Published:Updated:

`இதுவரை எங்கே போயிருந்தார்கள்?- அமைச்சர்களைச் சாடும் கனிமொழி

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி ( எல்.ராஜேந்திரன் )

’தேர்தல் சமயங்களில் மக்களைச் சந்திக்க ஓடிவரும் அமைச்சர்கள், இதுவரை எங்கே போயிருந்தார்கள்? எனக் காட்டமாகச் சாடினார் கனிமொழி.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு அக்டோபர் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாகச் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த நாராயணன் நிறுத்தப்பட்டுள்ளார்.

`2,56,414 வாக்காளர்கள்; 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!' - நாங்குநேரி இடைத்தேர்தல் அப்டேட்

வேட்புமனுத் தாக்கல் முடிந்த சூட்டோடு இரு கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். தொகுதியில் உள்ள முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு கோருவது, தேர்தல் அலுவலகங்களைத் திறப்பது எனப் பம்பரமாகச் சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில், கனிமொழி எம்.பி இன்று நெல்லைக்கு வந்தார். களக்காடு பகுதியில் கூட்டணிக் கட்சிகளின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை அவர் திறந்து வைத்தார். பின்னர் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரசாரத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

kanimozhi MP election campaign
kanimozhi MP election campaign
L.Rajendran

அப்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி, ’’நாங்குநேரி இடைத்தேர்தல் மிக முக்கியமானது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை வெற்றிபெற வைக்க வேண்டியது அவசியம். அவர் மக்களோடு இனிமையாகப் பழகக் கூடியவர். தேவையில் உள்ளவர்களுக்குப் பல உதவிகளைச் செய்பவர்.

இந்தத் தொகுதி மக்களுக்காகப் பாடுபடக் காத்திருக்கும் ரூபி மனோகரனை வெற்றிபெற வைக்க வேண்டியது அவசியம். தேர்தல் நேரத்தில் உங்களைச் சந்திக்க அமைச்சர்கள் அனைவரும் ஓடி வருகிறார்கள். அவர்கள் மற்ற நேரங்களில் எல்லாம் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்காமல் எங்கே போனார்கள்?

மக்களைக் காசுக் கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம் என்கிற எண்ணத்துடன் அமைச்சர்களின் செயல்பாடு இருக்கிறது.
கனிமொழி எம்.பி
`அவர் இறக்குமதி வேட்பாளர்; இவர் `மேட் இன் நாங்குநேரி'!'- காங்கிரஸ் வேட்பாளரைக் கலாய்த்த ஜெயக்குமார்!

மக்களை ஏமாற்றிக் காசு கொடுத்து ஓட்டுகளை வாங்கிவிடலாம் என வாக்காளர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர்கள் செயல்படுகிறார்கள். அதனால் தான் பிரச்னைகளுக்காக ஓடிவராமல் இருந்துவிட்டு தேர்தல் அறிவித்ததும் மக்களைத் தேடி வருகிறார்கள். அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டும் வகையில் காங்கிரஸ் வேட்பாளைரை வெற்றிபெற வைக்க வேண்டும்.

தமிழகத்தில் கலைஞர் முதல்வராக இருந்தபோது ஏராளமான வெளிநாட்டு முதலீடுகள் நம்மைத் தேடி வந்தன. அவரது ஆட்சியிலேயே இந்தப் பகுதி மக்களுக்கு நிறைய நல்ல திட்டங்களை நிறைவேற்றப்பட்டுள்ளன. கொடுமுடியாறு, கடனாநதி அணை, ராமநதி அணை, அடவிநயினார் அணை என அனைத்து அணைகளும் கலைஞரின் ஆட்சியில் கட்டப்பட்டது.

Kanimozhi MP press meet
Kanimozhi MP press meet

மக்களைப் பாதிக்கும் முத்தலாக் சட்டம் உள்ளிட்டவற்றை எல்லாம் எதிர்க்கும் பேரியக்கமாக தி.மு.கவும் காங்கிரஸ் கட்சிகள் இருக்கின்றன. தீவிரவாதம் என்ற போர்வையில் மக்களை அச்சுறுத்தும் செயல்களில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் தி.மு.க எதிர்த்து வருகிறது.

சாதாரண ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வை நாம் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். தற்போது நீட் தேர்வில் நடந்துள்ள மோசடியின் மூலம், அந்தத் தேர்வு முறையே மோசடியானது என்பது அம்பலமாகியிருக்கிறது.

Vikatan
இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க ஆட்சிக்குப் பாடம் புகட்ட வேண்டியது அவசியம்
கனிமொழி எம்.பி

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நாடு முழுவதும் ஒரே திசையில் வாக்களித்த போதிலும், தமிழ்நாடு தனித்து நிற்கும் என்பதைக் காட்டினோம். அதே போல தற்போது நடக்கவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழகம் தனித்துச் செயல்பட்டு அ.தி.மு.க ஆட்சிக்குப் பாடம் புகட்ட வேண்டும்’’ என்று பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு