Published:Updated:

மினி லாரிகள்… மதுபாட்டில் பெட்டிகள்… கடலூர் உள்ளாட்சித் தேர்தலை கலக்கும் புதுச்சேரி `சரக்கு’!

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வேகமெடுத்திருக்கும் நிலையில், காவல்துறையின் தயவோடு புதுச்சேரி மதுபாட்டில்கள் லாரி லாரியாகக் கடத்தப்பட்டு வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

மதுபாட்டில்கள்
மதுபாட்டில்கள்

கடலூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கின்றது. 27-ம் தேதி கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, மங்களூர், மேல்புவனகிரி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கும், 30-ம் தேதி அண்ணா கிராமம், காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூர், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் விருத்தாசலம் ஒன்றியங்களுக்கும் நடக்க இருக்கின்றது. இந்தத் தேர்தல் சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுவதால், அதிக இடங்களைக் கைப்பற்றி தங்களது பலத்தை காட்டிவிட வேண்டுமென்று நினைக்கின்றன முன்னணி கட்சிகள்.

மதுபாட்டில்
மதுபாட்டில்

அதனால் வாக்காளர்களுக்கு பணத்துடன் மதுபாட்டில்களையும் சகட்டுமேனிக்கு சப்ளை செய்துவருகின்றன அரசியல் கட்சிகள். தமிழகத்தில் அயல்மாநில மதுவகைகளை எடுத்துச் செல்வதற்குத் தடை இருக்கும் நிலையில், பெட்டி பெட்டியாக புதுச்சேரி மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு கடலூரை நோக்கிப் பறக்கின்றன மினி லாரிகள்.

இதற்கென இருக்கும் ஏஜெண்டுகள், தேர்தல் தேதி அறிவித்தவுடனேயே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தனித்தனியே சந்தித்து டீல் பேசி முடித்துவிட்டார்கள். அப்போது மதுபாட்டில்களின் சாம்பிள்கள், விலை போன்ற தகவல்களுடன், நாளொன்றுக்கு எத்தனை பெட்டிகள் தேவைப்படும் என்பதையும் கேட்டுக்கொண்டு தற்போது இறக்குமதி செய்துகொண்டிருக்கிறார்கள்.

வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் புதுச்சேரி மதுபாட்டில்
வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் புதுச்சேரி மதுபாட்டில்

புதுச்சேரியிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கடலூருக்கு ஆல்பேட்டை, சோரியாங்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் போன்ற 3 பிரதான வழிகள் மூலம் மதுபாட்டில்கள் கடத்தப்படுகின்றன. இதில் புதுச்சேரி மாநிலமான சோரியங்குப்பத்துக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட தூரம் 500 மீட்டர் பாலம்தான். இந்தப் பகுதியில் மட்டுமே சுமார் 30 மதுபானக் கடைகள் இருக்கின்றன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வேட்பாளர் ஒருவர், ”டாஸ்மாக்குல கிடைக்கிற சரக்கு தரமா இருக்காததோடு விலையும் அதிகம். ஆனால், அதே விலைக்கு பாண்டிச்சேரியில நல்ல தரமான (!?) சரக்கு கிடைக்கும். பெட்டிக்கு மேல 500 ரூபாய் கொடுத்துட்டா ஏஜெண்டுங்க பாண்டிச்சேரி சரக்கைக் குடுத்துடுவாங்க” என்றவரிடம், சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் இருப்பார்களே என்று நாம் கேட்டதற்கு, “எந்த செக்போஸ்டாக இருந்தாலும் சரி, ஒரு வண்டிக்கு 10,000 ரூபாயும் சரக்குப்பெட்டி ஒன்றையும் ஏஜெண்டுகள் கொடுத்துடுவாங்க. ஆம்னி வேன், ஸ்வராஜ் மஸ்தா, மினி லாரினு நாளொன்றுக்கு சுமார் 15 முதல் 20 வண்டிகள் வரும். ஆனால், மினி லாரிகளுக்கு இரவில் மட்டும்தான் அனுமதி. எங்கள் இடத்துக்கே வந்து டோர் டெலிவரி செய்துவிடுவார்கள். அதேபோல பாண்டிச்சேரி போலீஸையும் ஏஜெண்ட்டுகள் கவனித்துவிடுவார்கள்” என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

நாம் விசிட் அடித்த ஊர்களில் ஆண் வாக்காளர்களுக்கு நாளொன்றுக்கு 1 குவார்ட்டர் வீதம் கடந்த 10 நாள்களாக கொடுத்துவருவது தெரியவந்தது. வயதான சில பெண் வாக்காளர்களும் இந்த டீலில் இருக்கிறார்கள். Joy VSOP என்று பெயரிடப்பட்ட 37 ரூபாய் குவார்ட்டர் பாட்டிலும், GOA XXX என்று பெயரிடப்பட்ட 43 ரூபாய் குவார்ட்டர் பாட்டிலும்தான் அதிகளவில் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த மதுபாட்டில்களைக் காட்டி புதுச்சேரி சோரியாங்குப்பத்தில் உள்ள ஒரு மாதுபானக் கடையில் விலை விசாரித்தபோது, ``எலெக்‌ஷனுக்காகவா... எல்லா ஊருக்கும் இங்க இருந்துதான் சரக்கு போகுது... விலையை பேசிக்கலாம்... எத்தனை கேஸ் வேணும்” என்கிறார் சாதாரணமாக.

புதுச்சேரியில் இருந்து தினந்தோறும் மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவது நன்றாகத் தெரிந்தும், காவல்துறையினரும் தேர்தல் பறக்கும் படையினரும் கண்டுகொள்வதில்லை. ``தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக, ஒரு வட்டாட்சியர் மற்றும் 3 காவலர்களுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அமைத்த 21 (24x7) பறக்கும் படைகள் எங்கே சென்றன” என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.