Published:Updated:

``2019 தேர்தலின் விவிபேட் சிலிப்களை தேர்தல் ஆணையம் அழித்துவிட்டது” - ஆர்.டி.ஐ பதிலால் அதிர்ச்சி!

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட விவிபேட் சிலிப்களை தேர்தல் ஆணையம் அழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் பலவும் சர்ச்சையாகின. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான சர்ச்சைகள் தற்போது வரை ஓயவில்லை. இந்த நிலையில் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதத்தை அறிவிப்பதிலும் பல்வேறு குளறுபடிகள் எழுந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையர்கள்
தேர்தல் ஆணையர்கள்

அந்த வரிசையில் தற்போது தேர்தல் ஆணையம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட விவிபேட் சிலிப்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் அழித்துவிட்டதாக ஆர்.டி.ஐ பதிலில் தெரிவித்துள்ளது. The Quint இணையத்தில் வெளிவந்துள்ள கட்டுரையின் மூலம் இது தெரிய வந்துள்ளது.

விவிபேட் என்றால் என்ன?

இந்தியத் தேர்தல்களில் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈ.வி.எம்) தற்போது அனைத்துத் தேர்தல்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பல்வேறு முறைகேடுகள் அவ்வப்போது எழுந்த வண்ணமே இருந்தன. ஈ.வி.எம் இயந்திரங்கள் ஹேக் செய்யப்படலாம் அல்லது மாற்றி வைக்கப்படலாம் என்கிற குற்றச்சாட்டு தற்போது வரை முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

விவிபேட்
விவிபேட்

பழைய வாக்குச்சீட்டு முறைக்கே மாறிவிட வேண்டும் என்கிற குரல்களும் ஒலித்து வருகின்றன. அதற்கான சாத்தியமே இல்லையென தேர்தல் ஆணையம் முற்றிலுமாக மறுத்துவிட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் கொண்டு வரப்பட்டதே விவிபேட் இயந்திரங்கள். ஒவ்வொரு ஈ.வி.எம் இயந்திரத்துக்கும் ஒரு விவிபேட் இயந்திரம் இருக்கும். ஈ.வி.எம் இயந்திரத்தில் வாக்கைச் செலுத்திய பிறகு நாம் யாருக்கு வாக்குச் செலுத்தியிருக்கிறோம் என்பதற்கான சிலிப் பக்கத்தில் உள்ள விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும். ஈ.வி.எம் இயந்திரத்தில் பதிவாகக்கூடிய அனைத்து வாக்குகளுக்கும் விவிபேட் சிலிப் அந்த இயந்திரத்தில் இடம்பெற்றிருக்கும்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு தொகுதியில் பயன்படுத்தப்பட்ட ஐந்து ஈ.வி.எம் இயந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் பதிவான வாக்குகளும், விவிபேட் சிலிப்களும் சரிபார்க்கப்படும். இவை ஒத்துப்போனதற்குப் பிறகே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதில் ஏதேனும் சிக்கல் எழுமானால் அது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்படும்.

தேர்தல் விதிகள்
தேர்தல் விதிகள்

தேர்தல் தொடர்பாக ஏதேனும் வழக்குகள் சர்ச்சைகள் உருவானால் விவிபேட் சிலிப்கள் சரிபார்க்கப் பயன்படும். தேர்தல் விதிகளின்படி விவிபேட் சிலிப்களைத் தேர்தல் முடிந்ததிலிருந்து ஓராண்டு பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு அதை அழித்துவிடலாம் என்றிருக்கிறது.

The Quint நிறுவனத்தைச் சேர்ந்த பூனம் அகர்வால் என்பவர் விவிபேட் சிலிப் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் ஆர்.டி.ஐ மூலம் தகவல் கோரியிருந்தார். அதற்குத் தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், விவிபேட் சிலிப்களை அழித்துவிடுவது தொடர்பாக அனைத்து மாநிலத் தேர்தல் ஆணையர்களுக்கும் அனுப்பியிருந்த கடிதத்தை இணைத்திருந்தது.

`வாழ்வாதாரம் கேட்டு நடைப்பயணம்!' -அடிப்படை வசதிக்காக அறவழியில் போராடும் வால்பாறை பழங்குடி மக்கள்

அதில் 2019 செட்பம்பர் மாதமே அனைத்து மாநிலத் தேர்தல் ஆணையர்களுக்கும் விவிபேட் சிலிப்களை அப்புறப்படுத்துவதற்கான உத்தரவுகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சட்டப்படி ஓராண்டு காலம் வரை வைத்திருக்க வேண்டிய விவிபேட் சிலிப்களை நான்கே மாதங்களில் அழித்துவிட வேண்டும் எனத் தேர்தல் அறிவித்திருப்பது ஏன் என்பது பற்றியும் கேள்வி எழுந்துள்ளது.

RTI
RTI
The Quint

2019 தேர்தலில் பல இடங்களில் ஈ.வி.எம் - விவிபேட் பொருந்தாமல் போன சம்பவங்கள் நடந்தன. அதைப்பற்றி தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த விசாரணையின் நிலைபற்றித் தனியாக ஒரு ஆர்.டி.ஐ பதிவு செய்யப்பட்டிருந்தது. அது தொடர்பான விசாரணை இன்னும் தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் குழுவின் மேற்பார்வையில் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது. ஈ.வி.எம் - விவிபேட் தொடர்பான விசாரணை முடிவுறாத நிலையில் அனைத்து விவிபேட் சிலிப்களையும் அழிக்க வேண்டிய தேவை என்ன வந்தது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

பின் செல்ல