Published:Updated:

`துரோகிகளைக் கொல்லுங்கள்!’ அனுராக் தாக்கூரின் சர்ச்சைப் பேச்சால் அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்

அனுராக் தாக்கூர்
அனுராக் தாக்கூர்

பா.ஜ.க-வின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பெயரை நீக்கக்கோரி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் ஆத் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது.

டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் தேசிய அளவில் கவனம் பெற்றன. டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. பா.ஜ.க-வுக்கு எதிரான வாக்குகளை அறுவடை செய்ய காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி பின்னடைவைச் சந்தித்து வருகிறது. `இது பா.ஜ.க மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியின் வெளிப்பாடு' என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதைத் திட்டவட்டமாக மறுக்கும் பா.ஜ.க-வினர், `பிரதமர் மோடி மக்களின் தலைவராக இருக்கிறார், பா.ஜ.க-வுக்கு மக்களிடம் ஆதரவு பெரும் ஆதரவு இருக்கிறது' என்கின்றனர். தற்போது டெல்லி சட்டப்பேரவையைக் கைப்பற்றும் கட்டாயத்தில் பா.ஜ.க இருக்கிறது. இதற்காகப் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ள பா.ஜ.க அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களை டெல்லியில் களமிறக்கியுள்ளது.

டெல்லியில் பிரசாரத்தில் பேசிய அனுராக் தாக்கூர், ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்களைக் கடுமையாகச் சாடினார். அப்போது மேடையில், `துரோகிகளைக் கொல்லுங்கள்’ எனப் பேசியிருந்தார். அதேபோல் பா.ஜ.க எம்.பி பர்வேஷ் வர்மா பேசியதும் சர்ச்சையானது.

``குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் உங்களுடைய வீடுகளுக்குள் புகுந்து உங்கள் மனைவி மற்றும் சகோதரிகளைப் பாலியல் வன்கொடுமை செய்வார்கள்" எனப் பேசியிருந்தார். பிரசார மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மாவின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

கடிதம்
கடிதம்

தேர்தல் விதிமுறைகளை மீறி மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் இவர்கள் இருவரும் மீதும் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரையடுத்து இருவரும் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதேவேளையில் பா.ஜ.க-வின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலிலிருந்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பர்வேஷ் சாகிப் சிங் வர்மா எம்.பி. ஆகியோரின் பெயர்களை நீக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து அனுராக்கை நீக்கினாலும் இனி அவர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யலாம். நட்சத்திரப் பேச்சாளர்களாக இருந்தால் அவர்களது பிரசார செலவுகள் வேட்பாளர்களின் கணக்கில் காட்ட வேண்டிய தேவையில்லை. தேர்தல் செலவுக் கணக்கு வரம்பில் இருந்து நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு செய்த செலவுக்கான விலக்கைக் கோர முடியும். அனுராக் தாக்கூர் பெயர் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால் இனி அவரது பிரசார செலவுகள், வேட்பாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

அடுத்த கட்டுரைக்கு