Published:Updated:

`மெஜாரிட்டி அ.தி.மு.க, 3 இடங்களில் பா.ஜ.க.!' -செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த கரூர் நிலவரம்

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

பல மாவட்டங்களில் தி.மு.க மெஜாரிட்டியாக பதவிகளைக் கைப்பற்ற, கரூர் மாவட்டத்தில் மட்டும் அ.தி.மு.க பெரும்பான்மை காட்டி, தி.மு.க தரப்பை ஆடிப்போக வைத்திருக்கிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு பதவிகளையும் ஊராட்சி ஒன்றியங்களையும் தி.மு.க கைப்பற்ற, கரூர் மாவட்டத்தில் மட்டும் அ.தி.மு.க பெரும்பான்மையைக் காட்டி, தி.மு.க தரப்பை ஆடிப்போக வைத்திருக்கிறது. அதுவும், பா.ஜ.க மூன்று ஊராட்சி ஒன்றிய வார்டுகளைக் கைப்பற்றி, மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 115 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 157 கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 1401 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்குத் தேர்தல் நடைபெற்றது.

`4,905 வேட்புமனுக்கள்; களத்தில் கோடீஸ்வர வேட்பாளர்கள்!’- களைகட்டும் கரூர் உள்ளாட்சித் தேர்தல்

வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தமுள்ள 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் ஒன்பது இடங்களை அ.தி.மு.க-வும், 3 இடங்களை மட்டும் தி.மு.க-வும் கைப்பற்றின. இதனால், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி அ.தி.மு.க-வுக்கு என உறுதியாகியுள்ளது. இதேபோல், மொத்தமுள்ள 115 ஊராட்சி ஒன்றிய பதவிகளில் 66 இடங்களை அ.தி.மு.க-வும், 33 இடங்களை தி.மு.க-வும் கைப்பற்றியுள்ளன.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

இவை தவிர, பி.ஜே.பி, காங்கிரஸ் கட்சிகள் தலா மூன்று ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓர் இடத்தையும் கைப்பற்றியுள்ளன. மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் வரும் ஆறாம் தேதி அ.தி.மு.க சார்பில் பதவியேற்க இருக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் அதிக மாவட்டங்களில் தி.மு.க-வே அனைத்து பதவிகளிலும் பெரும்பான்மை காட்டி, அ.தி.மு.க-வினரை அதிர வைத்திருக்கிறது. ஆனால், கரூர் மாவட்டத்தில் அதற்கு நேர்மாறாக அ.தி.மு.க பலம்காட்டி, தி.மு.க தரப்பை ஆடிப்போகச் செய்திருக்கிறது. காங்கிரஸுக்கு சமமாக பி.ஜே.பி-யும் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய இரண்டாவது வார்டில் பரணிதரனும் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய 7-வது வார்டில் பாரதிதாசனும், தோகைமலை ஊராட்சி ஒன்றிய 6-வது வார்டில் சரண்யாவும் வெற்றிவாகை சூடியிருக்கிறார்கள்.

கரூர் மாவட்டத்தில் தி.மு.க கூட்டணியின் வெற்றி கணிசமாக குறைந்ததற்கு காரணம், செந்தில் பாலாஜிக்கு எதிராக தி.மு.க-வினரே குழிபறிப்பு வேலைகளைச் செய்ததுதான். சமீபத்தில்தான், அ.ம.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு வந்த செந்தில் பாலாஜிக்கு 41 நாள்களில் மாவட்ட பொறுப்பாளர் பதவியும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் சீட்டும் தி.மு.க தலைமையால் வழங்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை
நா.ராஜமுருகன்

அதற்கு முன்பு கரூர் மாவட்டச் செயலாளராக இருந்த நன்னியூர் ராஜேந்திரனின் மந்தமான செயல்பாட்டால் புழுங்கிப் போயிருந்த தி.மு.க-வினர், செந்தில் பாலாஜிக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுத்தபோது, பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், மாவட்டம் முழுக்க தன்னோடு அ.ம.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு வந்த நபர்களையே முன்னிலைப்படுத்தினார். இதனால், கோபமடைந்த தி.மு.க-வினர், செந்தில் பாலாஜிக்கு பாடம் புகட்ட, உள்ளடி வேலைகளைப் பார்த்து அ.தி.மு.க-வுக்கு வெற்றியைத் தேடி தந்துவிட்டனர்" என்றார்கள்.

இந்த முறைகேட்டைக் கண்டித்து, உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடுத்துள்ளோம். சட்டப்படி, எங்களுக்குச் சொந்தமாக வேண்டிய பதவிகளை நாங்கள் போராடி மீட்போம்.
செந்தில் பாலாஜி

ஆனால், செந்தில் பாலாஜியோ, ``இந்தத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பலவும் தி.மு.க-வுக்குச் சாதகமாகவே வந்தன. ஆனால், அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு, தி.மு.க ஜெயித்த பதவிகளை அ.தி.மு.க வேட்பாளர்களை வெற்றியாளர்களாக அறிவித்துவிட்டனர்.

 செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்த முறைகேட்டை கண்டித்து, உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடுத்துள்ளோம். சட்டப்படி, எங்களுக்குச் சொந்தமாக வேண்டிய பதவிகளை நாங்கள் போராடி மீட்போம்" என்றார் கொதிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு