Published:Updated:

இளைய வாக்காளர்களை கவர வியூகம்! - அரசியல் கட்சிகளின் முயற்சி வெற்றி பெறுமா?

வாக்களித்தல்
பிரீமியம் ஸ்டோரி
வாக்களித்தல்

2026 சட்டமன்றத் தேர்தல், கணிசமாக இளைய வாக்காளர்களும், புதிய வாக்காளர்களும் வாக்களிக்கும் தேர்தலாக மாறவிருக்கிறது.

இளைய வாக்காளர்களை கவர வியூகம்! - அரசியல் கட்சிகளின் முயற்சி வெற்றி பெறுமா?

2026 சட்டமன்றத் தேர்தல், கணிசமாக இளைய வாக்காளர்களும், புதிய வாக்காளர்களும் வாக்களிக்கும் தேர்தலாக மாறவிருக்கிறது.

Published:Updated:
வாக்களித்தல்
பிரீமியம் ஸ்டோரி
வாக்களித்தல்

தமிழ்நாட்டு இளைஞர்களைக் கவர, அரசியல் கட்சிகள் பலவும் களத்தில் தீவிரமாகியிருக்கின்றன. தி.மு.க-வின் திராவிட மாடல் பயிற்சிப் பாசறையில் தொடங்கி, பா.ம.க இளைஞரணித் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், அந்தக் கட்சியின் தலைவராக முடிசூடியது வரை, ஒவ்வொரு கட்சியிலும் இளைஞர் பட்டாளத்தைத் தம் பக்கம் ஈர்ப்பதற்கு வியூகங்கள் களைகட்டுகின்றன. ‘இளைய வாக்காளர்களைக் கவர அரசியல் கட்சிகள் மும்முரமாவது ஏன்... அவர்களின் வியூகம்தான் என்ன?’ கேள்விகளுடன் அரசியல் வல்லுநர்களிடம் பேசினோம்...

2021 சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, தமிழ்நாட்டில் 6.29 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், பெண் வாக்காளர்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. இந்த மொத்த வாக்காளர்களில், 18 முதல் 29 வயது வரையிலான வாக்காளர்கள் 1.37 கோடிப் பேர் இருப்பதாக, தேர்தல் ஆணையத்தின் தரவுகள் கூறுகின்றன. அதாவது, மொத்த வாக்காளர்களில் 21.86 சதவிகிதம் பேர் 30 வயதுக்குக் கீழுள்ளவர்களாக இருக்கிறார்கள். “இத்துடன், ஆண்டுதோறும் சராசரியாக எட்டு லட்சம் புதிய வாக்காளர்கள் உருவாகிறார்கள். இவர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், 2026 சட்டமன்றத் தேர்தலின்போது, இளைய வாக்காளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடியைத் தாண்டிவிடும்” என்கிறது இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பு. இந்த வாக்காளர்கள்தான், தற்போது அரசியல் கட்சிகளின் ‘டார்கெட்’டாக இருக்கிறார்கள்.

இளைய வாக்காளர்களை கவர வியூகம்! - அரசியல் கட்சிகளின் முயற்சி வெற்றி பெறுமா?

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், “இளைஞர்களைக் கவர்வதற்கு தி.மு.க-வில் ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’கள் தொடங்கப்பட்டுள்ளன. அந்தக் கட்சியின் இளைஞரணி, மகளிரணி, தொண்டரணி, தகவல் தொழில்நுட்ப அணிகளின் சார்பாக மாவட்டம்தோறும் கூட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், பயிற்சிப் பாசறையைத் தொடங்கிவைத்த தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘ஒவ்வொரு கூட்டத்திலும் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்கிற அவசியமில்லை. நூறு பேர் கலந்துகொண்டாலும் அவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும். அவர்கள் மூலமாக நமது கருத்துகள், ஆட்சியின் சாதனைகள் பொது வாக்காளர்களிடம் செல்ல வேண்டும்’ என்றிருக்கிறார். தி.மு.க-வின் பாரம்பர்யமான வாக்காளர்கள் பலரும் 50 வயதைக் கடந்துவிட்டனர். உதயநிதி ஸ்டாலின் முதல்வர் அரியணையை எட்டுவதற்கு, இந்தப் பாரம்பர்ய வாக்காளர்கள் மட்டும் போதாது. 30 வயதுக்குள் இருக்கும் இளைய சமுதாயத்தினரும் தேவை. அவர்களை தி.மு.க பக்கம் வளைப்பதற்கான முயற்சியில்தான், ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’ கூட்டங்களை அந்தக் கட்சி நடத்த ஆரம்பித்திருக்கிறது.

இளைய வாக்காளர்களை கவர வியூகம்! - அரசியல் கட்சிகளின் முயற்சி வெற்றி பெறுமா?

இளைய வாக்காளர்களைக் கவரும் இந்த முயற்சியில், அ.தி.மு.க-விடம் சில தடுமாற்றங்கள் தெரிகின்றன. இப்போதிருக்கும் அ.தி.மு.க தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி, வைத்திலிங்கம், முனுசாமி ஆகியோருக்கு 60 வயதுக்கு மேலாகிவிட்டது. வேலுமணிக்கு 53 வயது, அந்தக் கட்சியில் இளைஞர்கள் பலர் கட்சிப் பதவிகளில் இருந்தாலும், சீனியர்களை மீறி வெளியே வெளிச்சம் பெறவில்லை. சமீபத்தில், அ.தி.மு.க ஐடி விங், அம்மா பேரவை சார்பாகக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, தி.மு.க எதிர்ப்பு அரசியலை இளைஞர்களிடம் கொண்டுசேர்ப்பதென முடிவெடுக்கப்பட்டது. ஆனால், திட்டம்தான் தீட்டப்பட்டதே தவிர, அதற்கான செயல்பாடுகளைக் காண முடியவில்லை. ஜெயலலிதா இருந்தவரையில், ஒன்றிய அளவில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறும். இப்போது மாவட்ட அளவில் மட்டுமே நடத்தப்படுவதால், மாவட்டச் செயலாளரை குஷிப்படுத்துவதற்கான முயற்சியாக மட்டுமே அந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, கலைகின்றன. பழையபடி, ஒன்றிய அளவிலான கூட்டங்களை நடத்தி, இளைஞர்கள் வசம் அந்தப் பொறுப்புகளை ஒப்படைத்தால் மட்டுமே, இளைய சமுதாயத்தினரை அ.தி.மு.க வசப்படுத்த முடியும்.

இளைய வாக்காளர்களை கவர வியூகம்! - அரசியல் கட்சிகளின் முயற்சி வெற்றி பெறுமா?

பா.ம.க-வின் இளைஞரணித் தலைவராக இருந்த அன்புமணிக்கு, அந்தக் கட்சியின் தலைவராக புரொமோஷன் கிடைத்திருக்கிறது. ஊர் ஊராக ஆய்வுக் கூட்டங்களை நடத்திவரும் அன்புமணி, வன்னியர் சமூக இளைஞர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். 90-களிலிருந்து தாங்கள் காப்பாற்றிவைத்திருக்கும் 5.5 சதவிகித வாக்குவங்கியில் ஓட்டை விழுந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது தைலாபுரம். ம.தி.மு.க-விலும் வைகோவின் வாரிசாக துரை வையாபுரிக்கும் கிரீடம் அணிவிக்கப்பட்டுள்ளது. தந்தையைப்போல நடைப்பயணத்திலும், கள அரசியலிலும் துரை வையாபுரி இன்னும் தீவிர ஆர்வம் காட்டவில்லை. இளைஞர்களைக் கவர்வதற்கான முயற்சியிலும் ம.தி.மு.க இன்னும் முழுமூச்சாக இறங்கவில்லை.

பா.ஜ.க-வில் அண்ணாமலை மாநிலப் பொறுப்புக்கு வந்த பிறகு, அவருடைய கூட்டங்களில் இளைஞர்களைப் பார்க்க முடிகிறது. ஆனால், அவர்கள் பா.ஜ.க-வின் வாக்குவங்கியாக மாறுவார்களா என்பது தேர்தல் சமயத்தில்தான் தெரியும். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எப்போதுமே இளைய வாக்காளர்களிடம் வரவேற்பு உண்டு. அவர் கூட்டங்களுக்குத் திரளும் இளைஞர்களே அதற்கு சாட்சி. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஏழு சதவிகித வாக்குகளைப் பெற்று தன் இருப்பை அவர் நிரூபித்திருக்கிறார். அதேசமயம், அந்த இளைய வாக்காளர்களைத் தொடர்ச்சியாகத் தக்கவைப்பதில் சீமானும் கோட்டைவிடுகிறார் என்பதை மறுப்பதற்கில்லை.

இளைய வாக்காளர்களை கவர வியூகம்! - அரசியல் கட்சிகளின் முயற்சி வெற்றி பெறுமா?

இளைஞர்களைக் கவரும் வியூகத்தில், கம்யூனிஸ்ட்டுகளும் காங்கிரஸும் பெருமளவில் சறுக்குகிறார்கள். மக்களை பாதிக்கும் பல்வேறு விஷயங்களை முன்வைத்து, போராட்டங்களால் இளைஞர்களை கம்யூனிஸ்ட்டுகள் ஈர்த்திருக்க வேண்டும். போலவே, காங்கிரஸ் இயக்கத்தில் இளைய தலைவர்கள் வெளிச்சம் பெறாதிருப்பது அந்தக் கட்சிக்குச் சறுக்கல்தான்” என்றனர்.

2026 சட்டமன்றத் தேர்தல், கணிசமாக இளைய வாக்காளர்களும், புதிய வாக்காளர்களும் வாக்களிக்கும் தேர்தலாக மாறவிருக்கிறது. பெற்றோர் கைகாட்டும் சின்னங்களுக்கு வாக்களிக்கும் சமுதாயம் மறைந்துவிட்டது. இப்போதிருக்கும் இளைய சமுதாயத்தினர் அரசியலின் ஒவ்வோர் அசைவையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள்; விமர்சிக்கிறார்கள். இவர்களைக் கவர்வது, தமிழக அரசியல் கட்சிகளுக்கு சவாலான காரியம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism