Published:Updated:

கும்பகோணம்: டோக்கனுடன் மளிகைக்கடையில் குவிந்த மக்கள்; அதிர்ந்த உரிமையாளர்!-அமமுக பெயரில் அட்ராசிட்டி

அ.ம.மு.க கொடுத்த டோக்கன்
அ.ம.மு.க கொடுத்த டோக்கன் ( ம.அரவிந்த் )

`போலியான டோக்கனைக் கொடுத்து நம்மை ஏமாற்றிவிட்டனர். நம்முடைய வாக்கையும் வாங்கிவிட்டனர். இதைக் கொடுத்த நிர்வாகிகளிடம் போய்ப் பேசிக்கொள்வோம்’ என அந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தேடிப் படையெடுக்கிறார்களாம்.

தமிழகத்தில், நேற்று சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று கும்பகோணம் பகுதியிலுள்ள மளிகைக்கடை ஒன்றுக்கு வந்த பொதுமக்கள் வாக்குக்காக அ.ம.மு.க சார்பில் டோக்கன் கொடுத்ததாகவும், உங்களிடம் ரூ2,000-த்துக்கான மளிகைப் பொருள்களை வாங்கிக்கொள்ளச் சொன்னதாகவும் கூறி பொருள்களைக் கேட்டனர். இதில் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர், ``இந்த டோக்கன் போலியானது; இதற்கும் எங்களுக்கும் எந்ச்த சம்பந்தமும் இல்லை’ எனக் கூறியதுடன் கடைக் கண்ணாடியில் நோட்டீஸ் ஒட்டினார். இதனால் வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மளிகைக்கடை
மளிகைக்கடை

கும்பகோணம், பெரியதெரு அருகேயுள்ள பாட்ராசாரியார் தெருவில் ஷேக் முகமது என்பவர் பிரியம் மளிகை ஏஜென்ஸி என்ற பெயரில் மளிகைக்கடை நடத்திவருகிறார். கடந்த 5-ம் தேதி இரவு தாராசுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் மளிகைக்கடைக்கு வந்து டோக்கன் ஒன்றைக் காண்பித்து மளிகைப் பொருள்களைக் கேட்டுள்ளனர். அந்த டோக்கனில் `பிரியம் மளிகை ஏஜென்ஸி’ என அதன் முகவரியுடன் ரூ.2,000 என்று மட்டும் அச்சிடப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த ஷேக் முகமது, ``எங்களுக்கும் இந்த டோக்கனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. யார் டோக்கன் கொடுத்தார்களோ அவர்களிடம் போய்க் கேளுங்கள்” எனத் திருப்பி அனுப்பிவிட்டார். இந்தநிலையில், நேற்று தேர்தல் நடைபெற்றதால் தனது மளிகைக்கடையை அவர் திறக்கவில்லை. இதையடுத்து இன்று வழக்கம்போல் காலை கடையைத் திறந்திருக்கிறார். அப்போது ஆண்கள், பெண்கள் எனப் பலர் அதே போன்று டோக்கனை எடுத்து வந்து பொருள்கள் கேட்டனர்.

நோட்டீஸ்
நோட்டீஸ்

இதனால் அதிர்ச்சியடைந்த ஷேக் முகமது உடனடியாக, கடையின் கண்ணாடியில், ``வேட்பாளர் கொடுத்த டோக்கனுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த டோக்கனுக்கு எங்கள் கடை எந்தப் பொறுப்பும் ஏற்காது' என அச்சிட்டு ஒட்டினார். இதனால் ஆர்வத்துடன் ரூ 2,000 மளிகைப் பொருள்கள் வாங்க வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இது குறித்து அந்தப் பகுதிவாசிகள் சிலரிடம் பேசினோம். ``கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர் பாலமுருகன். இவர் அதிக வாக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காகத் தீவிர பிரசாரம் செய்துவந்தார். அத்துடன் அவருடைய ஆதரவாளர்கள் மூலமாக தாரசுரம் பகுதியில் மளிகைக்கடை பெயர் மற்றும் ரூ 2,000 என அச்சடிக்கப்பட்ட டோக்கன் ஒன்றை வீடு வீடாகக் கொடுத்துவந்தனர்.

டோக்கனுடன் வாக்காளர்
டோக்கனுடன் வாக்காளர்

இதையடுத்து நேற்று தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அ.ம.மு.க-வினர் கொடுத்த டோக்கனை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட அந்தக் கடைக்கு பொதுமக்கள் சென்றுள்ளனர். இதையடுத்து கடையின் உரிமையாளர் இந்த டோக்கனுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனக் கூறியவர் வரிசையாகக் கூட்டம் வந்ததைத் தொடர்ந்து கடைக் கண்ணாடியில் பிரின்ட் அவுட் எடுத்து ஒட்டிவிட்டார். மளிகைப் பொருள் வாங்கச் சென்றவர்களெல்லாம் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

டோக்கனுடன் வாங்க வந்த பெண் ஒருவர், `இதை நம்பி எங்க வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் குக்கர் சின்னத்துல ஓட்டுப் போட்டுட்டோம்’ என புலம்பியதைப் பார்த்தபோது பரிதாபமாகவும், அதே நேரத்தில் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கமும் உண்டானது. தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க பல வகைகளில் நடவடிக்கை எடுத்தாலும், அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

மளிகைக்கடை முன்பு பெண்கள்
மளிகைக்கடை முன்பு பெண்கள்

``பெரிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் நிலைக்கு ஏற்றாற்போல் பாகுபாடின்றி வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தனர். பல்வேறு சூழ்நிலையால் பணம் கொடுக்க முடியாதவர்கள் இது போன்ற நூதன முறையைப் பின்பற்றுகின்றனர். அ.ம.மு.க-வினர் டோக்கன் கொடுத்து வாக்காளர்களைக் கவர நினைத்துள்ளனர். இது போலியா அல்லது நிஜமாகவே தருவார்களா என்பது இனிமேல் தான் தெரியும்” என்றனர் வந்திருந்த சிலர்.

கடை உரிமையாளர் ஷேக்முகமது தரப்பிலோ, ``டோக்கனுடன் பொதுமக்கள் எங்கள் கடைக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். எங்களோட அனுமதியில்லாமலேயே கடையின் பெயரை டோக்கனில் அச்சடித்துள்ளனர். எல்லோருக்கும் பதில் சொல்ல முடியலை. அதனால் பிரின்ட் அவுட் எடுத்து எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என ஒட்டி விட்டோம்” எனக் கூறிவருகின்றனர்.

டோக்கன் வாங்கிய சிலர், அமமுக-வினரிடம் அது தொடர்பாக விசாரித்த போது ’நாங்க தாராசுரம் பகுதியில் டோக்கன் கொடுத்தோம். ஆனால் மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக டோக்கன் கொடுக்கவில்லை. டோக்கன் கொடுக்கும்போது தேர்தல் முடிந்த பிறகு, வெள்ளிக்கிழமையன்று அந்த இடத்துக்கு வாங்க. ரூ 2,000 பணம் தருகிறோம் என சொல்லித்தான் கொடுத்தோம். ஆனால் அதைப் புரிந்துகொள்ளாத சிலர் மளிகைப் பொருள்கள் வாங்குவதற்குக் கொடுத்தாக நினைத்து கடைக்குச் சென்றுவிட்டனர்’ என்கிறார்களாம்.

குக்கர் சின்னம்... சாதி ஓட்டுகள்... அ.ம.மு.க என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? #TNElection2021

இதில் ஏமாந்த பொதுமக்கள், `போலியான டோக்கனை கொடுத்து நம்மை ஏமாற்றி விட்டனர். நம்முடைய வாக்கையும் வாங்கிவிட்டனர். இதைக் கொடுத்த நிர்வாகிகளிடம் போய்ப் பேசிக்கொள்வோம்’ என அந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தேடிப் படையெடுத்தனர். அ.ம.மு.க-வினர் பெயரில் டோக்கன் கொடுத்த இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருவதுடன், கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு