Published:Updated:

கட்டாரை சாய்த்த அந்த 5 பேர்... ஹரியானாவில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்குமா?

ஹரியானா மாநில தேர்தலில் சீட் கிடைக்காமல் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வெளியேறிய 5 பேர் சுயேச்சைகளாக நின்று வெற்றி பெற்றுள்ளனர்.

பாரதிய ஜனதா மனோகர் லால் கட்டார்
பாரதிய ஜனதா மனோகர் லால் கட்டார்

ஹரியானாவில் மீண்டும் அமோகமாக வெற்றி பெற்று, ஆட்சியமைக்கலாம் என்ற கனவில் மிதந்த மனோகர் லால் கட்டாரின் ஆசையில் மண் விழுந்துள்ளது. ஹரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு 46 சீட்டுகள் தேவை. சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், பாரதிய ஜனதா கட்சி 40 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2014- ம் ஆண்டு தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 14 தொகுதிகள் கூடுதலாக கிடைத்துள்ளன. அதே வேளையில் கடந்த தேர்தலில் 47 தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜ.க 7 தொகுதிகளை இழந்துள்ளது.

ஹரியானா
ஹரியானா

கடந்த ஜூலை மாதத்தில், ஜனநாயக ஜனதா கட்சியை தொடங்கிய முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் பேரன் துஷ்யந்த் சௌதாலாவுக்கு ஹரியானா மக்கள் மத்தியில் செல்வாக்கு அபரீதமாக கூடியுள்ளது. விளைவாக... அவரின் ஜனநாயக ஜனதா கட்சிக்கு 10 தொகுதிகள் கிடைத்துள்ளன. சுயேச்சைகள் 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஹரியானாவில் தொங்கு சட்டமன்றம் அமையப் போவது தெரிந்த உடனே சுயேச்சைகளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.

இதில், இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் , ஹரியானாவில் தாத்ரி தொகுதியில் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற, மல்யுத்த வீராங்கனை பபிதா போகத்தை பாரதிய ஜனதா களம் இறக்கியது. இந்த தொகுதியை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சோம்பீர் சங்வான் என்பவரும் குறி வைத்திருந்தார். தாத்ரி தொகுயில் போட்டியிட சோம்பீருக்கு சீட் அளிக்கப்படவில்லை.

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய சோம்பீர் சங்வான்
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய சோம்பீர் சங்வான்

இதனால், கோபமடைந்த சோம்பீர், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாக தாத்ரியில் போட்டியிட்டார். பாரதிய ஜனதா கட்சி சார்பாக, நிறுத்தப்பட்ட பபிதா போகத்தை தோற்கடிப்பதாகவும் சபதம் செய்தார். பிரதமர் மோடி கூட தாத்ரி வந்து பபிதா போகத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். எனினும் , தேர்தல் முடிவுகள் பபிதாவுக்கு சாதகமாக இல்லை. தாத்ரியில் சோம்பீர் 43,589 ஓட்டுக்கள் பெற, பபிதா 24,502 ஓட்டுகள் வாங்கி பரிதாபமாக தோல்வியடைந்தார்.

கடந்த 2014- ம் ஆண்டு ஹரியானா சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் பாரதிய ஜனதா சார்பாக, சோம்பீர் போட்டியிட்டு தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. ஹரியானா சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் தாத்ரி தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றதே கிடையாது. சோம்பீர் போல, நியேகோரி தொகுதியில் தரம்பால் காண்டர், மெகம் தொகுதியில் பல்ராஜ் குண்டு, பிரிதலா தொகுதியில் நயான்பால் ராவத், பந்திரி தொகுதியில் ரந்தீர் சிங் ஆகியோர் சீட் கிடைக்காததால் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வெளியேறி சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றுள்ளனர். இது மட்டுமே பாரதிய ஜனதாவுக்கு அதிர்ச்சி இல்லை. ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் 21 சிட்டிங் எம்.எல்.ஏக்களும் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர்.

கிங்மேக்கர் துஷ்யந்த்
கிங்மேக்கர் துஷ்யந்த்

வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக கட்சியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறி வெற்றி பெற்ற 5 பேரால் ஹரியானா மாநில பா.ஜ.க தலைமை நொந்து போய் விட்டது. கட்சியில் இருந்து வெளியேறியவர்களை சமாதானப்படுத்தி ஆதரவைப் பெற டெல்லி வழியாக காய் நகர்த்த ஹரியானா மாநில பா.ஜ.க முடிவெடுத்துள்ளது. எனவே, அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

பத்ஷாபூர் தொகுதியில் வெற்றி பெற்ற ராகேஷ், ரேனியா தொகுதியில் வெற்றி பெற்ற ரஞ்சித் சிங் இருவரும் மற்ற இரு சுயேச்சைகள். இவர்கள் தவிர, ஹரியானா லோகித் கட்சியின் கோபால் கன்டா மற்றும் இந்திய தேசிய லோக் தள கட்சியின் அபே சௌதாலா ஆகியார் பிற எம்.எல்.ஏக்கள். இதில் ,அபே சௌதலா கிங்மேக்கராக உயர்ந்துள்ள துஷ்யந்தின் சித்தப்பா கடந்த 2018-ம் ஆண்டு துஷ்யந்த்தை கட்சியில் இருந்து வெளியேற்றினார் அபே சௌதாலா.

அபே சௌதாலா
அபே சௌதாலா

தொடர்ந்து, தனிக்கட்சி தொடங்கி துஷ்யந்த் இன்று 10 சீட்டுகளை வென்று விட, ஒற்றைச் சீட்டுடன் முடங்கிப் போனார் அபே சௌதாலா. தற்போதைய சூழலில் துஷ்யந்த் யார் பக்கம் சாய்வார் என்று கணிக்க முடியவில்லை. ஆனால், பாரதிய ஜனதா ஆட்சி அதிகாரத்தைக் காட்டி மற்ற எம்.எல்.ஏ-க்கள் 9 பேரையும் வளைத்துப் போட முயலும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த தைரியத்தில்தான் மனோகர்லால் கட்டார் மீண்டும் ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.

மகாராஷ்டிரா, ஹரியானாவில் முந்தும் பா.ஜ.க? - கருத்துக் கணிப்பால் பரபரக்கும் தேர்தல் களம்