Published:Updated:

உள்ளாட்சி உய்யலாலா!

காந்தி மீது ஈடுபாடுகொண்ட இவர் தனது நடை, உடை, பாவனை அனைத்தையும் காந்தியைப்போலவே மாற்றிக்கொண்டவர்.

பிரீமியம் ஸ்டோரி

மன்னார்குடியில் ஒன்றிணைந்த அ.தி.மு.க-அ.ம.மு.க!

‘அ.தி.மு.க-வில் சசிகலா மற்றும் தினகரனுக்கு இடமில்லை’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார். ஆனால், மன்னார்குடியில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வினரும், அ.ம.மு.க-வினரும் உள்ளூர் அளவில் ஒன்றாகக் கைகோத்து வளையவருகிறார்கள். மன்னார்குடி அருகேயுள்ள மூவாநல்லூர் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க-வைச் சேர்ந்த ரவி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வாக்குக் கேட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் நடத்திய கூட்டத்துக்கு அ.தி.மு.க கொடியுடன், அ.ம.மு.க கொடிகளும் கட்டப்பட்டன. இரு கட்சி நிர்வாகிகளும் ஒன்றாகக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். அந்தக் கூட்டத்தில் ஆர்.காமராஜ், ‘‘தி.மு.க-வைத் தோற்கடிக்க இரண்டு கட்சிகள் இணைந்திருப்பது மகிழ்ச்சி. இது முன்கூட்டியே தெரிந்திருந்தால், 11-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் அ.ம.மு.க வேட்பாளர் சேகரையும் வாபஸ் வாங்க வைத்திருப்பேன். அந்த வார்டிலும் அ.ம.மு.க-வினர் அ.தி.மு.க வேட்பாளர் குருபரனுக்கு வாக்குக் கேட்டிருப்பார்கள்’’ என்று பேசியுள்ளார். இந்த விவகாரம் தினகரனுக்குச் செல்ல... அவர் அப்செட் ஆகிவிட்டாராம்.

உள்ளாட்சி உய்யலாலா!

‘‘எனக்கு மறந்தும்கூட வாக்களிக்க வேண்டாம்!’’

நாமக்கல் மாவட்ட ஊராட்சியின் 6-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு போட்டியிடும் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் தலைவரான ‘யோகா’ ரமேஷ், ‘‘எனக்கு வாக்களிக்க வேண்டாம்’’ என்று மக்களிடம் வித்தியாசமான முறையில் வாக்குக் கேட்டுவருகிறார். காந்தி மீது ஈடுபாடுகொண்ட இவர் தனது நடை, உடை, பாவனை அனைத்தையும் காந்தியைப்போலவே மாற்றிக்கொண்டவர். பிரசாரத்தில் இவர், ‘‘நான் வெற்றிபெற்றால் லஞ்சம், ஊழலை ஒழித்துவிடுவேன். ஆகவே, மறந்தும்கூட எனது பேருந்து சின்னத்துக்கு வாக்களிக்காதீர்கள்’’ என்று நக்கலாகச் சொல்லி மக்களை ஜெர்க் ஆக வைப்பதுடன், அதை போஸ்டராக அச்சடித்தும் ஒட்டிவருகிறார்.

ஆர்.டி.அரசு - தனபால் - இதயவர்மன்
ஆர்.டி.அரசு - தனபால் - இதயவர்மன்

கவுன்சிலர் பதவி... களமிறங்கும் எக்ஸ் எம்.எல்.ஏ-க்கள்!

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தின் 16-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு செய்யூர் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார். இதே ஊராட்சி ஒன்றியத்தில் 26-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் திருப்போரூர் முன்னாள் எம்.எல்.ஏ தனபால் போட்டியிடுகிறார். இவர்கள் தவிர, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தின் 3-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க சார்பில் திருப்போரூர் முன்னாள் எம்.எல்.ஏ இதயவர்மன் போட்டியிடுகிறார். அனைவருமே ஒன்றியத் தலைவர் பதவியைக் குறிவைத்தே தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதையடுத்து, ‘‘ஏற்கெனவே அனுபவிச்சது போதாதா? முன்னாள் எம்.எல்.ஏ-க்களே களத்துல இறங்கினா இத்தனை வருஷமா கட்சிக்கு உழைக்கிற நாங்கல்லாம் எங்க போறது?’’ என்று கடுகடுக்கிறார்கள் உள்ளூர் நிர்வாகிகள்!

போட்டியின்றி வென்ற தி.மு.க... நீதிமன்றம் செல்லத் தயாராகும் அ.தி.மு.க!

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குத் தேர்தல் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. ஆனால், தேர்தல் தேதி அறிவித்ததற்கு மறுநாள், மாவட்ட தேர்தல் அதிகாரியை அழைத்த ரிஷிவந்தியம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் பட்டியலைக் கேட்டாராம். இதையடுத்து, பழைய அதிகாரிகள் விடுவிக்கப்பட்டு, ஊரக வளர்ச்சித்துறையின் செயற் பொறியாளர்கள் புதிய தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் பல இடங்களில் தி.மு.க போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டிருப்பதாகக் குமுறும் அ.தி.மு.க-வினர், இது தொடர்பாக நீதிமன்றம் செல்லவும் தயாராகிவருகிறார்கள்!

உள்ளாட்சி உய்யலாலா!

‘‘அதிகாரிகளிடம் பேசிவிட்டேன்!’’

நெல்லை மாவட்டம், மானூர் யூனியனின் தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் நெல்லை மத்திய மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப்பின் பேச்சுதான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ‘‘தேர்தல் முடிவு நமக்குச் சாதகமாகவே இருக்கும். நமது வேட்பாளர்கள் வெற்றிபெற்றதாகவே முடிவுகள் அறிவிக்கப்படும். அதிகாரிகளிடம் பேசி அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டேன்’’ என்று அவர் வெளிப்படையாகப் பேச... “தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே இப்படித்தான் அராஜகம் செய்வார்கள்... இது குறித்து மாநிலத் தேர்தல் கமிஷனுக்குப் புகார் அனுப்பவிருக்கிறோம்” என்று பொங்குகிறார்கள் அ.தி.மு.க-வினர்!

உள்ளாட்சி உய்யலாலா!

களத்தில் ‘வளையக்கா’ ரெபேக்காள்!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் யூனியன் 6-வது வார்டுக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ரெபேக்காள். அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அவரை ‘வளையக்கா’ என்றே அழைக்கிறார்கள். காதில் பெரிய வளையம் போட்டிருக்கும் அவர், 1996 முதல் பீடித்தொழிலாளர் நலனுக்காகச் செயல்பட்டுவருகிறார். ஒருமுறை பீடித் தொழிலாளர்களின் போராட்டத்தில் ரெளடிகளை நேருக்கு நேராக எதிர்கொண்டபோது அவரின் காது வளையத்தைப் பிடித்திழுத்து வன்முறையில் ஈடுபட்டபோது, துணிச்சலுடன் அவர்களை விரட்டியடித்தார். தொழிலாளர்கள் ஆதரவுடன் களமிறங்கியிருக்கும் அவருக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்பிலிருந்தும் நெருக்கடி வந்தாலும், வளைந்து கொடுக்காமல் களத்தில் சுழன்றுவருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு