Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: சட்டமன்றத்துக்கு தேர்வான முதல் தாயகம் திரும்பிய தமிழர்! - கொண்டாடும் மலையக மக்கள்

பொன்.ஜெயசீலன்
பொன்.ஜெயசீலன்

தாயகம் திரும்பிய தமிழரான பொன்.ஜெயசீலன் கூடலூர் தனி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதன் மூலம், நீலகிரியில் தாயகம் திரும்பிய தமிழர்களின் முதல் எம்.எல்.ஏ என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஆங்கிலேயர்களின் ஆசிய வருகைக்குப்பின் இந்தியா,இலங்கை,பர்மா,மலேசியா போன்ற நாடுகளில் பெருந்தோட்டங்களை நிறுவி தேயிலை,காப்பி,ரப்பர் போன்ற பணப்பயிர்களை பெருமளவில் சாகுபடி செய்தனர். இவற்றில் பணியாற்ற லட்சக்கணக்கான தொழிலாளர்களை அந்த பகுதிகளுக்கு குடியேற்றினர். இதே போன்று தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட மக்களையும் இலங்கையில் குடியேற்றி தோட்ட பணிகளில் அமர்த்தினர்.

tea estate workers
tea estate workers

பின்னர் 1964-ல் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும், இலங்கையின் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயகவும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தனர். சிறிமாவோ-சாஸ்த்ரி என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 5 லட்சம் மக்கள் சொந்த நாடான இந்தியாவுக்கு திரும்பினர். இதில் 3 லட்சம் பேர் நீலகிரியில் குடியேறினர். இந்த மக்களுக்காக கூடலூர், குன்னூர்,கோத்தகிரி பகுதிகளில் தமிழக அரசு தேயிலை தோட்டங்களை நிறுவியது.

கடந்த 50 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்துவரும் இம்மக்களில் பலரும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர். கூடலூரில் மட்டும் சுமார் 1.50 லட்சம் மக்கள் உள்ளனர். திராவிட கட்சிகளின் வாக்கு வங்கியாக இருக்கும் இந்த மக்களுக்கு எந்த கட்சியும் அரசியலில் முக்கியத்துவம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்துவந்தது.

tea estate wrokers
tea estate wrokers

இந்த நிலையில் முதல் முறையாக கூடலூரில் தி.மு.க,அ.தி.மு.க போன்ற முக்கிய கட்சிகள் தங்களின் வேட்பாளராக தாயகம் திரும்பியவர்களை அறிவித்து களமிறங்கின. தி.மு.க சார்பில் காசிலிங்கமும், அ.தி.மு.க சார்பில் பொன்.ஜெயசீலனும் நேருக்குநேர் மோதினர். இதில் அ.தி.மு.க வேட்பாளர் பொன்.ஜெயசீலன் 64,496 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் தாயகம் திரும்பிய தமிழர்களில் நீலகிரியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்வாகியுள்ள முதல் நபர் என்ற பெருமையை பெற்றிருகிறார்.

இந்த வரலாற்று வெற்றி குறித்து நம்மிடம் பேசிய பொன்.ஜெயசீலன்,``என்னோட அம்மா,அப்பா ரெண்டுபேருமே தோட்ட தொழிலாளர்கள்தான். எங்க குடும்பத்துல யாருக்கும் அரசியலில் பெரிய ஈடுபாடு கிடையாது. முதல் தலைமுறையா நாந்தான் அரசியலுக்கு வந்துருக்கேன். தாயகம் திரும்பிய எங்க மக்கள்ல நீலகிரி மாவட்டத்துல இருந்து நான்தான் முதல் ஆளா எம்.எல்.ஏ-வாக ஆக்கப்பட்டிருக்கேன். இது எங்க மக்களுக்கு கெடச்ச வெற்றி. எப்போதும் மக்கள் பக்கம் நின்று குரல் கொடுப்பேன். என்ன ஜெயிக்க வச்ச அத்தனை பேருக்குமே என்னோட நன்றி" என்றார்.

பொன்.ஜெயசீலன்
பொன்.ஜெயசீலன்

இவரது வெற்றி குறித்து நம்மிடம் பேசிய மலையக தமிழர் பேரவையைச் சேர்ந்த ராமச்சந்திரன், ``கட்சி வேறுபாடுகளை கடந்து, தாயகம் திரும்பிய தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியாக இதை பார்க்கிறோம். இது எங்களுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம். இங்கு பாடுபடும் மக்களோட பிரச்னைய எடுத்துச்சொல்ல நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு