Published:Updated:

`நிச்சயதார்த்தம் ஒழுங்காக நடந்தால்தான் திருமணம் நடக்கும்!’ - இடைத்தேர்தல் கணக்கு சொல்லும் எ.வ.வேலு

”தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயக் கடன் தள்ளுபடி குறித்துப் பேசியிருக்கிறாரா?” என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

எ.வ.வேலு
எ.வ.வேலு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா.புகழேந்தியை ஆதரித்து, மேல்காரணை என்ற பகுதியில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர், “விக்கிரவாண்டி தொகுதி முழுக்க முழுக்க விவசாயிகளைக் கொண்டிருக்கும் தொகுதி. அனைத்து விவசாயிகளும் தேர்தலில் நிற்க முடியாது என்பதால்தான் அவர்களது பிரதிநிதியாக நா.புகழேந்தி நிற்கிறார். இன்று தமிழகத்தின் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தான் ஒரு விவசாயி என்று சட்டப்பேரவையில் கூறுகிறார். கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கு கூட்டு வட்டி, அபராத வட்டி அப்படின்னு கலர் கலரா வட்டி வாங்குகிறார்கள். 50,000 ரூபாய் கடன் வாங்கினால் 5 லட்சம் ரூபாய் கட்டச் சொல்கிறார்கள்.

` யார் இந்தப் புகழேந்தி?' - விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க வேட்பாளர் தேர்வான பின்னணி!
எ.வ.வேலு
எ.வ.வேலு

7,000 கோடி ரூபாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தவர் மறைந்த எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள். ஆனால், தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு வங்கியில் வாங்கிய விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வேன் என்று கூறியிருக்கிறாரா? ஆட்சி மாற்றம் வேண்டும் என்று நாங்கள் துடிப்பது எம்.எல்.ஏ ஆகிவிட்டால் சம்பளம் வரும் என்பதற்காக அல்ல. நாம் திருமணம் செய்துகொள்கிறோம். நேராகவா செய்து கொள்கிறோம்? முதலில் பெண்ணைப் பார்க்கிறோம். அப்புறம் அந்தப் பெண், அழகா இருக்கிறதா என்று பார்க்கிறோம். அப்புறம் நம் வீட்டில் ஒழுங்காக விளக்கேற்றுமா என்று பார்ப்போம். அதன்பிறகுதான் பருப்பும் சோறும் சாப்பிடுவோம். அதற்கடுத்துதான் நிச்சயதார்த்தம். அதன்பிறகுதான் திருமணம் செய்வோம்.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு, பணம் வைத்திருப்பவர்களும் பஸ் முதலாளிகளும், ரைஸ் மில் முதலாளிகளும் ஆளும் கட்சிக்கு நிகராக 15 கோடி ரூபாய் வரை செலவு செய்கிறோம் என்று தளபதியிடம் சீட் கேட்டார்கள்.
தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு

ஆக, திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் தேவைப்படுகிறதா இல்லையா? நிச்சயதார்த்தம் ஒழுங்காக நடந்தால்தானே திருமணம் ஒழுங்காக நடக்கும்? ஓராண்டுக்குப் பிறகு இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால், நிச்சயதார்த்தம் போல நடக்கும் இந்த இடைத்தேர்தலில், தி.மு.க-வை வெற்றிபெற வைக்க வேண்டும். இந்தக் கடன்கார ஆட்சியில் 3 லட்சம் கோடி கடனை நம் தலையில் சுமத்தியிருக்கிறார்கள். இதே விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு பணம் வைத்திருப்பவர்களும் பஸ் முதலாளிகளும், ரைஸ் மில் முதலாளிகளும் ஆளும் கட்சிக்கு நிகராக 15 கோடி ரூபாய் வரை செலவுசெய்கிறோம் என்று தளபதியிடம் கேட்டார்கள். ஆனால், அதையெல்லாம் தூக்கி எறிந்த எங்கள் தளபதி, தொண்டனை, விவசாயியை நிற்க வைக்க வேண்டும் என்று புகழேந்திக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதனால், புகழேந்தி வெற்றிபெற்றால் விவசாயிகள் வெற்றிபெற்றார்கள் என்று அர்த்தம். அதனால் தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள்” என்றார்.