நெல்லை மாவட்டம், வள்ளியூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் இருக்கின்றன. அனைத்து வார்டுகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்துவருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகிறார்கள். 2-வது வார்டுக்கு உட்பட்ட கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை முதலாகவே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்துவருகிறது.

அந்த வாக்குச்சாவடியில் 256 வாக்குகள் பதிவான நிலையில், திடீரென இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அதைச் சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இயந்திரம் மீண்டும் இயங்க மறுத்துவிட்டது. அதனால் வாக்களிக்க வந்தவர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்கும் சூழல் உருவானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இயந்திரக் கோளாறைச் சரிசெய்ய முடியாததால் மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டு, அதைப் பொருத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். பின்னர் அந்த இயந்திரம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்தப் பணிகள் காரணமாக வாக்குப்பதிவு நடக்காததால் வாக்களிக்க வந்தவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ``ஏற்கெனவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே வாக்குச்சாவடி மையங்களுக்குக் கொண்டுவரப்பட்டன. இங்குள்ள இயந்திரமும் காலை முதல் சரிவர இயங்கியபோதிலும் இடையில் கோளாறு ஏற்பட்டதால், மாற்று இயந்திரம் பொருத்தும் பணி நடக்கிறது” என்றார்கள்.