Published:Updated:

`குடிக்க கிளாஸ் இல்ல, வாக்குப் பெட்டியைத் திறக்க முடியல..!' -தஞ்சையில் கொதித்த தேர்தல் அலுவலர்கள்

தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பழனி `வாக்கு எண்ணும் பணி நாளை காலை வரையில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.

தஞ்சை வாக்கு எண்ணும் மையம்
தஞ்சை வாக்கு எண்ணும் மையம்

தஞ்சாவூரில் வாக்கு சீட்டுகளைப் பிரிக்கும் அறையில் தண்ணீர் கேன் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. ஆனால், குடிப்பதற்கு கிளாஸ் வைக்கவில்லை. இதனால் வாக்கு சீட்டு வைக்கப்படும் வாளியின் மூடியில் தண்ணீரைப் பிடித்து தேர்தல் அலுவலர்கள் தாகத்தைத் தீர்த்து கொண்டதுடன், `முறையான வசதிகளைச் செய்யவில்லையே' எனப் புலம்பினர்.

தேர்தல் வாக்கு எண்ணும் பணி
தேர்தல் வாக்கு எண்ணும் பணி

ஊரக உள்ளாட்சித் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை 27 மாவட்டங்களில் நடைபெற்றுவருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்துக்கான வாக்கு எண்ணிக்கை தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட 14 ஒன்றியங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தஞ்சாவூர் ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை மேரீஸ்கார்னர் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் நடைபெற்று வருகிறது. வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் அறைக்குக் கொண்டு வருவதற்காக கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்களாகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த சீலிடப்பட்ட அறையை அனைத்துக் கட்சி முகவர்கள் வந்தபிறகு பூட்டை உடைத்து அறையைத் திறந்தனர். அதற்கு முன்பாக, சீலிடப்பட்ட பூட்டைத் தொட்டுத் தொட்டு பூட்டு திறக்கப்பட்டிருக்கிறதா என தி.மு.க நிர்வாகிகள் பார்த்தனர். பின்னர், கல்லூரி மாணவர்கள் வாக்குப் பெட்டிகளை வாக்குகள் பிரிக்கப்படும் அறைக்குக் கொண்டு வந்தனர்.

வாக்கு எண்ணிக்கை மையம்
வாக்கு எண்ணிக்கை மையம்

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சிமன்றத் தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய ஒவ்வொரு வாக்குப் பெட்டிக்கும் வாக்கு சீட்டின் வண்ணத்திலேயே பிளாஸ்டிக் வாளிகள் வைக்கப்பட்டிருந்தன. இதற்குமுன் வாக்குகளைப் பிரிப்பதற்காகத் தேர்தல் அலுவலர்கள் காலை 7 மணிக்கே உணவை முடித்துக்கொண்டு தயார் நிலையில் இருந்தனர்.

வாக்குகள் பிரிக்கப்படும் அறையில் குடிப்பதற்கு கேனில் தண்ணீர் மட்டும் இருந்தது. ஆனால், கிளாஸ் வைக்கவில்லை. இதனால் தேர்தல் அலுவலர்கள் தண்ணீர் இருந்தும் குடிக்க முடியாமல் தாகத்தில் தவித்தனர். இதனால் வாக்கு சீட்டு வைக்கப்படும் வாளியின் மூடியில் தண்ணீரைப் பிடித்து தேர்தல் அலுவலர்கள் தாகத்தைத் தீர்த்து கொண்டனர்.

தஞ்சை வாக்கு எண்ணும் மையம்
தஞ்சை வாக்கு எண்ணும் மையம்

பின்னர் கொண்டுவரப்பட்ட வாக்குப்பெட்டிகளைத் தேர்தல் அலுவலர்கள் திறந்தனர். பல வாக்குப்பெட்டிகளை உடனே திறக்க முடியவில்லை. மேசை எண் 45 மணக்கரம்பை ஊராட்சிக்கான வாக்குப்பெட்டியை நீண்ட நேரம் திறக்க முடியாமல் தேர்தல் அலுவலர்கள் தவித்தனர். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரான பழனி வந்தார், அவரும் திறக்க முயன்றார், முடியவில்லை. அதன்பிறகு ஒருவர் வந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பெட்டியைத் திறந்து கொடுத்தார். அதன்பிறகு வாக்கு சீட்டுகளைப் பிரித்து அதற்குரிய கலர் கொண்ட வாளியில் வைக்கப்பட்டது.

வேட்பாளர்களின் முகவர்கள், `இந்த வாளியில்தான் நம்முடைய வெற்றி தோல்வி அடங்கியிருக்கிறது' என்பதால் குவிந்திருந்தனர். வாக்கு சீட்டுகளைப் பிரிக்கும் பணியில் பெரும்பாலும் பெண்களே நியமிக்கபட்டிருப்பதால் அவர்கள் வாக்குப் பெட்டிகளைத் திறப்பதற்கே சிரமப்பட்டனர். இதனால் 8 மணிக்குத் தொடங்க வேண்டிய வாக்கு எண்ணிக்கை ஒரு நேரம் தாமதமாகத் தொடங்கியது.

`குடிக்க கிளாஸ் இல்ல, வாக்குப் பெட்டியைத் திறக்க முடியல..!' -தஞ்சையில் கொதித்த தேர்தல் அலுவலர்கள்

வேட்பாளர்கள் வேன் மற்றும் கார்களின் மூலம் தங்கள் ஆதரவாளர்களை அழைத்து வந்துள்ளனர். இதனால் வாக்கு எண்ணும் பள்ளிக்கு முன்பாகப் பெரிய அளவில் கூட்டம் திரண்டது. பாதுபாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பழனி `வாக்கு எண்ணும் பணி நாளை காலை வரையில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.