Published:Updated:

இலவச டீ ... டூ விலர்களுக்கு இலவச சர்வீஸ்... உள்ளாட்சி வேட்பாளர்களின் தேர்தல் டெக்னிக்குகள்!

சுயேச்சைகள் அரசியல் கட்சிகளுக்கு இணையாக வாக்குறுதிகளை அள்ளி வீசுவது, மக்களின் தேவையறிந்து பணம் அல்லது பொருள்களை வழங்குவது, பிரியாணி விருந்து என வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலைவிட ஊரக உள்ளாட்சித் தேர்தல் கள நிலவரம் பரபரப்பாக உள்ளது. அது எந்தளவுக்கு என்றால், வாக்காளரின் வங்கிக் கணக்கில் பணம் போடுவது, மது பாட்டில் வழங்குவது, வெங்காயம் இலவசமாக வழங்குவது என்று மக்களின் தேவையை அறிந்து டைமிங்காகவும் டெக்னாலஜியை பயன்படுத்தியும் வாக்காளர்களை கவர்கிறார்கள்.

வெங்காய லாரி
வெங்காய லாரி

பல்வேறு ஊர்களில் ஊராட்சித் தலைவர் பதவிகளை லட்சக்கணக்கில் ஏலம் எடுத்த தகவல்கள் வெளியே தெரிந்து பரபரப்பானதால், இப்போது அதை ரகசியமாகச் செய்து முடித்து விட்டார்கள். ஏலம் படியாமல் போட்டி போடுகிறவர்களின் டெக்னிக்குகள்தான் இப்போது தேர்தல் அலுவலர்களை அதிர வைக்கின்றன.

ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட உறுப்பினர்களுக்கு மட்டும்தான் அரசியல் கட்சி சார்பில் போட்டி நிலவுகிறது. ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு சுயேச்சையாகத்தான் போட்டியிட வேண்டும் என்பதால் அரசியல் கட்சிகளுக்கு இணையாக வாக்குறுதிகளை அள்ளி வீசுவது மக்களின் தேவையறிந்து பணம் அல்லது பொருள்களை வழங்குவது, தினந்தோறும் பிரியாணி விருந்து என்று அசத்தி வருகிறார்கள். நேற்று ஒரு நாளில் தேர்தல் அலுவலர்களும் காவல்துறையினராலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

விருதுநகர் மாவட்டம் கட்டநார்பட்டி ஊராட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஈஸ்வரி, வாக்கு கேட்டு செல்லும்போது வாக்களார்களுக்கு மது வழங்கியதாக புகார் எழுந்ததையடுத்து, வழக்கு பதிவு செய்து, பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை காவல்துறை கைப்பற்றியுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருவோணம் தோப்புவிடுதியைச் சேர்ந்த திருச்செல்வம் என்பவரை ஏ.டி.எம்மில் பணம் போடும்போது பிடித்தனர். போட்டியிடும் அவர் உறவினருக்காக ஒவ்வொரு வாக்காளர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதாக வந்த புகாரில், அவரை அழைத்து அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகிறர்கள். அவரிடமிருந்து ரூபாய் 1,42,000 கைப்பற்றப்பட்டது.

தேர்தல் பிரசாரம்
தேர்தல் பிரசாரம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் மணலூர், கழுகேர்கடையில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு வாக்களிக்க, வீட்டுக்கு 2 கிலோ வெங்காயம் விநியோகம் செய்ய வடநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 30 டன் வெங்காய லாரியை தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன் தலைமையில் சிறைபிடித்தனர். தேர்தல் அலுவலர்கள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் உரிய ஆவணம் இல்லாமல் நாகை மாவட்டம் சீர்காழி அருகே, மகாராஷ்டிராவிலிருந்து 21 டன்னுடன் வந்த வெங்காய லாரியை மடக்கிப்பிடித்தனர். வாக்காளர்களுக்கு வழங்க வெங்காயம் கொண்டுவரப்பட்டிருப்பதாக கிடைத்த புகாரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

வெங்காய லாரி
வெங்காய லாரி

தி.மு.க சின்னம் இடம்பெற்ற காலண்டர்களைத் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டிப் பகுதி வாக்களர்களுக்கு விநியோகம் செய்ய சிவகாசியிலிருந்து சென்ற லாரியைத் தேர்தல் அலுவலர்கள் பிடித்தனர். அதைத்தொடர்ந்து தி.மு.க-வினர் வாக்குவாதம் நடத்தினார்கள். அது வழக்கமாக மக்களுக்கு கொடுக்கும் காலண்டர்தான் என்று தி.மு.க-வினர் கூறியதால் விடுவித்தனர்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடும் மெக்கானிக் பால்பாண்டி என்பவருக்கு, ஸ்பேனர் சின்னம் ஒதுக்கியுள்ளார்கள். அதனால், வாக்கு கேட்டு செல்லும் இடமெல்லாம் டூவீலர்களுக்கு இலவச சர்வீஸ் செய்து கொடுக்கிறார். அதன் மூலம் தன் சின்னமான ஸ்பேனரை வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

இதுபோல சுயேச்சை வேட்பாளர்களும் கட்சி வேட்பாளர்களும் வேட்டி சட்டை, பாத்திரங்கள் போன்றவற்றை மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். தேர்தல் முடியும்வரை உள்ளூர் டீக்கடைகளில், ஹோட்டல்களில் இலவசமாகச் சாப்பிட்டுக் கொள்ளவும் ஏற்பாடு செய்து அசத்தி வருகின்றனர்.

`உத்தவ் தாக்கரே - அம்ருதா ஃபட்னாவிஸ் மோதல்!’ - அரசியலாகும் அரசு வங்கிக் கணக்கு?

சென்னை, கோவை, திருப்பூர், மதுரை போன்ற நகரங்களில் வசிக்கும் தங்கள் ஊரைச் சேர்ந்தவர்களிடம், வீடு தேடிச்சென்று பணம் கொடுத்து வாக்களிக்க வரும்படி அழைக்கும் வேட்பாளர்களையும் பார்க்க முடிகிறது.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

தேர்தல் அலுவலர்களின் பற்றாக்குறை காரணமாக அனைத்து ஊர்களுக்கும் சென்று, இந்த முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால் கட்சிகளும் சுயேச்சைகளும் `உற்சாகமாக’ வேலை செய்கிறார்கள்.