Published:Updated:

உள்ளாட்சி உய்யலாலா!

உள்ளாட்சி உய்யலாலா!
பிரீமியம் ஸ்டோரி
உள்ளாட்சி உய்யலாலா!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2021

உள்ளாட்சி உய்யலாலா!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2021

Published:Updated:
உள்ளாட்சி உய்யலாலா!
பிரீமியம் ஸ்டோரி
உள்ளாட்சி உய்யலாலா!

ஜட்டியுடன் ‘கோடாரி’ ஆட்டம்! - மிரண்டுபோன தம்பிகள்...

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள மாதனூர் ஊராட்சியிலிருக்கும் விண்ணமங்கலம் கிராமத்தில், நாம் தமிழர் கட்சியினர் அக்டோபர் 3-ம் தேதி இரவு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது, தி.மு.க தொண்டர் விஜி என்பவர் தலைக்கேறிய மப்புடன் வீட்டுக்குள்ளிருந்து கோடாரியுடன் பாய்ந்துவந்தார். வரும் வேகத்தில் சட்டை, பேன்ட்கூட அணியாமல் ஜட்டியுடன் வந்துவிட்டார். சீமான் தம்பிகளிடமிருந்து கட்சிக்கொடியைப் பறித்து, காலில் போட்டு மிதித்த விஜி, ‘‘இது தி.மு.க வார்டுடா... உங்க அண்ணனை எனக்குப் பிடிக்காது. நீங்க உள்ளே வரக் கூடாது!’’ என்று கோடாரியுடன் அவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து நாம் தமிழர் தம்பிகள் மிரண்டேபோனார்கள். ஒருவழியாக போலீஸார் வந்து, குண்டுக்கட்டாக ஜட்டி இளைஞரைத் தூக்கிக்கொண்டு சென்ற பிறகே பெருமூச்சுவிட்டார்கள் நாம் தமிழர் நிர்வாகிகள்!

உள்ளாட்சி உய்யலாலா!

‘‘கொடிக்கம்பத்தைக் காணோம்!’’ - வறுத்தெடுத்த வைத்திலிங்கம்

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம். தொடர்ந்து, பம்பப்படையூரில் கட்சிக்கொடியை ஏற்றிவைக்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்காகச் சிறு மேடையுடன்கூடிய புதிய கொடிக்கம்பத்தையும் அமைத்திருந்தனர். பிரசாரத்தை முடித்துவிட்டு, கொடியேற்றுவதற்காக பம்பப்படையூர் சென்ற வைத்திலிங்கம், காரைவிட்டு இறங்கினார். ஆனால், அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் திருதிருவென விழிக்க... ‘‘கொடிக்கம்பம் எங்கப்பா?’’ என்று நிர்வாகிகளிடம் வைத்திலிங்கம் கேட்டிருக்கிறார். ‘‘அண்ணே... நம்மளுக்கு வேண்டாதவங்க யாரோ கொடிக்கம்பத்தைத் தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னு நினைக்குறோம்’’ என்று தலையைச் சொறிந்திருக்கிறார்கள். ‘‘வடிவேலு ‘கிணத்தைக் காணோம்’னு சொல்ற மாதிரி நீங்க கொடிக்கம்பத்தை காணோம்னு சொல்றீங்களா?’’ என்று கடுப்பான வைத்திலிங்கம், நிர்வாகிகளை வறுத்தெடுத்துவிட்டு கிளம்பிச் சென்றிருக்கிறார்.

உள்ளாட்சி உய்யலாலா!

விஜய் ரசிகர்கள் கார்கள் அணிவரிசை... கதறவிட்ட போலீஸ்!

‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் வேலூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சி மன்றங்களில் 11 வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். இவர்களை ஆதரித்து அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அக்டோபர் 2-ம் தேதி குடியாத்தம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்காகச் சென்றார். அப்போது, 20-க்கும் மேற்பட்ட கார்கள் புடைசூழ வந்த புஸ்ஸி ஆனந்த்தை, தேர்தல் விதிகளை மீறியதாகப் பறக்கும் படையினரும், போலீஸாரும் தடுத்து நிறுத்தினார்கள். வாகனங்களை இயக்கிவந்த ஓட்டுநர்கள் சிலரிடம் லைசென்ஸ்கூட இல்லை. இன்னும் சிலரோ, லைசென்ஸ் பெறுவதற்கான வயதையும் எட்டவில்லை. அனைவரையும் சுற்றிவளைத்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்டுக் கதறவிட்ட போலீஸார், பிறகு கடுமையாக எச்சரித்து அனுப்பிவைத்தார்கள். இதையடுத்து, வேட்பாளர்களிடம் பெயருக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனார் புஸ்ஸி ஆனந்த்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
உள்ளாட்சி உய்யலாலா!

பிடிபட்ட மதுபாட்டில்கள்... பிடிகொடுக்காத காவல்துறை

தென்காசி மாவட்டத்தில் முதற்கட்டமாக (அக்டோபர் 6) ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஆலங்குளம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், கடையம், வாசுதேவநல்லூர் ஆகிய யூனியன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அக்டோபர் 4-ம் தேதியுடன் பிரசாரம் ஓய்ந்தது. அந்தப் பகுதிகளில் பிரசாரத்தின்போதே மதுவிருந்து தடபுடலாக நடந்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தேர்தல் தினத்தில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வேட்பாளர்கள் சிலர் மது பாட்டில்களைப் பதுக்கிய விவரம் தென்காசி மாவட்ட காவல்துறைக்குச் சென்றது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், ஆயிரக்கணக்கான மது பாட்டில்கள் பிடிபட்டன. இதில் 21 பேரை காவல் துறையினர் கைதுசெய்தார்கள். போலீஸ் நடவடிக்கை எடுத்ததுதான் தாமதம்... ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக் கட்சி எனப் பாகுபாடு இல்லாமல் அத்தனை தரப்பிலிருந்தும் போனுக்கு மேல் போன் வந்திருக்கிறது. “சார்... ஆளுங்களை அரெஸ்ட் பண்ணதுகூட பரவாயில்லை... சரக்கை எப்படியாச்சும் கொடுத்துடுங்க... கமிட் ஆகிட்டோம். சரக்கு கொடுக்கலைன்னா ஓட்டுக் கிடைக்காது” என்று கெஞ்சாத குறையாகக் கேட்டிருக்கிறார்கள். அதெல்லாம் முடியவே முடியாது என்று சட்டம் தன் கடமையைச் செய்ததாம்!

பனை நடும் வேட்பாளர்!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் சிலர் வித்தியாசமாக ஏதேனும் செய்வது வழக்கம். அந்த வகையில், தென்காசி மாவட்டம், சேர்வைக்காரன்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நீலமேககண்ணன் என்பவர் வாக்குச் சேகரிக்கும்போது கடப்பாறை, மண்வெட்டி சகிதம் சென்று, வாக்காளர்களின் வீட்டருகே குழிதோண்டி பனைவிதைகளை நடவு செய்துவிட்டே வாக்குக் கேட்கிறார். ‘‘தினமும் வெட்டி வீழ்த்தப்படும் பனைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே பனைவிதைகளுடன் வாக்குச் சேகரிக்கிறேன்’’ என்று அதற்கு விளக்கமும் அளிக்கிறார்.

உள்ளாட்சி உய்யலாலா!

எல்லை தாண்டிய பாசம்!

நெல்லை மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட மானூர் யூனியன் பகுதிகளில், நெல்லை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட நகர தி.மு.க நிர்வாகிகளும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பணியாற்றுகிறார்கள். ‘எல்லை தாண்டிய பாசத்துக்கு’க் காரணம் கேட்டால், ‘‘வரவிருக்கும் நெல்லை மாநகராட்சி தேர்தலில் கட்சிப் பொறுப்பாளர்கள் பலரும் கவுன்சிலர் சீட்டுகளைக் குறிவைத்துள்ளனர். அவர்களில் சிலரை ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்துள்ள மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப், ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றியைத் தேடித்தந்தால் மட்டுமே மாநகராட்சி தேர்தலில் சீட் என்று சொல்லிவிட்டார்... அதனால்தான் இவ்வளவு வேகம்” என்று கண்சிமிட்டுகிறார்கள் உடன்பிறப்புகள்!