Election bannerElection banner
Published:Updated:

ராமநாதபுரம்: வாக்கு எண்ணும் மையத்துக்கு லேப்டாப்புடன் வந்த நபர்கள்; பதற்றம்! -கலெக்டர் விளக்கம்

அண்ணா பல்கலைக்கழக கல்லூரி
அண்ணா பல்கலைக்கழக கல்லூரி

`வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பு பற்றிச் சந்தேகம் இருந்துவரும் நிலையில், லேப்டாப்புடன் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என்று வரிசையாக வந்தால் எல்லோருக்கும் சந்தேகம் வரத்தான் செய்யும்’ - என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

`தமிழகத்திலுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்கள் பாதுகாப்பாக இல்லை’ என்ற புகாரை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூறிவருகிறார்கள். அதை மெய்ப்பிப்பதைப்போலவே தமிழகத்தில் நடந்துவரும் சம்பவங்கள் சில சர்ச்சையை ஏற்படுத்திவருகின்றன.

கலெக்டர் பேச்சுவார்த்தை
கலெக்டர் பேச்சுவார்த்தை

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடானை, பரமக்குடி, முதுகளத்தூர், ராமநாதபுரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எந்திரங்கள் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. இதற்காக துணை ராணுவத்தினர், காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கட்சிகளின் முகவர்களும் ஷிஃப்ட் போட்டு கண்காணித்துவருகிறார்கள்.

இந்தநிலையில், நேற்று காலை இந்தக் கல்லூரிப் பேராசிரியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் லேப்டாப் சகிதமாக, ஆன்லைன் வகுப்பு நடத்துவதற்காக வந்திருக்கிறோம் என்று கூற, அவர்களின் அடையாள அட்டையை பார்த்து காவல்துறையினர் உள்ளே அனுமதித்துள்ளனர்.

கலெக்டர் விசாரணை
கலெக்டர் விசாரணை

இதை அங்கிருந்த திமுக முகவர்கள் பார்த்து அதிர்ச்சியாகி, 'எப்படி வாக்கு இயந்திரங்கள் இங்கிருக்கும் நிலையில் இவர்களை உள்ளே அனுமதிக்கலாம்... வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வேறு யாரும் இங்கு வரக் கூடாது' என்று வாக்குவாதம் செய்ய, அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாக்கு எந்திரம் இருக்கும் கட்டடத்துக்குப் பாதுகாப்பு இல்லை என்ற தகவல் வாட்ஸ்அப்களில் பரவியதால், மாவட்டம் முழுதும் பதற்றம் ஏற்படத் தொடங்கியது. இந்தத் தகவல், தமிழகம் தாண்டி தமிழர்கள் உள்ள நாடுகளில் பரவத் தொடங்கியது.

அண்ணா பல்கலைக்கழக கல்லூரி
அண்ணா பல்கலைக்கழக கல்லூரி

தகவல் கேள்விப்பட்டு கலெக்டர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், தேர்தல் ஆணைய அலுவலர்களுடன் உடனே கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினார்.

`மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கத்தான் வந்தார்கள். அதற்கான வசதி இங்குதான் இருக்கிறது' என்று பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கூற, நிலைமையின் தீவிரத்தை எடுத்துக் கூறி, ஆன்லைன் வகுப்பை வேறு இடத்தில் நடத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பிறகு லேப்டாப்புடன் ஒருவர் பின் ஒருவராக பேராசிரியர்கள் கிளம்பிச் சென்றார்கள்.

``வாக்கு எந்திரங்கள் ஒன்றிரண்டு அறையில் இருந்தாலும், அந்த வளாகத்திலுள்ள கட்டடம் முழுவதுமே தேர்தல் ஆணையத்தின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். அதற்குள் யாரும் வர அனுமதி கிடையாது. ஏற்கெனவே வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பு பற்றி சந்தேகம் இருந்துவரும் நிலையில் லேப்டாப்புடன் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என்று வரிசையாக வந்தால் எல்லோருக்கும் சந்தேகம் வரத்தான் செய்யும்.

கலெக்டர் பேச்சுவார்த்தை
கலெக்டர் பேச்சுவார்த்தை

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் தாசில்தார் வந்தது குற்றம் என்பதால்தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால்தான் இந்த முறை அனைத்து வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களைக் கழுகுபோல் உன்னிப்பாக கவனித்துவருகிறோம்" என்கிறார்கள் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்.

இது பற்றி ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜிடம் கேட்டோம். ``அங்கு எந்தத் தவறும் நடக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழக உத்தரவின்பேரில் மாணவர்களுக்கு ஆன்லைன் கிளாஸ் எடுப்பதற்காகத்தான் ஆசிரியர்கள் வந்திருக்கிறார்கள். வாக்கு எந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் ரூம் வேறு கட்டடத்தில் அமைந்திருக்கிறது. அது பலத்த பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டுவருகிறது.

கலெக்டர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ்
கலெக்டர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ்

அதற்கும் இவர்கள் ஆன்லைன் கிளாஸ் எடுக்க வந்த இடத்துக்கும் சம்பந்தமில்லை. ஆன்லைன் கிளாஸ் நடத்துவதற்கான உபகரணங்கள் இங்கு இருப்பதால் வந்திருக்கிறார்கள்.

கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்ததால், நிலைமையை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் எடுத்து சொல்லி, அவர்களை அங்கிருந்து வெளியேற்றி வேறு இடத்தில் ஆன்லைன் கிளாஸ் எடுக்க ஏற்பாடு செய்யவைத்தோம். இந்தத் தகவலை அனைத்து முக்கிய கட்சி முகவர்களை அழைத்து தெளிவுபடுத்தினோம். இதுதான் நடந்தது. வேறெந்த பிரச்னையும் இல்லை. வாக்கு எந்திரங்கள் அங்கு பலத்த கண்காணிப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன" என்றார்.

ஏற்கெனவே சென்னையில் வாக்கு எந்திரத்தை மாநகராட்சி ஊழியர்கள் டூ வீலரில் எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம்

தேர்தல் நடந்த மறுநாள் தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்துக்கு ஐந்து கன்டெய்னர் லாரிகளில் வாக்கு எந்திரங்கள் வர அதைப் பார்த்து திமுக-வினர் போராட்டம் நடத்தினார்கள். பின்பு கலெக்டர் வந்து, `அது பழுதான மற்றும் கூடுதலான வாக்குப்பதிவு எந்திரங்கள். அதை குடோனில் வைப்பதற்காக கொண்டு வந்துள்ளனர்’ என்று சொன்னாலும் ஒருவித சந்தேகத்துடனேயே திமுக கூட்டணியினர் கலைந்து சென்றனர்.

இதேபோல, ``நெய்வேலி பண்ருட்டி தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆன்லைன் வகுப்பு நடத்த மூன்று பேர் லேப்டாப்புடன் செல்ல அனுமதி அளித்தது யார்? ஆன்லைன் வகுப்புகளை வீட்டிலிருந்தே ஆசிரியர்கள் நடத்தலாம். அப்படியிருக்கும்போது வாக்கு எந்திரங்கள் பாதுகாக்கப்படும் மையத்துக்கு ஏன் வர வேண்டும்? பாஜக-வுக்கு எதிராகச் செயல்படும் என் போன்றவர்கள் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று சதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதற்குத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும்" என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் புகார் எழுப்பியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கு இயந்திரம்
வாக்கு இயந்திரம்

இரண்டு நாள்களுக்கு முன் கோவை மாவட்டத்தில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கல்லூரி வளாகத்துக்குள் இரவு நேரத்தில் இரண்டு கன்டெய்னர் லாரிகள் வந்ததாகப் பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள், கட்சியினர் அங்கு திரள பின்பு அது நடமாடும் கழிப்பறை வாகனம் என்பது தெரிந்தது. அனைத்து வசதிகளும் அந்த மையத்தில் இருக்கும் நிலையில் எதற்காகக் கழிப்பறை வாகனம் இங்கு வந்தது, யார் அனுப்பினார்கள் என்று கட்சியினர் கேட்க, சரியான விளக்கம் சொல்லாமல் அந்த வாகனங்கள் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு