Published:Updated:

`அப்பா, அம்மாகிட்ட காசு கொடுத்துட்டுப் போறாங்க!' -ஓட்டுக்கு நோட்டால் கலங்கும் புதுக்கோட்டை இளைஞர்கள்

பணம் வாங்கிக்கொண்டு யாரும் ஓட்டுபோடக் கூடாது என்று முதலில் எங்களிடமிருந்து மாற்றத்தைத் தொடங்கியுள்ளோம்.

விழிப்புணர்வு பேனர் ஒட்டும் இளைஞர்கள்
விழிப்புணர்வு பேனர் ஒட்டும் இளைஞர்கள்

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களைப் போல, தற்போது உள்ளாட்சித் தேர்தல்களிலும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து, வாக்குகளை விலைக்கு வாங்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது. தற்போது நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பணத்தைக் கொடுத்து வாக்காளர்களைச் சரிக்கட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் பலரும் களமிறங்கிவிட்டனர்.

குறிப்பாக, கடைசி நேரத்தில் வீட்டுக்கு வீடு பணப்பட்டுவாடா செய்து வெற்றிபெறும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், புதுக்கோட்டை அருகே மறமடக்கியைச் சேர்ந்த மக்கள் செயல் இயக்க இளைஞர்கள் சிலர், `எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல' என்ற வாசகம் அடங்கிய பேனர்களை வீட்டுக்கு வீடு ஒட்டி வருகின்றனர்.

விழிப்புணர்வு பேனர் ஒட்டும் இளைஞர்கள்
விழிப்புணர்வு பேனர் ஒட்டும் இளைஞர்கள்

மறமடக்கி மக்கள் செயல் இயக்கத்தினரிடம் பேசினோம். "கடந்த 2 ஆண்டுகளாக நீர்நிலைகளைத் தூர்வாரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இப்போது உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. முன்பெல்லாம் ஒவ்வொரு ஏரியாவிலும் வசதிபடைத்த பெரிய மனிதர்கள் தேர்தலில் வேட்பாளராக நிற்பார்கள். இப்போது, அப்படி இல்லை. படித்த இளைஞர்கள் பலரும் தாமாக முன்வந்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

தேர்தல் பிரசாரத்துக்கு வரும் சில வேட்பாளர்கள், எங்களைப் போன்ற சிலர் பணம் வாங்க மாட்டோம் என்று தெரிந்தால், உடனே பெற்றோரிடம் ஆசைவார்த்தை காட்டி பணத்தைக் கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். இதனால், பெற்றோரின் கட்டாயத்துக்காக அவர்களுக்கு ஓட்டு போட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதன் பிறகு, அந்த வேட்பாளரிடம் நம்மால் கேள்வி கேட்க முடியாது. இதைப் பற்றி பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

விழிப்புணர்வு பேனர்
விழிப்புணர்வு பேனர்

இதில், ஒரு சிறிய முயற்சியாகத்தான் அனைவரின் வீடுகளிலும் பொது இடங்களிலும் 'எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல' என சிறிய அளவிலான பேனர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பேனரால், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, சிறிய அளவிலான பேனர்களைத்தான் வைத்திருக்கிறோம். இதற்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது" என்கின்றனர் உற்சாகமாக.