Published:Updated:

குஜராத்: மாஜி முதல்வர் போட்டியிலிருந்து விலகல்... 20 பாஜக எம்.எல்.ஏ-க்களுக்கு கல்தா?!

ருபானி

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 20 எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதில்லை என்று பாஜக தலைமை முடிவுசெய்திருக்கிறது எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

குஜராத்: மாஜி முதல்வர் போட்டியிலிருந்து விலகல்... 20 பாஜக எம்.எல்.ஏ-க்களுக்கு கல்தா?!

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 20 எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதில்லை என்று பாஜக தலைமை முடிவுசெய்திருக்கிறது எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
ருபானி

குஜராத் சட்டமன்றத்துக்கு இரண்டு கட்டமாக அடுத்த மாதம் 1, 5-ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கு ஏற்கெனவே வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டது. இந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக செமி கண்டக்டர் தொழிற்சாலை, டாடா ஏர்பஸ் போர் விமானங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் குஜராத்துக்குக் கொண்டுவரப்பட்டன. இந்தத் தொழிற்சாலைகள் மகாராஷ்டிராவுக்குச் செல்லவிருந்தன. ஆனால் அவற்றை பாஜக தலைமை குஜராத்துக்குக் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் முன்னாள் முதல்வர் விஜய் ருபானி, பாஜக தலைமைக்குக் கடிதம் எழுதி தான் இந்த முறை போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார். இது தவிர, பாஜக மூத்த தலைவர் பூபேந்திர சிங் சுதாசமா என்பவரும், முன்னாள் துணை முதல்வர் நிதின் பட்டேல் என்பவரும் கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதி தாங்கள் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டனர்.

புபேந்திர பட்டேல்
புபேந்திர பட்டேல்

புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் தாங்கள் விலகிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். அதோடு மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு இந்த முறை வாய்ப்பு கொடுப்பதில்லை என்று பாஜக முடிவுசெய்திருக்கிறது எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தவிர வெற்றிபெறத் தகுதியானவர்களை மட்டும் வேட்பாளர்களாகத் தேர்வுசெய்து வாய்ப்பு கொடுப்பது என்று பாஜக முடிவுசெய்திருக்கிறது. இதற்காக தற்போது எம்.எல்.ஏ-க்களாக 20 பேருக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என்று பாஜக தலைமை முடிவுசெய்திருக்கிறதாம். வேட்பாளர் தேர்வுசெய்வதில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் தலையிட இருக்கிறார் என்பதும் ஒரு தகவல். பாஜக-வின் மத்திய தேர்தல் கமிட்டிதான் வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுத்தாலும், வேட்பாளர்கள் யார் என்பதை மோடியும், அமித் ஷாவும்தான் முடிவு செய்வார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குஜராத்திலிருந்து முதல்வர் புபேந்திர பட்டேல், மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் உட்பட மாநில பாஜக உயர்மட்டக்குழு டெல்லிக்கு சென்று வேட்பாளர் தேர்வு தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் நிற்கிறது. மற்றொருபுறம் ராகுல் காந்தி ஜோடோ யாத்திரையில் இருக்கிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு நட்சத்திரப் பேச்சாளர்கள் இல்லாமல் இருக்கிறது. ஆனால், ஆம் ஆத்மி கட்சிக்கு கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் மான் ஆகியோர் பிரசாரம் செய்துவருகின்றனர். பாஜக-வுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா எனத் தனிப்பட்டாளமே இருக்கிறது.