Published:Updated:

நீலகிரி: 3 மணி நேரம் காத்திருந்த நமீதா; சாலையை மறித்து பிரசாரம்! - கொந்தளித்த மக்கள்

ஊட்டி தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து நடிகை நமீதா பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் 100 பேர்கூட இல்லையென, போக்குவரத்தை மறித்து நடுரோட்டில் பரப்புரை மேற்கொண்டது ஊட்டி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸும், பாஜகவும் நேருக்கு நேர் மோதும் ஊட்டி தொகுதியில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில், ஊட்டி தொகுதியின் பாஜக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான நமீதா நேற்று பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

நமீதா பிரசாரம்
நமீதா பிரசாரம்

ஊட்டி காபி ஹவுஸ் பகுதியில் சரியாக பகல் 1 மணிக்கு பரப்புரை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுவந்தன. ஊட்டியிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த நமீதா பிரசாரக் கூட்டத்துக்குக் கிளம்பத் தயாரானார். ``கூட்டத்தில் 50 பேர்கூட இல்லை. சற்று தாமதமாகப் போகலாம்" என உள்ளூர் நிர்வாகிகள் தெரிவிக்க, கூட்டம் சேரட்டும் என ஹோட்டலிலேயே காத்திருந்தார்.

இடைப்பட்ட நேரத்தில் அதிமுக-வின் ஊட்டி நிர்வாகிகளின் உதவியுடன் அதிமுக தொண்டர்கள் சிலரை அழைத்துவந்தனர். அவர்கள் வந்து நின்ற சிறிது நேரத்திலேயே மழை தூறலிடத் தொடங்கியது. இதனால் இருந்த கூட்டமும் நகரத் தொடங்கியது. மூன்று மணி நேரமாக ஹோட்டலில் காத்திருந்த நமீதா, கடுப்பாகி மழையோடு மழையாகக் கிளம்பி வந்து காபி ஹவுஸ் பகுதியில் நின்று பிரசாரம் செய்துவிட்டு வாகனத்தில் ஏ.டி.சி பகுதிக்குச் சென்றார்.

நமீதா பிரசாரம்
நமீதா பிரசாரம்

ஏ.டி.சி பகுதியில் யாருமே இல்லாததால், வேட்பாளரிடம் கடுகடுத்தார். நிலைமையைச் சமாளிக்க அதிமுக நிர்வாகிகள் உதவியுடன் போக்குவரத்தை மறித்து நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி பரப்புரையைத் தொடங்கினார். அரசுப் பேருந்துகள் முதல் பைக் வரை போக்குவரத்து தடைப்பட்டு மெல்ல ஊர்ந்து செல்லத் தொடங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எழுதிக் கொடுத்ததை நமீதா பேச, போக்குவரத்தில் ஸ்தம்பித்த வாகனங்களின் ஹாரன் சவுண்டு காதைக் கிழிக்க கடுப்பாகி பரப்புரையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டுக் கிளம்பினார்.

நமீதா பிரசாரம்
நமீதா பிரசாரம்

அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``ஆளுங்கட்சி நிர்வாகிகள் உதவியோட பிரசார வண்டியை நடு ரோட்டுல நிறுத்தி அட்ராசிட்டி பிரசாரம் பண்றாங்க. இதுக்கு போலீஸாரும் உடந்தை. அப்பாவி மக்கள்தான் டிராஃபிக்ல மாட்டிக்கிட்டுக் கெடக்கோம்’’ எனப் புலம்பினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு