Published:Updated:

`இப்படியொரு படுதோல்வியை எதிர்பார்க்கவில்லை!' -நாமக்கல் காந்திச்செல்வன் மீது பாயும் உடன்பிறப்புகள்

காந்திசெல்வன்
காந்திசெல்வன்

உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் தி.மு.க அதிக ஒன்றியங்களில் தோல்வி அடைந்துள்ளது.

`ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குத் தேர்வான 17 பேரில் அ.தி.மு.க கூட்டணி சார்பாக 13 பேரும், தி.மு.க கூட்டணி சார்பாக 4 பேரும் வெற்றி பெற்றனர். அதேபோல ஒன்றிய கவுன்சிலர்கள் 172 பேரில் அ.தி.மு.க கூட்டணி சார்பாக 101 பேரும், தி.மு.க கூட்டணி சார்பாக 67 பேரும் வெற்றி பெற்றார்கள்.

அதிக ஒன்றியங்களில் தி.மு.க தோல்வி அடைந்துள்ளது. இதற்கு நாமக்கல் கிழக்கு மா.செ காந்திசெல்வன்தான் காரணம். கட்சியில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு எல்லாம் அவர் சீட் வழங்கினார்'' எனக் கொதிக்கின்றனர் நாமக்கல் உடன்பிறப்புகள்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``நாமக்கல் மா.செ பதவியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் பதவிக்கு வந்தார் காந்திசெல்வன். ஆனால், அவர் கட்சித் தலைமைக்கு விசுவாசமாக நடந்துகொள்ளவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் இவருடைய கிழக்கு மாவட்டத்தில் நாமக்கல், எருமப்பட்டி, மோகனூர், கொல்லிமலை, சேந்தமங்கலம், புதுசத்திரம், வெண்ணந்தூர், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை என 9 ஒன்றியங்கள் வருகின்றன. இதில் ராசிபுரம், சேந்தமங்கலத்தில் மட்டுமே தி.மு.க அதிக கவுன்சிலர்களைப் பெற்றுள்ளது. மற்ற ஒன்றியங்களில் தி.மு.க தோல்வி அடைந்துள்ளது.

ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 3 நாள்களை ஒதுக்கி ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் சென்று அங்குள்ள கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை செய்திருந்தாலே, அனைத்து ஊராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றி இருக்கும். ஆனால், காந்திச்செல்வன் கட்சிப் பணிகளை முழுமையாகச் செய்யவில்லை. பெயரளவுக்கு வேட்பாளர் அறிமுகக் கூட்டம் என ஒரு கூட்டத்தைப் போட்டு கணக்குக் காட்டினாரே தவிர தி.மு.க வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செயல்படவில்லை.

தி.மு.க-வுக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அ.தி.மு.க தன்னுடைய அதிகாரப் பலத்தை பயன்படுத்திப் பல லட்சம் கொடுத்து வெற்றி பெற்றுவிட்டது.
காந்திசெல்வன்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் உள்குத்து வேலை பார்த்த வெண்ணந்தூர் முன்னாள் தி.மு.க ஒன்றியச் செயலாளர் சேகர் பெரியசாமியை கட்சித் தலைமை விசாரணை நடத்தி ஒ.செ பதவியிலிருந்து நீக்கியது. ஆனால், அவருக்கு ஒன்றிய கவுன்சிலர் சீட் கொடுக்கப்பட்டது. உண்மையில் அவருக்குக் கட்சிக்காரர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் செல்வாக்கு இல்லை. இதனால் அவர் தோற்றுப் போனார்.

அதேபோல், புதுச்சத்திரத்தில் மிகுந்த செல்வாக்குடைய செந்தில்குமார் மாவட்ட கவுன்சிலர் சீட் கேட்டார். ஆனால், அவருக்கு சீட் கொடுக்காமல் கவுதம் என்பவருக்கு சீட் கொடுத்தார். இதையறிந்த அமைச்சர் தங்கமணி, செந்தில்குமாரை அ.தி.மு.க பக்கம் இழுத்து அவருக்கு அ.தி.மு.க சார்பாக சீட் வழங்கினார். இதனால், செந்தில்குமார் எளிதாக வெற்றிபெற்று மாவட்ட கவுன்சிலர் ஆகிவிட்டார்.

எண்ணிக்கை
எண்ணிக்கை

இதுதவிர கொல்லிமலை ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியம் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவர் குறித்து தலைமைக்குத் தவறான தகவலைக் கொடுத்து நீக்கிவிட்டு, செந்தில்முருகனை ஒன்றியச் செயலாளராக நியமித்தார். கொல்லிமலையில் 6 ஒன்றிய கவுன்சிலர்களில் ஓர் இடத்தில்கூட தி.மு.க வெற்றி பெறவில்லை. இப்படி மோகனூர், நாமகிரிப்பேட்டை எனப் பல ஒன்றியங்களில் கட்சிக்காக உண்மையாக உழைக்கக் கூடிய நிர்வாகிகளை நீக்கிவிட்டு, இவருக்கு நெருக்கமாக இருப்பவர்களையே நிர்வாகிகளாக நியமித்துள்ளார். இதனால் நாமக்கல்லில் தி.மு.க தோல்வியடைந்துள்ளது. இதுதொடர்பாக, தலைமை விசாரணை நடத்தினால் மாவட்டச் செயலாளர் மீது பலரும் புகார் கொடுப்பார்கள்" என்கின்றனர் கொதிப்புடன்.

உடன்பிறப்புகளின் குற்றச்சாட்டு குறித்து மாவட்டச் செயலாளர் காந்திச்செல்வனிடம் விளக்கம் கேட்டோம். ``மாவட்டத்தில் உள்ள ஒன்றியச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசியே அனைத்து முடிவுகளையும் எடுத்தோம். ஒவ்வொரு குக்கிராமத்துக்கும் சென்று அங்குள்ள கிளைச் செயலாளர்களைச் சந்தித்துப் பேசினோம். தி.மு.க-வுக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அ.தி.மு.க தன்னுடைய அதிகாரப் பலத்தை பயன்படுத்திப் பல லட்சம் கொடுத்து வெற்றி பெற்றுவிட்டது'' என்றார் இயல்பாக.

அடுத்த கட்டுரைக்கு