Published:Updated:

ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம்விடச் செய்வது எவை?

பெரும்புள்ளிகளும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் வசிப்பவர்களும் ஊராட்சித் தலைவர் பதவிகளைக் கொள்முதல் செய்யும் வழக்கம் தமிழகத்தில் தொடர்கிறது.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

மும்பையில் குடும்பத்துடன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும் ஒருவர் நெல்லை மாவட்டத்தில் ஊராட்சித் தலைவராகப் பதவி வகிப்பார். மலேசியாவில் ஹோட்டல் நடத்தும் ஒருவர் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சியில் தலைவராக இருப்பார்.

வேட்பு மனுத்தாக்கல்
வேட்பு மனுத்தாக்கல்

'வழிபாட்டுத் தலத்துக்கு 50 லட்சம், ஒவ்வொரு சாதிக் கூட்டத்துக்கும் 5 லட்சம்' என்று பணத்தைக் கொடுத்து போட்டியே இல்லாமல், உடல் நோகாமல் உள்ளூர் பெரும்புள்ளிகளும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் பிழைப்பு நடத்திக்கொண்டு இருப்பவர்களும் ஊராட்சித் தலைவர் பதவிகளைக் கொள்முதல் செய்யும் வழக்கம் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கிறது.

கேட்கவே காமெடியாக இருக்கிறதல்லவா... ஆனால், இதுதான் உண்மை. இப்போது சமூக ஊடகங்களின் பரவலாக... பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

வேட்பு மனு தாக்கல்
வேட்பு மனு தாக்கல்

ஊராட்சித் தலைவர் பதவியை ஏலத்தில் எடுத்துக்கொள்ளும் வழக்கமும் எஸ்.சி, எஸ்.டி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் அதில் யார் போட்டியிட வேண்டும் என்பதை ஆதிக்க சாதியினரே முடிவு செய்யும் கொடுமையும் சைலன்டாக நடந்துதான் வருகிறது. இந்தப் பதவி வெறி ஒரே சாதிக்குள் கொலை செய்யும் அளவுக்குச் சென்றுள்ளதுதான் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் உட்பட பல மாவட்டங்களில் ஊராட்சித் தலைவர் பதவியை ஏலத்தில் எடுத்த சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 1 -ம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி ஊராட்சி மன்றத்தேர்தல் தொடர்பாக சமுதாயக்கூடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. அப்போது அ.தி.மு.க கிளைச் செயலாளர் ராமசுப்பு என்பவர், தன்னைப் போட்டியின்றி ஊர் மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அதற்காக ஊருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை இப்போதே செய்து விடுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்

``அதெல்லாம் கூடாது எனது சகோதரரும் போட்டியிடுகிறார். அதனால் ஓட்டு போட்டே தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று தனியார் வங்கி ஊழியரான சசீஷ்குமார் கூறியிருக்கிறார். இதனால் இரண்டு தரப்புக்கும் வன்முறை ஏற்பட்டு, ராமசுப்பு ஆட்களால் சதீஷ்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விட்டதில் இளைஞர் கொல்லப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் களரி ஊராட்சிக்குட்பட்ட சுமைதாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் போட்டியிட விரும்பிய நிலையில், இவர்களில் ஒருவரைத் தேர்வு செய்ய ஊர்மக்கள் அனைவரும் வாக்குச்சீட்டு அடித்து வாக்களித்து தேர்வு செய்த சம்பவம் மாவட்ட நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கோப்பு படம்
கோப்பு படம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகிலுள்ள ஊராட்சியில், இரண்டு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஒப்பந்தம் போட்டுக்கொண்டு மாறி மாறித் தலைவராக வந்து கொண்டிருக்கிறர்கள். இங்குள்ள சிறுபான்மை சாதியினர் ஓட்டுப்போட மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் தலைவர் பதவிக்கு போட்டி போடவே முடியாத நிலை. இந்தக் கொடுமையை இங்குள்ள அதிகாரிகளே ஊக்குவிக்கிறார்கள்.

இப்படிப் பணபலம், சாதி, மத செல்வாக்கு உள்ளவர்களே ஊராட்சித் தலைவர் பதவிகளை பணம், அதிகாரத்தைப் பயன்படுத்தி போட்டியில்லாமல் கைப்பற்றும் கொடுமை நடந்து கொண்டே இருக்கிறது. எம்.பி, எம்.எல்.ஏ பதவிக்கு போட்டி போடாமல் ஊராட்சித் தலைவர் பதவிக்கு இந்தளவு போட்டி போட என்ன காரணம் என்பதை சமூக ஆர்வலர்களிடம் கேட்டோம்.

''உள்ளாட்சி அமைப்புகளில் அதிகமான அதிகாரம் கொண்டது ஊராட்சித் தலைவர் பதவி. அதிலும் மாநகராட்சி, மாவட்டத் தலைநகரம், தாலுகா நகரங்களுக்கு அருகிலுள்ள ஊராட்சிகள் ரொம்பவும் செல்வாக்கு மிகுந்தவை. காரணம், புறநகரில் கட்டப்படும் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் எதுவாக இருப்பினும் இவர்கள் அனுமதி இல்லாமல் தொடங்க முயடியாது

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

அதுபோல் தொழில் வரி மூலம் அதிகமான வரி வருவாய் உண்டு. இதுபோன்ற சில ஊராட்சிகளில் தலைவர்களை தொழிலதிபர்கள், பெரும் நிறுவனங்களே செலவு செய்து தேர்வு செய்கிறார்கள். ஊராட்சித் தலைவர்களுக்கு செலவு செய்யும் அதிகாரம் இருப்பதாலும், நகரங்களையொட்டியுள்ள ஊராட்சிகளில் அதிகமான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாலும் பணம் கொட்டும். இதில் ஊராட்சித் தலைவருக்கு இணையாக ஊராட்சி செயலாளரும் வருமானம் பார்ப்பார். இரண்டு பெரும் ஒன்றுபட்டுவிட்டால், அவர்கள் காட்டில் மழைதான். அது மட்டுமல்லாமல் திருமணம், காது குத்து, பொது நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள், கட்சிக் கூட்டங்களில் ஊராட்சித் தலைவருக்கு கொடுக்கப்படும் மரியாதைக்காகவே இப்பதவிக்கு போட்டியிடுகிறார்கள் அல்லது பணம் கொடுத்துப் பெற முயல்கிறார்கள்'' என்றனர்.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்திலுள்ள கம்பூர் ஊராட்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வாவிடம் பேசினோம், ''எங்கள் பகுதியில் ஏலம் விடும் பழக்கம் வரவில்லை. இங்கே ஜனநாயக முறைப்படி தேர்தல்தான். இப்பகுதி வளர்ச்சிக்கு பல்வேறு போராட்டங்களையும் ஆர்.டி.ஐ மூலம் அதிகாரிகளிடம் கேள்விகளையும் கேட்டு வருகிறோம். அதனால் எங்கள் மீது ஆத்திரம் கொண்டு எங்கள் ஊராட்சி வார்டுகளையே இரண்டாகப் பிரித்துவிட்டார்கள்.

கோப்பு படம்
கோப்பு படம்

சின்ன கற்பூரம்பட்டி வாக்குச்சாவடியை வேறு ஊருக்கு மாற்றி விட்டார்கள். பல ஊராட்சிகளில் மக்களிடம் அதிகாரிகளே பிளவு ஏற்படுத்துகிறார்கள். இந்தமுறை இளைஞர்கள் நாங்கள் ஊராட்சித் தலைவர், ஒன்றிய உறுப்பினர், மாவட்ட கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு ஜனநாயகமான முறையில் போட்டியிடுகிறோம் '' என்றார்.

உள்ளாட்சித் தேர்தலைக் கேலிக்கூத்தாக்கும் இதுபோன்ற ஜனநாயக விரோதச் சம்பவங்களை பற்றித் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது மாநிலத் தேர்தல் ஆணையம்.

மிஸ்டர் கழுகு: உள்ளாட்சி ரேஸ் -  சாமி ² வியூகம்! - எடப்பாடி ரெடி... எதிர்க்கட்சிகளுக்கு வெடி!