Published:Updated:

ஜெயலலிதா... செளதாலா... துஷ்யந்த்! அரியானா எலக்ஷன் எமோஷன்

ஜெயலலிதா, செளதாலா, அவரது பேரன் துஷ்யந்த் ஆகியோருடன் பின்னிப் பிணைந்திருக்கிறது அரியானா சட்டசபைத் தேர்தல் காட்சிகள்.

செளதாலாவுடன் ஜெயலலிதா
செளதாலாவுடன் ஜெயலலிதா ( விகடன் )

இது ஓர் அபூர்வமான போட்டோ! தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா ஆகிய இருவர் மீதும் இவ்வளவு மீடியா வெளிச்சம் பாய்ந்தது இப்போது அல்ல. 2007 ஜூன் 18-ம் தேதி, போயஸ் கார்டனில் கேமரா விழுங்கிய இந்தக் காட்சிக்கு தனிக் கதை உண்டு.

ஜெயலலிதா, செளதாலா.
ஜெயலலிதா, செளதாலா.
விகடன்

2007-ம் ஆண்டு, அகில இந்திய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்கினார், ஜெயலலிதா. முலாயம் சிங், சந்திரபாபு நாயுடு, சௌதாலா உட்பட இந்தியாவின் முக்கியத் தலைகளை போயஸ் கார்டனுக்கு அழைத்து விருந்து கொடுத்தார். மூன்றாவது அணிக்கு 'ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி’ என்றெல்லாம் அப்போது பெயர் வைத்தார் ஜெயலலிதா. அன்றைய அரசியல் சூழலில் அந்த அணி காணாமல் போனது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க போயஸ் கார்டன் வந்த சௌதாலாவை ஜெயலலிதா வாசலில் காத்திருந்து வரவேற்றார். அப்போது, நமது புகைப்படக்காரர் எடுத்த போட்டோ இது.

போயஸ் கார்டனில் கூடிய 3-வது அணி தலைவர்கள்...
போயஸ் கார்டனில் கூடிய 3-வது அணி தலைவர்கள்...
விகடன்

12 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஜெயலலிதா மறைந்து விட்டார். செளதாலா, சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார். ஜெயலலிதாவின் அ.தி.மு.க, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலில் வென்றிருக்கிறது. செளதாலாவின் பேரன் துஷ்யந்த், அரியானாவில் கிங் மேக்கர் ஆகியிருக்கிறார்.

அரியானாவின் முன்னாள் முதல்வரும் மறைந்த துணைப் பிரதமருமான தேவி லாலின் மகன்தான், ஓம் பிரகாஷ் செளதாலா. இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவரான சௌதாலா, அரியானா மாநிலத்தில் நான்கு முறை முதல்வராக இருந்தவர். 1999-2005-ம் ஆண்டுகளில் செளதாலா முதல்வராக இருந்தபோது நடந்த ஆசிரியர் தேர்வு ஊழல் இந்தியாவையே நாறடித்தது. போலி ஆவணங்கள் கொடுத்தும், திருத்தியும் ஏராளமானோர் பணி நியமனம் வாங்கினர். சி.பி.ஐ விசாரித்த இந்த வழக்கில் சௌதாலா, அவரது மகன் அஜய் சௌதாலா, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சஞ்சீவ் குமார், வித்யா தர், ஷேர் சிங் பத்சமி உட்பட 55 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

டெல்லி சி.பி.ஐ கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. 2013 ஜனவரி 16-ம் தேதி, சௌதாலா மற்றும் அவரது மகன் அஜய் சௌதாலாவுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது, டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம். அத்துடன், மேலும் பலருக்குத் தண்டனை விதிக்கப்பட்டன. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, 2013 பிப்ரவரி 7-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சௌதாலா மேல்முறையீடு செய்தார். சௌதாலாவுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது.

செளதாலா
செளதாலா

செளதாலா, சிறையில் வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்த போதுதான், 2014 அரியானா சட்டசபைத் தேர்தல் வந்தது. திகார் சிறையிலிருந்து ஜாமீனில் வந்த செளதாலா, தேர்தல் விதிமுறைகளை மீறி அந்தத் தேர்தலில் பிரசாரம் செய்தார். இதனால் மீண்டும் திகாரில் அடைக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் செளதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் தோல்வியைத் தழுவியது. முதல் முறையாக பி.ஜே.பி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

பி.ஜே.பி-க்கு 47 இடங்களும் இந்திய தேசிய லோக் தளத்துக்கு 19 இடங்களும், காங்கிரஸுக்கு 15 இடங்களும் கிடைத்தன. ஐந்தாண்டுகள் கழித்து இப்போது நடந்த தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. காரணம், செளதாலாவின் மகன் துஷ்யந்த்.

இந்த சட்டசபைத் தேர்தலுக்கு ஓர் ஆண்டுக்கு முன், அதாவது 2018-ம் ஆண்டு, செளதாலா குடும்பத்தில் பதவிச் சண்டை நடந்தது. அஜய் சிங், அபய் சிங் என செளதாலாவுக்கு இரண்டு மகன்கள். ஆசிரியர்கள் நியமன முறைகேடு, தந்தை செளதாலாவுடன் அவரது மூத்த மகன் அஜய் சிங்கும் சிறையில் இருக்கிறார். 2018-ம் ஆண்டு, அஜய் சிங் இரண்டு வாரம் பரோலில் வந்தபோது குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, அஜய் சிங்கின் மகன்கள் துஷ்யந்த், திக்விஜய் ஆகியோரை 2018 நவம்பர் 2-ம் தேதி கட்சியிலிருந்து நீக்கினார் செளதாலா. இதனால் கோபம் அடைந்த அஜய் சிங், கட்சித் தலைமையைக் கடுமையாக விமர்சித்தார். அப்போது அரியானா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அஜய் சிங்கின் தம்பி அபய் சிங், அண்ணன் அஜய் சிங் மீது நடவடிக்கை எடுத்தார்.

அஜய் சிங் உடன் 10 எம்.எல்.ஏ-க்களும், 2 எம்.பி-க்களும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக செளதாலா அறிவித்தார். .

அபய் சிங்
அபய் சிங்

சகோதரர்கள் அஜய் சிங் - அபய் சிங் ஆகியோரிடம் நிலவிவந்த அதிகார மோததால், இந்திய தேசிய லோக் தளம் உடைந்தது. தன்னை கட்சியிலிருந்து நீக்கியதால், புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார் அஜய் சிங். ''இந்திய தேசிய லோக் தள கட்சியையும் மூக்குக் கண்ணாடி சின்னத்தையும் அபய் சிங்குக்குப் பரிசாக அளித்துவிட்டு, புதிய கட்சியைத் தொடங்குகிறேன்'' என அதிரடியாகச் சொன்னார் அஜய் சிங். அப்படி தொடங்கப்பட்ட ஜனநாயக ஜனதா கட்சிக்கு (ஜேஜேபி) அவரது மகன் துஷ்யந்த் தலைவர் ஆனார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக ஜனதா கட்சி தோல்வியைத் தழுவியது. இதனால், மீண்டும் இந்திய தேசிய லோக்தளத்துடன் இணைய விரும்பிய அஜய்சிங்கின் மகன்கள், பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்படி பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில்தான், அரியானா சட்டசபைத் தேர்தல் வந்தது. அதனால், இணைப்புப் பேச்சுவார்த்தையை ஓரம்கட்டிவிட்டு சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டது.

அஜய் சிங்
அஜய் சிங்

தேர்தல் முடிவுகள் வெளியான போது பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளும் பி.ஜே.பி. 40 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் 31 இடங்களையும் வென்றன. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றது. லோக்தளம் ஒரு இடத்திலும் மற்ற கட்சிகள் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதிக இடங்களில் பி.ஜே.பி. வெற்றி பெற்ற போதும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் துஷ்யந்த் ஆதரவை நாடுகிறது. அதோடு 6 சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்க முயன்று வருகிறது பி.ஜே.பி. அதே நேரம் காங்கிரஸும் ஆட்சியை அமைக்க காய்கள் நகர்த்தி வருகிறது. துஷ்யந்தின் ஜனநாயக ஜனதா கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்க காங்கிரஸ் முயல்கிறது. முதல்வர் பதவியை துஷ்யந்த்துக்கு வழங்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அரியானாவில் ஆட்சியைப் பிடிப்பது பி.ஜே.பி-யா.. காங்கிரஸா? என்பது துஷ்யந்த் கையில் இருக்கிறது.

துஷ்யந்த்
துஷ்யந்த்

ஜனநாயக ஜனதா கட்சியை ஆரம்பித்தபோது, அஜய் சிங் சொன்ன வார்த்தைகள் இவை.

''நான் எனது இறுதி முடிவை அறிவித்துவிட்டேன். இனி போர் தொடங்கும். துரியோதனா (அபய் சிங்) நீ அழிக்கப்படுவாய். இரக்கத்துக்கு இடமில்லை'' இறுதி முடிவு துஷ்யந்த் கையில் இருக்கிறது. யார் அழிக்கப்படுவார்கள் என்பது ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.

கிங் மேக்கர் ஆவாரா துஷ்யந்த்?

`சராசரி சொத்துமதிப்பு ரூ.18 கோடி; 93% கோடீஸ்வரர்கள்!' - `ரிச்'சான ஹரியானா எம்.எல்.ஏ-க்கள்