Election bannerElection banner
Published:Updated:

``முதலைகளோடு மோதும் தங்க மீன் நான்!” - மதுரவாயல் ம.நீ.ம வேட்பாளர் பத்மப்ரியா

கமலுடன் பத்மப்ரியா
கமலுடன் பத்மப்ரியா

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் பத்மப்ரியா. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிந்துவரும் நிலையில் பத்மப்ரியாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்....

டப்ஸ்மாஷ், டிக்டாக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமடைந்து திரைத்துறை வாய்ப்புகளைப் பற்றியவர்கள் இங்கு ஏராளம். சமூக ஊடக பிரபலங்கள் திரைத்துறையில் மட்டுமல்ல அரசியலிலும் ஜொலிக்கலாம் என்பதை நிரூபித்திருக்கிறார் பத்மப்ரியா. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020-க்கு எதிராக சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டதன் மூலம் பிரபலமடைந்தவர்தான் பத்மப்ரியா.

இவருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளராகப் பொறுப்பு வழங்கினார் அக்கட்சியின் தலைவர் கமல். அதுவே பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், தற்போது மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார் பத்மப்ரியா. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிந்துவரும் நிலையில் பத்மப்ரியாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்....

பத்மப்ரியா
பத்மப்ரியா

``சோஷியல் மீடியா இன்ஃப்ளூயென்சர் டு மக்கள் நீதி மய்யத்தின் மதுரவாயல் வேட்பாளர். இது எப்படி நடந்தது?"

``எனக்கு எந்த விதமான அரசியல் பின்புலமும் இல்ல. சொல்லப்போனா அரசியல் பற்றி எதுவும் விமர்சிக்க விரும்பாத மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து வந்த பல பேர்ல நானும் ஒருத்தி. எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதை மத்தவங்களுக்கும் தெரியப்படுத்தணும்னு நினைக்கக்கூடிய ஆள் நான். அப்படி சயின்ஸ் பத்தியும் பியூட்டி டிப்ஸ் பத்தியும் சோஷியல் மீடியாக்கள்ல வீடியோக்கள் ஷேர் பண்ணிட்டு இருந்தேன். நான் டெலிவரி பண்ற விதம் மக்களுக்கு பிடிச்சிருந்ததால அந்த வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. இந்தச் சூழல்ல, இ.ஐ.ஏ (சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு) பத்தின வீடியோ நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில ஒரே நைட்ல வைரல் ஆகிருச்சு. உண்மையான சமூக அக்கறை இருந்தா இதெல்லாம் சாத்தியம்னு அப்புறம்தான் புரிஞ்சது. அந்த வீடியோவுக்கு பாசிட்டிவ்வாகவும் நெகட்டிவ்வாகவும் நிறைய கமென்ட்டுகள் வந்தன. நிறைய பொலிட்டிக்கல் பார்ட்டீஸ் நாங்க உங்களுக்குப் பக்கபலமா இருக்கோம். எங்க கட்சிக்கு வாங்கன்னு கூப்பிட்டாங்க.

காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி அப்புறம் நிறைய சின்னச் சின்ன கட்சிகளிலிருந்தெல்லாம் எனக்கு அழைப்பு வந்துச்சு. அந்த நேரத்துல அரசியல பத்தி யோசிக்கவே இல்லை. அதுமட்டுமல்லாம இ.ஐ.ஏ பத்திப்பேசி அது வைரலாகியிருந்த நேரத்துல எனக்கு அரசியல் சாயம் பூசப்படுறதையும் நான் விரும்பலை. அதனால அவங்க யாருக்கும் நான் பிடிகொடுக்கலை. கொஞ்சநாள் கழிச்சு மக்கள் நீதி மய்யத்திலிருந்து கூப்பிட்டு, `கமல் சார் உங்களைப் பார்க்கணும்னு சொல்றார். அரசியல் ரீதியான மீட்டிங் கிடையாது. ஜஸ்ட் உங்களைச் சந்திக்கணும்னு நினைக்கிறார்'னு சொன்னாங்க. நான் கமல் சாரோட தீவிர ரசிகை. அதுமட்டுமல்லாம அவருடைய மல்டி டேலன்ட் எனக்குப் பெரிய ஆச்சர்யம். அதனால உடனே ஓகே சொல்லிட்டேன்.

பத்மப்ரியா
பத்மப்ரியா
அ.தி.மு.க., தி.மு.க-வை அசைத்துப் பார்க்குமா கமல் கூட்டணி?

அவரை சந்திச்சப்போ பொலிட்டிக்கலா அவர் எதுவுமே என்கிட்ட பேசலை ``ஒரு யங்ஸ்டரா இ.ஐ.ஏ-வுக்கு நீங்க வாய்ஸ் கொடுத்தது ரொம்ப சந்தோஷம். நீங்க தொடர்ந்து இதுபோன்ற பிரச்னை களுக்கு குரல் கொடுத்துட்டே இருங்க. நாங்க உங்களை சப்போர்ட் பண்றோம்"னு சொல்லி வாழ்த்தி அனுப்பிட்டார். அந்த அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அடுத்து சில நாள்கள் கழிச்சு மீண்டும் கமல் சாரை சந்திக்க கூப்பிட்டாங்க. அப்போ நடந்த சந்திப்பின்போது, `மக்கள் நீதி மய்யத்துல சுற்றுச் சூழலுக்கு எனத் தனி அணி உருவாக்கப் போறோம். நீங்க சுற்றுச்சூழல் பத்தி நிறைய பேசறதால நீங்க அதுல இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறோம்’னு கமல் சார் சொன்னார். ஆனா, அப்போவும் நீங்க கட்டாயமா வந்தே ஆகணும்னு அவர் கட்டாயப்படுத்தலை. உங்களுக்கு விருப்பமிருந்தா வாங்கன்னு சொன்னார்.

நமக்குப் பிடிச்ச துறையில மக்கள் பணி செய்யற வாய்ப்பை யார்தான் வேணாம்னு சொல்லுவோம். சந்தோஷமா சரின்னு சொன்னேன். ஆனா, எனக்கு மக்கள் நீதி மய்யத்தின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் பொறுப்பு கொடுத்ததெல்லாம் நான் எதிர்பார்க்காத ஒண்ணு. நான் அடிப்படையில ஒரு பயாலஜி டீச்சர். அந்தப் பணிகளுக்கு மத்தியிலயும் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு பணிகளை முன்னெடுத்து செஞ்சேன். அதையெல்லாம் கமல் சார் கவனிச்சிருப்பார்போல. ஒருநாள் கூப்பிட்டு, நான் சட்டமன்றத்துக்குள்ள போகும்போது என் பக்கத்தில் நீயும் இருக்கணும்’னு சொன்னார். அப்போதான் நானும் ஓர் அரசியல்வாதிங்கிற விதையே என் மனசுக்குள்ள முதன்முதல்ல விழுந்துச்சு. முதல்ல மறுத்தேன். `பிரசாரம் விழிப்புணர்வு விஷயங்களை மட்டும் நான் பார்த்துக்குறேன். வேட்பாளர் அளவுக்கு நான் ரெடியான்னு எனக்குத் தெரியலை’ன்னு கமல் சார்கிட்ட சொன்னேன். இளைஞர்கள் இப்படி யோசிச்சு யோசிச்சு பின்னால போறதாலதான் நம்மளால இங்க எதையும் மாத்தவே முடியலைன்னு சொன்னார். அடுத்த நிமிஷமே ஓகேன்னு சொல்லிட்டேன். இப்படித்தான் எனக்கு வாய்ப்பு வந்துச்சு.”

``இந்த வாய்ப்பை எப்படிப் பார்க்குறீங்க?"

``இவ்வளவு சின்ன வயசுல எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஒரு பொண்ணுக்கு தேர்தல்ல நிக்க வாய்ப்பு கொடுக்கிறது மக்கள் நீதி மய்யத்துல மட்டும்தான் சாத்தியம். மாற்றங்கள் வெறும் சொல்லில் மட்டும் இருக்கக் கூடாது. செயலில் இருக்க வேண்டும் என்பதை மக்கள் நீதி மய்யம் நிரூபிச்சிருக்கு. பெண்களுக்கான அங்கீகாரமா நான் இதைப் பாக்குறேன்."

பத்மப்ரியா
பத்மப்ரியா

``திடீரென இவ்வளவு பெரிய வாய்ப்பு. உங்க வீட்டில் எல்லாரும் என்ன சொல்றாங்க?"

``வீட்டில் பாசிட்டிவ்வாகவும் எதுவும் சொல்லலை நெகட்டிவ்வாகவும் எதுவும் சொல்லலை. நான் என்ன பண்றேன்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க. காரணம், நான் முதல் வீடியோ வெளியிடும்போதே வேணாம்னு வீட்டிலிருந்து எதிர்ப்பு வந்துச்சு. `நீ ஒரு பொண்ணு... இதெல்லாம் தேவையில்லாத வேலை. உன்னை மார்க் பண்ணிருவாங்க, நிறைய பிரச்னை வரும்'னு பயமுறுத்தினாங்க. ஆனா, நான் அதுக்கெல்லாம் அசரலை. என்ன பண்ணிருவாங்கன்னு பார்க்கலாம்னு வீட்டை மீறித்தான் வீடியோ வெளியிட்டேன். அதன் மூலம் பல பாராட்டுகள் விமர்சனங்கள் பிரச்னைகளைக் கடந்து இன்னைக்கு எம்.எல்.ஏ வேட்பாளராகியிருக்கேன். அதனால, அவங்க எதுவும் சொல்லலை. அமைதியா வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க."

``பொதுவா ஒரு தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கணும்னா நிறைய செலவு பண்ணணூம்ங்கிறதுதான் கடந்த கால வரலாறு. அதை எப்படிச் சமாளிக்கப் போறீங்க?"

கமலுடன் பத்மப்ரியா
கமலுடன் பத்மப்ரியா

``காசு கொடுத்து கொடுத்து மக்களை ஏமாத்துறதாலதான் நாம இன்னமும் இப்படி இருக்கோம். கடைசி நிமிஷத்தில் காசைத் தூக்கி வீசினா மக்கள் நமக்கு ஓட்டுப்போட்ருவாங்கன்ற மனநிலைதான் பல கட்சிகள்கிட்ட இருக்கு. தேர்தலுக்கு வாக்கு கேட்டுச் செல்வதைத் தவிர, மற்ற நேரங்கள்ல மக்களை சந்திக்கவே தேவையில்லை, வேட்பாளர்களுக்கும் தொகுதி பத்தின எந்த விஷயமும் அவசியமில்லை, ஓட்டுக்கு ஆயிரமோ ரெண்டாயிரமோ விட்டெறிஞ்சா நாம ஜெயிச்சிரலாம்ங்கிற மனநிலையிலதான் பலரும் இருக்காங்க. அந்த நிலைமை மாறணும்னு இப்போ எல்லாரும் நினைக்கத் தொடங்கிட்டாங்க. மக்கள் குரல் சட்டமன்றத்துல ஒலிக்கணும்னு மக்கள் ஆசைப்படுறாங்க. அதை நாங்க செய்வோம்ங்கிற நம்பிக்கையை மக்கள் மனசுல விதைச்சுட்டா போதும் பணமெல்லாம் தேவையில்லைன்னு அதை நான் உறுதியாக நம்புறேன்."

``நீங்க இந்த இடத்துக்கு வர்றதுக்கு காரணம் உங்களுடைய சமூக விழிப்புணர்வு வீடியோக்கள்தான். ஆனால், கொரோனா நேரத்தில் வெங்கடேஷ் ஆறுமுகம் என்பவர் காமெடியா எழுதிய ஒரு பாடலை… சித்தர் பாடிய பாட்டுனு நீங்க உணர்வுபூர்வமா வீடியோ வெளியிட்டீங்க. அதைவெச்சு இவர் வேட்பாளாரானு பலர் கலாய்க்கிறார்களே..?"

``நான் பத்து வீடியோ பண்ணிருக்கேன்னா அதுல ஒன்பது வீடியோ நல்ல வீடியோ யாரும் ஏன் அதைப் பத்தி பேச மாட்டேங்குறாங்க. அது தெரியாம நடந்துருச்சு. அதுக்கு சாரி சொல்லி வீடியோவும் வெளியிட்டுட்டேன். அதற்குப் பிறகும் அதைப் பத்தியே பேசுறாங்கன்னா என்ன காரணம்? அவங்களோட நோக்கம் என்ன என்னை கார்னர் பண்ணணும்ங்கிறதுதானே.... அதனால அதையெல்லாம் நான் கண்டுக்கலை. இன்னைக்கு அந்த வீடியோவைப் பத்தி பேசறவங்களெல்லாம் நான் இ.ஐ.ஏ பத்தி பேசும்போது எங்க போனாங்க? நம்மை முடக்கணும்னு நினைக்கிறவங்களோட விமர்சனங்களையெல்லாம் கண்டுக்கவே கூடாது. அவ்ளோதான்”

``என் வாழ்க்கையையே மாற்றிவிட்டார்கள்!" - `சென்னை தமிழச்சி' பத்மப்ரியா #EIA2020

``தி.மு.க, அ.தி.மு.கனு பெரும் கட்சிகளோட மோதுறீங்க... உங்களோட தேர்தல் வியூகம் என்ன?"

``நான் இதே தொகுதியைச் சேர்ந்தவதான். இங்கிருக்கக்கூடிய சின்னச் சின்ன பிரச்னை பத்தியும் எனக்குத் தெரியும். அதைச் சரி செய்வதற்கான நிதி இங்கு இருக்கு. ஆனா, இதுக்கு முன்பு இருந்தவங்க அதைச் சுருட்டி தங்களோட பாக்கெட்டில் போட்டுக்கிட்டதாலதான் எதுவும் நடக்காம இருக்கு. அதை மக்கள்கிட்ட எடுத்துச் சொன்னாலே போதும். அதைவிட பெரிய வியூகம் என்ன இருக்கப்போகுது? தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் பெரிய முதலைகள்னா நான் தங்க மீன்."

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு