Published:Updated:

நாங்குநேரியில் போட்டியிட விரும்பிய பி.ஜே.பி-யை அ.தி.மு.க சமாளித்த கதை!

மெகா கூட்டணியில் களமிறங்குவதால், பி.ஜே.பி வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக நினைத்து, நாங்குநேரியில் போட்டியிடக் காய் நகர்த்தி வந்தது. அதோடு பி.ஜே.பி-க்கு நாங்குநேரியில் கணிசமான அளவு வாக்குவங்கியும் இருப்பதாகச் சொல்லிவந்தது. ஆனால், நாங்குநேரியில் அ.தி.மு.க களமிறங்குகிறது.

Modi - Amit Shah
Modi - Amit Shah

அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பி.ஜே.பி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் காய் நகர்த்திவந்தது. ஆனால், நாங்குநேரியை பி.ஜே.பி-யிடமிருந்து தட்டிப்பறித்துவிட்டது அ.தி.மு.க. இடைத்தேர்தல் நடைபெறவுள்ள இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தற்போது அறிவித்துள்ளது அ.தி.மு.க.

Election Commission
Election Commission

கன்னியாகுமரி மாவட்டம், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஹெச்.வசந்தகுமார். கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதனால், அந்தத் தொகுதி காலியானது. அதேபோல், விக்கிரவாண்டி சட்டமன்ற   உறுப்பினர் ராதாமணி, இறந்ததையடுத்து, அத்தொகுதியும் காலியாக உள்ளது. இதையடுத்து, இந்தியத் தேர்தல் ஆணையம், இந்த இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21 அன்று இடைத்தேர்தல் நடக்கும் என அறிவித்தது. வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 23-ல் தொடங்கி, செப்டம்பர் 30-ம் தேதிவரை நடைபெறும்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பிடித்தது. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பி.ஜே.பி இடம்பிடித்தது. இதே கூட்டணி இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிக்குத்தான் போட்டி நிலவுகிறது. சீமானும் களத்தில் இருக்கிறார். ஆனால், கமலின் மக்கள் நீதி மய்யமும் தினகரனின் அ.ம.மு.க-வும் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.

Modi - Edappadi Palanisamy
Modi - Edappadi Palanisamy

கடந்த சட்டமன்றத் தேர்தலில், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் விக்கிரவாண்டியில் தி.மு.க-வும் வென்றிருந்தன. தற்போதும் அதேநிலை தொடரும் எனத் தி.மு.க கூட்டணிக்குள் பேசி முடிவுசெய்யப்பட்டது. இந்தக் கட்சிகளுக்கான வேட்பாளர் தேர்வும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விக்கிரவாண்டியில்  உதயநிதி ஸ்டாலினைக் களமிறக்க தி.மு.க. எம்.பி கௌதம சிகாமணி விருப்பமனு கொடுத்திருந்தார்.

ஆனால், தி.மு.க மேலிடத்துக்கு அந்தத் திட்டம் ஏதும் இருக்கவில்லை. தி.மு.க மத்திய மாவட்டக் கழகப் பொருளாளர் புகழேந்தியை விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளராக அறிவித்தது தி.மு.க. வழக்கமாக இடைத்தேர்தல்களில் முதலில் வேட்பாளர்களை அ.தி.மு.க-தான் அறிவிக்கும். இந்தமுறை தி.மு.க முந்திக்கொண்டது.

Stalin - Udhayanidhi
Stalin - Udhayanidhi

அ.தி.மு.க வேட்பாளாரை அறிவிக்க தாமதமானதற்குக் காரணம் பி.ஜே.பி என்று சொல்லப்பட்டது. “விக்கிரவாண்டியில் அ.தி.மு.க போட்டியிடட்டும்... நாங்குநேரி எங்களுக்கு” என்று பி.ஜே.பி கேட்டதாகச் சொல்லப்பட்டது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு அ.தி.மு.க சார்பில் முன்னாள் எம்.பி லட்சுமணன், விக்கிரவாண்டி ஒன்றியச் செயலாளர் வேலு, கானை ஒன்றியச் செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர், தம்பிதுரை ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர். அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்ட நிலையில், கானை ஒன்றியச் செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் இத்தொகுதியில் போட்டியிடுவதாக அ.தி.மு.க அறிவித்துள்ளது. பா.ம.க-வுடன் கரம்கோத்துள்ள நிலையில், விக்கிரவாண்டியை எளிதாக வெல்லலாம் என்று அதற்குத் தகுந்தாற்போல் திட்டம்தீட்டி வருகிறது அ.தி.மு.க.

Modi
Modi

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி அனந்தன் விருப்ப மனு கொடுத்திருக்கிறார். இந்நிலையில்தான், நாங்குநேரியைக் கேட்டது பி.ஜே.பி. நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. அதன் கூட்டணிக்கட்சிகளான பி.ஜே.பி, தே.மு.தி.க, பா.ம.க, புதிய தமிழகம் ஒரு இடத்தில்கூட வெல்லவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அ.தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் தேர்தல் தோல்விக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிச் சமாளித்தனர்.

பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்ததால்தான் தாங்கள் தோற்றோம் என்று அ.தி.மு.க வட்டாரத்தில் கலகக்குரல்கள் அப்போதே எழுந்தன. அதேசமயம், கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என இரு கட்சிகளும் அறிவித்தன. மத்தியில் பா.ஜ.க அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் இழந்த செல்வாக்கை மீட்க வேண்டும் என நினைத்திருக்கிறது. அதற்காகத்தான், தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜனுக்கு தெலுங்கானா ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டது என்றும் ஒரு பேச்சு நிலவுகிறது.

Edappadi Palanisamy - O.Panneerselvam
Edappadi Palanisamy - O.Panneerselvam

தமிழிசைக்குப் பிறகு இதுவரை தமிழக பா.ஜ.க தலைவராக யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பிரதமர் மோடியின் 100 நாள் சாதனை விளக்கக்கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் நடக்கும் இடைத்தேர்தலில், நிச்சயம் போட்டியிட்டு, வெற்றிபெற வேண்டும் என நினைக்கிறது பிஜே.பி. கடந்த நான்கு தேர்தல்களில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ்தான் இத்தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸின் வசந்தகுமார் 74,932 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க–வுக்கு 57,617 வாக்குகள் கிடைத்தன. 17,315 வாக்குகள் வித்தாயசத்தில் வசந்தகுமார் வெற்றிபெற்றார். அதனால், இந்தத்தேர்தலில், மெகா கூட்டணியில் களமிறங்குவதால், பா.ஜ.க வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக நினைத்து, நாங்குநேரியில் போட்டியிடக் காய்நகர்த்தியது. அதோடு பி.ஜே.பி-க்கு நாங்குநேரியில் கணிசமான அளவு வாக்கு வங்கி இருப்பதையும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தார்கள் தமிழக பி.ஜே.பி-யினர். ஆனால் அதிமுக, ராஜ்நாத் சிங் வருகைக்காகக் காத்திருந்தது.

Rajnath Singh
Rajnath Singh

கடற்படை விழாவுக்காகச் சென்னை வந்திருந்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிட வேண்டும் என்றும், அதை மத்திய தலைமை விரும்புவதாகவும் அ.தி.மு.க மேலிடத்தில் தெரிவித்தார் ராஜ்நாத் சிங். ஆனால், அ.தி.மு.க தலைமை இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கடந்த இடைத்தேர்தலில் ஆறு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது அ.தி.மு.க. இருந்தபோதிலும் ஆட்சியைத் தக்கவைத்தது. இந்த இரண்டு தொகுதியின் இடைத்தேர்தலிலும் வெல்ல வேண்டும், தி.மு.க-வுக்கு கூடுதலாக சட்டமன்ற இடங்கள் கிடைக்கக் கூடாது என்பதிலும் அ.தி.மு.க கவனமாக இருக்கிறது. அதனால், பா.ஜ.க-வுக்கு நாங்குநேரியை விட்டுத் தரமுடியாது என்பதை ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துச் சொல்லியுள்ளனர் அ.தி.மு.க-வினர்.

இன்னொருபுறம் அமித்ஷாவின் மொழி பற்றிய பேச்சு தமிழகத்தில் வலுவான எதிர்ப்பைச் சந்தித்தது. எனவே, இப்போதைய சூழலில் பி.ஜே.பி வேட்பாளரை இறக்கினால் சாதகமான முடிவு வருவது சந்தேகம்தான் என்பதையும் அ.தி.மு.க விளக்கியது. இதையடுத்துதான், நாங்குநேரிக்கு வேட்பாளராக அ.தி.மு.க-வின் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

`ஒண்டிவீரனுக்கு மரியாதை!’ - நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு முந்தும் தலைவர்கள்?