Published:Updated:

ஓர் ஊராட்சி ஒன்றியம்... இரண்டு மாவட்டங்கள்... விநோத சிக்கலில் 12 கிராம மக்கள்!

‘கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட பிறகுதான் இந்த 12 ஊராட்சிகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும்’

பிரீமியம் ஸ்டோரி

‘‘நிர்வாகரீதியாக தூத்துக்குடி மாவட்டத்திலும், உள்ளாட்சி அமைப்புரீதியாக தென்காசி மாவட்டத்திலும் எங்கள் கிராமங்கள் இருப்பதால், அரசின் உதவிகள் கிடைக்காமல் அல்லாடுகிறோம்’’ என்று 12 ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் வேதனையுடன் சொல்கிறார்கள். ‘இதென்ன விநோத பிரச்னை?’ என்று விசாரணையில் இறங்கினோம்.

‘ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் (தற்போது தென்காசி மாவட்டம்), சங்கரன்கோவில் வட்டத்தில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள முக்கூட்டுமலை, நக்கலமுத்தன் பட்டி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, புளியங்குளம், அப்பனேரி, அய்யனேரி, சித்திரம்பட்டி, பிள்ளையார்நத்தம், இளையரசனேந்தல், வெங்கடாசலபுரம், ஜமீன்தேவர்குளம் ஆகிய 12 ஊராட்சிகளையும் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும்’ என்று கடந்த 2008-ம் ஆண்டு மேற்கண்ட 12 ஊராட்சிகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதையடுத்து, ‘இந்த 12 ஊராட்சிகளும் தூத்துக்குடி மாவட்டத்துக்குள் அடங்கும்’ என்று நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து முடிவெடுத்தனர். இது சட்டசபையில் அறிவிக்கப்பட்டு, 15.04.2008-ல் இளையரச னேந்தலைத் தலைமையகமாகக் கொண்டு 12 ஊராட்சிகளை உள்ளடக்கி குறுவட்டமாக அறிவித்து, கோவில்பட்டி வட்டத்துடன் இணைக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.

ஆனால், ‘‘உள்ளாட்சி அமைப்புரீதியாக தற்போதுவரை தென்காசி மாவட்டத்திலுள்ள குருவிகுளம் யூனியனில்தான் 12 ஊராட்சிகளும் உள்ளன. இதனால் எந்தத் திட்டமும் எங்களுக்குக் கிடைப்பதில்லை’’ என்று குமுறுகிறார்கள் இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள்.

ஓர் ஊராட்சி ஒன்றியம்... இரண்டு மாவட்டங்கள்... விநோத சிக்கலில் 12 கிராம மக்கள்!

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த ஜமீன்தேவர்குளத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் நாராயணசாமியிடம் பேசினோம். ‘‘இந்த 12 ஊராட்சிகளில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். கல்வி, வேலைவாய்ப்பு, விளைபொருள்களைச் சந்தைப்படுத்துதல், மருத்துவம், போக்குவரத்து என எல்லாவற்றுக்கும் கோவில்பட்டியையே சார்ந்திருக்கிறோம். இந்த 12 ஊராட்சிகளிலிருந்து கோவில்பட்டி அதிகபட்சம் 15 கி.மீ தூரம்தான். ஆனால், குருவிகுளத்துக்கு 41 கி.மீ தூரம் செல்ல வேண்டும்.

அதனால், 12 ஊராட்சிகளையும் கோவில்பட்டி வட்டத்துடன் இணைக்கக் கோரி, கடந்த 2007-ல் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தேன். ‘இதுகுறித்து விரைவாக நடவடிக்கை எடுங்கள்’ என நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகே, 2008-ல் 12 ஊராட்சிகளும் கோவில்பட்டி தாலுகாவுடன் இணைக்கப்பட்டன. இப்படி வருவாய்த்துறையில் மட்டும்தான் மாறியதே தவிர, மற்ற எந்தத் துறையிலும் மாற்றப்படவில்லை. 2011-ல் மீண்டும் மதுரைக் கிளையில் ரிட் மனு தாக்கல் செய்த பிறகே கல்வி, போக்குவரத்து, நீதிமன்றம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் மாற்றப்பட்டன. ஆனால், உள்ளாட்சி அமைப்பு மட்டும் மாற்றப்படவில்லை. கடந்த 2009-ல் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அரசுக்கு அளித்த ஒருமித்த கருத்துரு அறிக்கையை, 2014-ல் மீண்டும் ரிட் மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் நினைவுபடுத்தினோம். இதையடுத்து, 12 கிராமங்களை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் இணைக்கப்படவில்லை.

கடந்த முறை நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்புகூட, ‘கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட பிறகுதான் இந்த 12 ஊராட்சிகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும்’ என்று வழக்கு தொடர்ந்தேன். ‘12 ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தி முடித்துவிட்டோம்’ என கலெக்டரும், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையரும் அறிக்கை அனுப்பியதை அடுத்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், உண்மையில் அந்த 12 ஊராட்சிகளில் தேர்தல் நடத்தப்படவில்லை. அவர்கள் சொன்னபடி தேர்தல் நடத்தியிருந்தால், தற்போது ஏன் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்?’’ என்று கேள்வியெழுப்பினார்.

இந்த விவகாரம் தொடர்பாக பல போராட்டங்களை நடத்தியிருக்கும் பொதுமக்களும் விவசாயிகளும் நம்மிடம், ‘‘எங்களின் கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படாததால், வரும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்க 12 கிராம மக்களும் முடிவு செய்திருக்கிறோம்’’ என்கிறார்கள்.

ஜெயபிரகாஷ்
ஜெயபிரகாஷ்
செந்தில்ராஜ்
செந்தில்ராஜ்

மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜிடம் பேசினோம். ‘‘இந்த 12 வருவாய் கிராமங்களை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என்று அரசுக்கு ஏற்கெனவே பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டு விட்டது. அதை அரசும் ஏற்றுக்கொண்டது. உள்ளாட்சி அமைப்புரீதியாக அந்த கிராமங்கள் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டு இருப்பதால், உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த பிறகு கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அவரிடம், ‘‘உள்ளாட்சித் தேர்தலை அந்தந்த ஊராட்சிகளுக்கான வருவாய் மாவட்டத்துக்குள்தான் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கும் நிலையில், தென்காசி மாவட்டம், குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட 12 கிராமங்களை தூத்துக்குடியுடன் இணைக்காமலேயே, அவற்றுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தியதாக நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறதே?’’ என்று கேட்டோம். அதற்கு, ‘‘தூத்துக்குடி மாவட்டத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளுக்குத்தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது என்று அறிக்கை அளிக்கப்பட்டது’’ என்று சமாளித்தார். ‘‘ஆனால், அரசால் அளிக்கப்பட்ட அறிக்கைதானே நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படும்?’’ என்று திரும்பக் கேட்டதற்கு அவரிடம் பதில் இல்லை.

நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், நடத்தாத தேர்தலை நடத்தியதாகச் சொல்வதுதான் பொறுப்பான ஆட்சியாளர்களுக்கு அழகா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு