Published:Updated:

ஜெயிலிலிருந்தே ஜெயித்த விஜயலட்சுமி! - ஜனநாயகமும் இல்லை... பணநாயகமும் இல்லை... ஒன்லி ‘பய’நாயகம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘நெடுங்குன்றம்’ சூர்யா - விஜயலட்சுமி
‘நெடுங்குன்றம்’ சூர்யா - விஜயலட்சுமி

விஜயலட்சுமிக்கு தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி என மொத்தம் 12 கவுன்சிலர்கள் வாக்களிக்கவே, விஜயலட்சுமி துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பிரீமியம் ஸ்டோரி

செங்கல்பட்டு மாவட்டம், நெடுங்குன்றம் ஊராட்சித் தேர்தலில் புழல் சிறையிலிருந்தபடியே பிரபல ரௌடி ‘நெடுங்குன்றம்’ சூர்யாவின் மனைவி விஜயலட்சுமி, துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதன் பின்னணியில் பா.ஜ.க-வின் மாஸ்டர் பிளான் இருக்கிறது என்பதுதான் அந்தப் பகுதியின் ஹாட் டாபிக்!

நெடுங்குன்றம் சூர்யா மீது எட்டு கொலை வழக்குகள் உட்பட 55 வழக்குகள் உள்ளன. அவரின் மனைவி விஜயலட்சுமி மீது இரட்டைக் கொலை வழக்கு உட்பட ஐந்து வழக்குகள் உள்ளன. இந்தநிலையில்தான் சூர்யாவும் விஜயலட்சுமியும் சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்தனர். அதன் பிறகு சூர்யாவை போலீஸார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நெடுங்குன்றம் ஊராட்சியின் ஒன்பதாவது வார்டில் விஜயலட்சுமி சுயேச்சையாகப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், அவரின் சகோதரி கெஜலட்சுமி மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தார். கடைசி நேரத்தில் கெஜலட்சுமி வாபஸ் வாங்கியதால், விஜயலட்சுமி போட்டியின்றி கவுன்சிலராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில்தான் போலீஸார் விஜயலட்சுமியைக் கைதுசெய்ய... அவரோ சிறையிலிருந்தபடியே நெடுங்குன்றம் ஊராட்சியின் துணைத் தலைவராக வெற்றிபெற்றிருக்கிறார்.

ஜெயிலிலிருந்தே ஜெயித்த விஜயலட்சுமி! - ஜனநாயகமும் இல்லை... பணநாயகமும் இல்லை... ஒன்லி ‘பய’நாயகம்...

இதன் பின்னணியில் நடந்தது குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் கவுன்சிலர் ஒருவர்... ``இந்தப் பகுதியில் சூர்யா-விஜயலட்சுமி என்றாலே தி.மு.க., அ.தி.மு.க கட்சியினரே நடுங்குகிறார்கள். கணவன் - மனைவி இருவர் மீதும் கொலை வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் இருப்பதிலிருந்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சமீபகாலமாக அவர்கள் பா.ஜ.க-வில் இருப்பதால், அந்தக் கட்சியினரின் ஆதரவும் அவர்களுக்கு இருக்கிறது. இப்போது அவர்கள் வெற்றிபெற்றதன் பின்னணியிலும் பா.ஜ.க-வினர் இருக்கிறார்கள். விஜயலட்சுமி போட்டியிட்டபோதே அவரின் சகோதரி தவிர வேறு யாரும் போட்டியிட முன்வரவில்லை. கடைசியில் அவரின் சகோதரியே விலகிக்கொண்டார். இதற்கெல்லாம் காரணம், பயம்தான். தவிர, நெடுங்குன்றம் ஊராட்சியிலுள்ள 15 கவுன்சிலர்களில் போட்டியின்றி தேர்வான ஒரே கவுன்சிலரும் விஜயலட்சுமிதான்.

கவுன்சிலராக அவர் வெற்றிபெற்றதும், அடுத்து அவர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகத் தகவல் வந்தது. இதையடுத்து ஒருவர்கூட துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடவில்லை. இவ்வளவுக்கும் இங்கு 11 பேர் தி.மு.க கவுன்சிலர்கள். தி.மு.க-வைச் சேர்ந்த கவுன்சிலர் பன்னீர் துணைத் தலைவராக விஜயலட்சுமியை முன்மொழிய... அ.தி.மு.க-வைச் சேர்ந்த கவுன்சிலர் பாலாஜி அதை வழிமொழிய... ஜெயிலுக்குள் இருந்தபடியே ஜெயித்துவிட்டார் விஜயலட்சுமி. இதில் ஜனநாயகமும் இல்லை... பணநாயகமும் இல்லை... ஒன்லி பயநாயகம்தான்” என்றார் திகிலுடன்!

ஜெயிலிலிருந்தே ஜெயித்த விஜயலட்சுமி! - ஜனநாயகமும் இல்லை... பணநாயகமும் இல்லை... ஒன்லி ‘பய’நாயகம்...

“விஜயலட்சுமியை வெற்றிபெறவிடாமல் மாவட்ட தி.மு.க-வினரும் காவல்துறையினரும் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தினார்கள்” என்று சொல்லும் பா.ஜ.க வழக்கறிஞர் அணியின் மாநிலத் தலைவர் பால் கனகராஜ் மற்றும் மாநிலச் செயலாளர் அலெஸிஸ் சுதாகர் நம்மிடம், “விஜயலட்சுமி தேர்தலில் போட்டியிடும்போதே அதைத் தடுக்க காவல்துறையினர் இடையூறுகளை ஏற்படுத்தினர். அப்போது டி.ஜி.பி-யிடம் புகார் அளித்ததால், அமைதியாகிவிட்டனர். பிறகு விஜயலட்சுமி கவுன்சிலராக வெற்றிபெற்றதும், அவரைக் கைதுசெய்துவிட்டால், அவரால் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட முடியாது என்று தி.மு.க-வினர் சிலர் கருதினர். அதனாலேயே, விஜயலட்சுமி கவுன்சிலராகப் பதவியேற்று மேடையிலிருந்து கீழே இறங்கிவரும்போதே போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

அவர்மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் எஃப்.ஐ.ஆரில், கஞ்சா வழக்கில் விஜயலட்சுமி தலைமறைவாக இருந்ததாகவும், போலீஸாரைப் பார்த்ததும் அவர் தப்பி ஓட முயன்றதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தலைமறைவாக இருக்கும் ஒருவர், எப்படித் தேர்தலில் போட்டியிட முடியும்... பதவியேற்பு விழாவில் எப்படிப் பங்கேற்க முடியும்? மாவட்ட தி.மு.க-வினரை திருப்திப்படுத்தவே விஜயலட்சுமியை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்” என்றவர், சிறையிலிருந்தபடியே விஜயலட்சுமி வெற்றிபெற்றது குறித்தும் விவரித்தார்கள்...

“புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விஜயலட்சுமியிடம் துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனுவில் சிறைக் கண்காணிப்பாளர் முன்னிலையில் கையெழுத்து வாங்கி, அதைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பித்தோம். விஜயலட்சுமிக்கு தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி என மொத்தம் 12 கவுன்சிலர்கள் வாக்களிக்கவே, விஜயலட்சுமி துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். விஜயலட்சுமியை இங்குள்ள தி.மு.க-வினர் நேரடியாக எதிர்க்க முடியாமல், காவல்துறை மூலமாக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைதுசெய்யத் திட்டமிட்டுள்ளனர். இவற்றையெல்லாம் சட்டப்படி எதிர்கொள்வோம். விஜயலட்சுமியை மாவட்ட தி.மு.க-வும் காவல்துறையும் பழிவாங்குவதன் பின்னணியில் சாதி அரசியல் உள்ளது” என்றனர்.

நெடுங்குன்றம் ஊராட்சித் தலைவராகத் தேர்வாகியிருக்கும் தி.மு.க-வைச் சேர்ந்த வனிதாவிடம் பேசினால், ``ஊராட்சியில் தி.மு.க-வுக்கு 11 கவுன்சிலர்கள் உள்ளனர். எங்கள் கட்சி சார்பில் யாரையும் துணைத் தலைவர் பதவிக்கு நிறுத்தவில்லை. துணைத் தலைவர் பதவிக்கு விஜயலட்சுமி என்னிடம் ஆதரவு கேட்டார். ஆனால், அவர் எப்படி வெற்றிபெற்றார் என்பது தெரியாது” என்றார் சுருக்கமாக.

விஜயலட்சுமியைக் கைதுசெய்திருக்கும் செங்கல்பட்டு மாவட்டம், ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் நம்மிடம், ``யாரையும் திருப்திப்படுத்த அவரைக் கைதுசெய்யவில்லை. வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருப்பவரைக் கைது செய்ததில் என்ன தவறு? இதற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை” என்றார்.

குற்றப்பின்னணிக்கொண்டவர்கள் இப்படியான பதவிகளுக்கு வருவது ஜனநாயகத்துக்கே விடுக்கப்பட்டிருக்கும் சவால்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு