Published:Updated:

கரூர்: `எட்டப்பன் வேலை பார்த்தவர் செந்தில் பாலாஜி!' - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வாக்குச் சேகரிக்கும் முதல்வர்
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வாக்குச் சேகரிக்கும் முதல்வர் ( நா.ராஜமுருகன் )

மத்திய பா.ஜ.க அரசால் தமிழகத்துக்கு எண்ணற்ற திட்டங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, ரூ. 1 லட்சம் கோடி, வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்திலுள்ள சாலைகள் தரமான சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வின்போது, தி.மு.க மாநில விவசாய அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சின்னசாமி, முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார். தொடர்ந்து, கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலையை ஆதரித்து, க.பரமத்தியில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி, வாக்குச் சேகரித்தார்.

அண்ணாமலைக்கு வாக்கு கேட்கும் முதல்வர்
அண்ணாமலைக்கு வாக்கு கேட்கும் முதல்வர்
நா.ராஜமுருகன்

அப்போது பேசிய அவர்,``மத்திய பா.ஜ.க அரசால் தமிழகத்துக்கு எண்ணற்ற திட்டங்கள் கிடைத்துள்ளன. ரூ.1 லட்சம் கோடி , வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்திலுள்ள சாலைகள் தரமான சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. காங்கிரஸ் மத்தியில் ஆண்டபோது, தி.மு.க சார்பில் அப்போது சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டுக்கு இவ்வளவு நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்றுத் தந்தாரா? நீர் மேலாண்மை திட்டங்களை அ.தி.மு.க அரசு தீட்டி, குளம் ஏரிகள் தூர்வாரப்பட்டு, தமிழகத்தில் முதன்முறையாக குடிமராமத்து திட்டங்களை மேற்கொண்ட ஒரே அரசு, அ.தி.மு.க அரசுதான்.

காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசிடமிருந்து பெற்று தமிழகத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டுவருகிறது அ.தி.மு.க அரசு. ஆனால், தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது காவிரி நீர்ப் பிரச்னை தீர்க்கப்படவில்லை. நான் முதல்வராக தமிழகத்தில் பொறுப்பேற்ற பிறகு, ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் இரண்டு பேர் மற்றும் ஓய்வுபெற்ற பொறியாளர் மூன்று பேர் என ஐந்து பேர்கொண்ட குழுவை தமிழகம் முழுவதும் அனுப்பினேன். எங்கெல்லாம் நீர்நிலைகளை தூர்வார வேண்டும், புதிய அணைகள் கட்ட வேண்டுமென ஆய்வறிக்கை வழங்க உத்தரவிட்டு, அவர்களின் ஆய்வறிக்கையின்பேரில்தான் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புகழூர் பகுதியில் கதவணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

`ஸ்டாலின் சுயமாக இல்லை; வீட்டுக்குள் இருக்கும் ஒரு சக்தி அவரை இயக்குகிறது’ - சின்னசாமி குற்றச்சாட்டு

ஸ்டாலின் முதல்வராக வேண்டும் எனக் கனவு கண்டுகொண்டிருக்கிறார். ஆட்சியைக் கவிழ்க்க முயன்று ஓடிப்போனவர்தான், தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்போலத்தான் செந்தில் பாலாஜி. ஆட்சியைக் கலைக்க திட்டமிட்டுச் சதி செய்தார். அவர் கனவு நனவாகாது. அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் ஐந்து ஆண்டுகளில் இரண்டு சின்னங்களில் போட்டியிட்டவர். இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், செந்தில் பாலாஜிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தேன். அதில் வெற்றிபெற்றவர், அதன் பிறகு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு, தி.மு.க தலைவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, எனது ஆட்சியைக் கலைக்க முயன்றார். அ.தி.மு.க ஊழல் செய்வதாக ஸ்டாலின் கூறுகிறார்.

முதல்வருடன் சின்னசாமி
முதல்வருடன் சின்னசாமி
நா.ராஜமுருகன்

ஆனால், பக்கத்தில் யாரை வைத்திருக்கிறார்? செந்தில் பாலாஜியைத்தான் வைத்திருக்கிறார். நல்லவருக்கு வாக்களியுங்கள். தி.மு.க ஓர் அராஜகக் கட்சி, ரௌடிக் கட்சி, அட்டூழியம் செய்பவர்கள். உதயநிதி ஸ்டாலின் டி.ஜி.பி-யையே மிரட்டுகிறார் என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்? ஸ்டாலின், 'நான் முதல்வரானால்...' எனக் கூறி அதிகாரிகளை மிரட்டுகிறார். அதிகாரிகள் என்ன பிரசாரத்துக்கா செல்கின்றனர்... எவ்வளவு அச்சுறுத்துகின்றனர் பாருங்கள். அதிகாரிகள் நிலை எப்படியோ அப்படித்தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மக்களும் படாதபாடுபடுவார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு