Published:Updated:

`ஒரு ரூபாய் செலவு செய்யாமல் ஜெயித்தோம்!' - உரக்கச் சொல்லும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்

உள்ளாட்சிப் பிரதிநிதிகள்
உள்ளாட்சிப் பிரதிநிதிகள்

``மக்கள் நம்பிக்கையைப் பெற்றோம். செலவு செய்யாமல் ஜெயித்தோம்" என உரக்கச் சொல்கிறார்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்...

சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் களம் கண்டவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. `தன்னாட்சி - உள்ளாட்சி- உங்களாட்சி' எனும் அமைப்பில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிப் பட்டறையில், திருச்சி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்குப் போட்டியிட்ட, சுமார் 30 வேட்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும், மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்துக் குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள், பணம் செலவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற மற்றும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள் தங்களின் தேர்தல் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

`உயிருக்கு உத்தரவாதமில்லை!'- திருச்சியில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும் பெண் ஊராட்சி மன்றத் தலைவி

வெற்றிபெற்ற தலைவர்களுக்கு, ஏற்கெனவே பஞ்சாயத்து தலைவர்களாக இருந்து மக்கள் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செய்து தங்கள் கிராமங்களை முன்மாதிரியாக மாற்றிய முன்னாள் பஞ்சாயத்து தலைவர்களான குத்தம்பாக்கம் இளங்கோ, அரச்சலூர் செல்வம் உள்ளிட்ட பலர் ஆலோசனை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், வெற்றிபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்களை ஒரு அமைப்பாக இணைத்து மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது என்றும், தோல்வியடைந்தவர்கள் தங்கள் கிராமங்களின் முன்னேற்றத்துக்கு எந்த வகையில் பங்கெடுத்துக் கொள்வது என்பது குறித்தும், மக்கள் பிரதிநிதிகளின் கனவுத் திட்டங்கள், தோல்வியுற்ற வேட்பாளர்களிடமிருந்து கோரிக்கைகள் மற்றும் கிராமங்கள் தன்னிறைவு அடையத் தேவையான அவர்களின் கருத்துகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. தொடர்ந்து, துணிப்பை மற்றும் ஊராட்சி தொடர்பான சட்டங்கள் குறித்த நூல்கள் வழங்கி பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

தபால் அட்டை
தபால் அட்டை
தபால் அட்டை
தபால் அட்டை

கூட்டத்தில் பேசிய குத்தம்பாக்கம் இளங்கோ,``உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து மக்கள் பணியாற்றுங்கள். வெற்றிபெற்றவர்கள் உங்கள் கிராமங்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு பணியாற்றுங்கள். மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்துகளைப் பார்வையிட்டு, அங்கு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற உதவிடத் தயாராக உள்ளோம்.” என்றார்.

கூட்டத்தில், பெண் பிரதிநிதிகள் சுயமாகவும் சுதந்திரமாகவும் பணியாற்ற அவர்களின் கணவர்கள் ஆதிக்கம் செலுத்துவதைப் புறக்கணித்திட வலியுறுத்தப்பட்டனர்.

நம்மிடம் பேசிய சிவகங்கை மாவட்டம் திருக்களாப்பட்டி பெண் பஞ்சாயத்துத் தலைவர் சத்தியகலா,``எங்கள் ஊராட்சிக்குத் தேவையான சாலை வசதிகள் மற்றும் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்திடவும், இயற்கை விவசாயம் மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்” என்றார்.

டெல்லி தேர்தல் முடிவுகள்... தமிழக அரசியல் கட்சிகளின் கருத்து என்ன?

``என்னை எதிர்த்து 8 பேர் போட்டியிட்டார்கள். அதில் மிக இளையவன் நான். எனது சமூக அக்கறைக்கும், மக்கள் பணியையும் பார்த்து மக்கள் பஞ்சாயத்துத் தலைவர் பதவி வழங்கியுள்ளார்கள். எனது கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை முதலில் ஏற்படுத்தித் தருவதும், வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதே முதன்மையானது. எங்கள் பகுதி வறட்சியான பகுதி என்பதால், நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மழைநீர் சேகரிப்பு மற்றும் சுகாதாரத் திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்” என்றார் கடலூர் மாவட்டம் அரங்கூர் பஞ்சாயத்துத் தலைவர் ஆ.ராஜா.

உள்ளாட்சி பிரதிநிதிகள்
உள்ளாட்சி பிரதிநிதிகள்

ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நந்தகுமார் பேசுகையில், ``கிராம உள்ளூராட்சி மன்றங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், ஒரு வெற்றிகரமான முன்மாதிரியான பஞ்சாயத்துகளை உருவாக்குவதற்குத் தொடர்ந்து முயற்சி எடுக்கிறோம். தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சிகள், விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தவும், ஊராட்சி மன்றங்கள் தன்னிறைவு பெற்ற அமைப்புகளாகவும், தற்சார்பு பொருளாதாரம் மற்றும் அதிகாரம் படைத்த அமைப்பாக மாற்றவும் முயற்சிகளை முன்னெடுக்கிறோம்.

மேலும், ஊராட்சிகளில் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் குறித்து தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அளித்துள்ளது. அதனால், ஊராட்சிகளில் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ஊராட்சிக்கு வழங்கிட வேண்டும் என்பதை உணர்த்து வகையில், தமிழக முதல்வருக்குத் தபால் அட்டை அனுப்பும் பிரசாரத்தை இந்தக் கூட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் முன்னெடுக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.

அதையடுத்து, கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்கள் ஊர்களில் தங்கள் ஊராட்சிகளில் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்பதை தமிழக அரசுக்கு உணர்த்தும் வகையில் #Tasmacfreevillages , #Gramasabhadecides எனும் ஹேஸ்டேக்குகளை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்தி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு