் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது அதிமுக அரசு.
ஒரு நாடு வளர்ச்சி அடைய வேளாண்மை மற்றும் தொழில்துறை ஆகியவை இரண்டு சக்கரங்களாக செயல்பட வேண்டும். அ.தி.மு.க அரசு இரண்டு சக்கரங்களையும் பொருத்தி ஒரு சேர சமமாக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது" என்றார்.