Published:Updated:

`இன்னும் டவுன்லோடு முடியவில்லையா?’- மாநில தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம்

`சிசிடிவி காட்சிகளைத் தாக்கல் செய்யும் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், வீடியோ பதிவை தாக்கல் செய்ய 15 நாள்கள் அவகாசம் வேண்டும்' என்றும் தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

`உள்ளாட்சித் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேட்டைத் தடுக்கும் வகையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஜனவரி 3-ம் தேதி மாலை ஒப்படைக்க வேண்டும்' என்று கடந்த 30-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

இந்த நிலையில், நேற்று முன்தினம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, `சிசிடிவி காட்சிகளைத் தாக்கல் செய்யும் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், வீடியோ பதிவை தாக்கல் செய்ய 15 நாள்கள் அவகாசம் வேண்டும்' என்றும் தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத மாநில தேர்தல் ஆணையத்தின் மீது அதிருப்தியைத் தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கின் விசாரணையை நேற்றும் நடத்தியது. `ஏற்கெனவே இந்த நீதிமன்றம் விடுத்த உத்தரவின்படி ஏன் சிசிடிவி காட்சிப்பதிவுகளை தாக்கல் செய்யவில்லை' என்று மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மாநிலத் தேர்தல் ஆணையம்
மாநிலத் தேர்தல் ஆணையம்

``3-ம் தேதி மாலை வரை வாக்கு எண்ணும் பணி நீடித்ததால், திட்டமிட்டபடி சிசிடிவி காட்சிகளைத் தாக்கல் செய்ய முடியவில்லை. கம்ப்யூட்டரில் பதிவாகியுள்ளதை டவுன்லோட் செய்து ஒப்படைக்கக் கால அவகாசம் தேவைப்படுகிறது" என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் ராஜா கார்த்திகேயன் ஆகியோர் தெரிவித்தனர்.

`வாக்கு எண்ணும் பணி முடிந்து 3 நாள்களாகிறது. டவுன்லோட் செய்யும் பணி இன்னும் முடியவில்லையா.. இதுபோன்ற நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. சி.சி.டி.வி காட்சிகளை ஒப்படைக்க தாமதிப்பது பல்வேறு சந்தேகத்தை உண்டாக்கும்...'' என்றவர்கள்,

மாநிலத் தேர்தல் ஆணையம்
மாநிலத் தேர்தல் ஆணையம்

``சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க இன்னும் எத்தனை நாள்கள் ஆகும்?" என்று நீதிபதிகள் கேட்டனர்.

வழக்கு விசாரணை இன்றும் தொடர்கிறது. இந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் சொல்லும் பதிலை வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.